கரூரில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை அபகரித்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்ட 17 பேர் நேரில் ஆஜராகக் கரூர் நீதிமன்றம் இன்று சம்மன் அனுப்பியுள்ளது.
கரூர் மாவட்டம் தோரணக்கல்பட்டியில் உள்ள சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தைப் போலி ஆவணங்கள் தயாரித்துப் பறித்துக்கொண்டதாக எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது சகோதரர் சேகர் உள்ளிட்டோர் மீது புகார் எழுந்தது. இந்த வழக்கை மாநிலக் குற்றப்பிரிவு சிபிசிஐடி போலீசார் விசாரித்து வந்தனர். விசாரணையின் ஒரு பகுதியாக ஏற்கனவே எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது சகோதரர் கைது செய்யப்பட்டுப் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

நீண்ட விசாரணைக்குப் பிறகு, சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கில் விரிவான குற்றப்பத்திரிகையை கரூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். குற்றப்பத்திரிகையை ஏற்றுக்கொண்ட கரூர் குற்றவியல் நீதிமன்றம், எம்.ஆர். விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர் உள்ளிட்ட வழக்கில் தொடர்புடைய 17 பேரும் வரும் மே 11-ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் எனச் சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: கரூர் வன்முறை வழக்கு! மார்ச் 15-ல் சிபிஐ முன் ஆஜராகிறார் தவெக தலைவர் விஜய்!
சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் நேர்காணல்கள் மற்றும் பிரச்சாரங்கள் தீவிரமடைந்துள்ள வேளையில், அதிமுகவின் முக்கிய நிர்வாகியான எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு எதிராக நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருப்பது அக்கட்சிக்குப் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கரூர் தொகுதியில் அவர் போட்டியிடத் தயாராகி வரும் நிலையில், இந்த வழக்குத் தேர்தல் களத்தில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அவதூறு பேச்சு..! பொன்முடி நேரில் ஆஜராக சம்மன்... நீதிமன்றம் தடாலடி உத்தரவு..!!