நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) கட்சியின் மூத்த நிர்வாகிகள், சென்னை பனையூர் அலுவலகத்தில் நடந்த உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின், கரூர் பிரச்சார சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய முடிவுகளை அறிவித்துள்ளனர்.
கடந்த செப்டம்பர் 27 அன்று கரூரில் நடந்த த.வெ.க பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது, 80-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தது போன்ற பெரும் வேதனைக்குப் பின், கட்சி நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தியிருந்த த.வெ.க, இப்போது மீண்டும் செயல்பாட்டிற்கு தயாராகி வருகிறது. இந்தக் கூட்டம், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக கட்சியின் உத்திகளை வகுக்கும் முதல் முக்கியமான அமர்வாக அமைந்துள்ளது.
கூட்டத்தை த.வெ.க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் தலைமை தாங்கினார். இதில் கட்சியின் மாநில இணைப்பொருளாதாரர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளில், விஜயின் பொது நிகழ்ச்சிகளை மீண்டும் தொடங்குவது, வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர சோதனை (SIR) நடத்துவது, கட்சிக்கான தேர்தல் குறியீட்டை இறுதி செய்வது ஆகியவை அடங்கும்.
இதையும் படிங்க: புஸ்ஸ் ஆன ஆனந்த்! அதிரடி காட்டும் ஆதவ்! பவர் பிளே ப்ளானுடன் களமிறங்கும் விஜய்!
இந்த பரிந்துரைகள் தலைவர் விஜயிடம் சமர்ப்பிக்கப்பட்டு இறுதி அங்கீகாரம் பெறும் என தெரிகிறது. கூட்டத்திற்குப் பின், கட்சி தலைவர்கள் நிருபர்களிடம் பேசியபோது, "கரூர் சம்பவம் நமக்கு பெரும் பாடமாக அமைந்தது. ஆனால், அது அரசியல் சதியின் விளைவு. நாங்கள் தலை நிமிர்த்தி முன்னேறுவோம்" என்று உறுதியாகத் தெரிவித்தனர்.
கரூர் சம்பவத்தைப் பற்றி விரிவாகப் பேசிய மூத்த நிர்வாகி ஒருவர், "விஜய் கரூருக்கு தாமதமாக வந்தது திட்டமிட்டதல்ல. அவரது வாகனத்தைப் பின்தொடர்ந்து 2,500-க்கும் மேற்பட்ட டூவீலர்கள் வந்தன. இதனால், ஒரு மணி நேரத்தில் கடக்க வேண்டிய இடத்தை கடக்க ஏழு மணி நேரம் ஆனது. போலீசார் இதை கட்டுப்படுத்தவில்லை. அவர்கள்தான் விஜயின் பிரசார வாகனத்தை விரைவாக அழைத்து வந்து நிறுத்தினர்" என்று குற்றச்சாட்டு தெரிவித்தார்.

போலீசார் தடியடி நடத்தியதற்கான காரணத்தை விளக்க மறுக்கிறார்கள் எனவும், உண்மைகள் ஒவ்வொன்றாக வெளிய வரும் என்றும் அவர் சொன்னார். முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி போன்றோர் "கட்டுப்பாடற்ற கூட்டம்" என்று கூறுவதை ஏற்க மறுத்து, "போலீசால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என அவர்கள் ஒப்புக்கொள்கிறார்களா?" என்று கேள்வி எழுப்பினார்.
கரூர் உயிரிழப்பை அரசியல் செய்ய வேண்டியதில்லை என த.வெ.க தரப்பு தெளிவுபடுத்தியுள்ளது. "பாதிக்கப்பட்ட 41 குடும்பங்களும் நம்முடன் இருக்கின்றனர். அவர்களுக்கு நாங்கள் உதவி செய்து வருகிறோம். ஒரு குடும்பத்தில் குடும்பப் பிரச்சினை காரணமாக அனுப்பிய நிதி திரும்ப அனுப்பப்பட்டுள்ளது. அரசு வழங்கிய இழப்பீட்டும் அந்தக் குடும்பத்தில் வேறொருவருக்கே சென்றுள்ளது" என்று கூறி, கட்சியின் மனிதாபிமான நிலைப்பாட்டை வலியுறுத்தினர்.
அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி தொடர்பாக, ஒரு மாதத்திற்கு முன் எடுக்கப்பட்ட த.வெ.க முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்பதும் உறுதிப்படுத்தப்பட்டது. கரூர் சம்பவத்திற்குப் பின், கட்சி நிர்வாகிகள் தலைமறைவாகவில்லை எனவும், நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்ததே தவிர வேறு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
"இந்த சம்பவத்திற்குப் பின் கட்சியை முடக்க வேண்டும் என அவர்கள் நினைத்தனர். சுப்ரீம் கோர்ட் உத்தரவு வாயிலாக அவர்களின் முயற்சிகள் தவிடுபொடியானது. எங்களை யாரும் தடுக்க முடியாது. எங்கள் கட்சியும், தலைவரும், இதைவிட பெரிய நெருக்கடிகளை எதிர்கொள்ளும் மனநிலைக்கு தயாராகிவிட்டோம்" என்று த.வெ.க தரப்பினர் உறுதியாகத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: அதிமுக - தவெக கூட்டணியால் திமுகவுக்கே லாபம்! உளவுத்துறை கொடுத்த ரகசிய அறிக்கை! ஸ்டாலின் உற்சாகம்!