புதுச்சேரி: கரூர் கூட்ட நெரிசல் பலி சம்பவத்துக்குப் பிறகு தமிழகத்தில் சாலை வலம் மேற்கொள்ள அனுமதி மறுக்கப்பட்டு வரும் நிலையில், தவெக தலைவர் விஜயின் புதுச்சேரி சாலை வலம் திட்டமும் தடைபட்டுள்ளது. காவல்துறை சட்டம்-ஒழுங்கு பிரச்சினை காரணமாக அனுமதி மறுத்ததால், தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இன்று (டிசம்பர் 3, 2025) மீண்டும் முதல்வர் என். ரங்கசாமியைச் சந்தித்து பேசினார்.
கடந்த திங்கள் கிழமை டிஜிபி அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் அனுமதி மறுக்கப்பட்டதும், பொதுக்கூட்டத்துக்கு மட்டும் அனுமதி என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், புதுச்சேரி போலீஸ் “நகர சாலைகள் குறுகியவை, கூட்ட நெரிசல் ஏற்படலாம்” என்று திட்டவட்டமாக மறுத்துள்ளது.
கரூர் சம்பவத்துக்குப் பிறகு தவெகவின் பிரசார நடவடிக்கைகள் குறுகியுள்ளன. காஞ்சிபுரத்தில் கல்லூரி ஒன்றில் ஏற்பாடுகள் செய்து மக்கள் சந்திப்பு நடத்திய விஜய், புதுச்சேரியில் 30 கி.மீ. சாலை வலம் செல்லவும், சோனாம்பாளையம் தண்ணீர் டேங்க் அருகே பொதுக்கூட்டம் நடத்தவும் திட்டமிட்டிருந்தார்.
இதையும் படிங்க: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்!! சாட்டையை சுழற்றும் சிபிஐ.. 306 பேருக்கு 'சம்மன்'!

நவம்பர் 26-ல் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, முன்னாள் எம்எல்ஏ வி. சாமிநாதன் ஆகியோர் டிஜிபி அலுவலகத்தில் மனு சமர்ப்பித்தனர். ரங்கசாமியைச் சந்தித்தும் பதில் இல்லை. செவ்வாய் கிழமை கூட்டத்தில் போலீஸ் மறுத்ததும், “உப்பலம் ஹெலிபேட் கிரவுண்ட் போன்ற திறந்த இடத்தில் பொதுக்கூட்டம் நடத்துங்கள்” என்று பரிந்துரைத்தனர்.
புதுச்சேரி சபாநாயகர் ஆர். செல்வம், “புதுச்சேரி நகர சாலைகள் தமிழகம் போல் அகலமானவை அல்ல. விஜய் கூட்டம் நெரிசல் ஏற்படுத்தும். திறந்த இடத்தில் நடத்துங்கள்” என்று ஆதரவு தெரிவித்துள்ளார். தவெகவினர் இன்னும் பதில் சொல்லவில்லை. புஸ்ஸி ஆனந்த் இன்று ரங்கசாமியைச் சந்தித்து, “பொதுக்கூட்டம் அல்லது ரோடு ஷோ நடத்த வேறு வழி உள்ளதா?” என்பது குறித்து விவாதிக்கிறார்.
இதையும் படிங்க: கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்!! ஓய்வு நீதிபதி அஜஸ் ரஸ்தோக்கி நேரில் ஆய்வு!! சூடுபிடிக்கும் விசாரணை!