தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) தலைவர் விஜய் நேற்று இளைஞர்களுக்கான பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார். ஆனால் இந்த அறிவிப்புகள் அதிகாரப்பூர்வ தேர்தல் அறிக்கையாக வெளியிடப்படாததால், கட்சிக்குள் அதிருப்தி எழுந்துள்ளது.
கடந்த 7-ம் தேதி மகளிர் தின நிகழ்ச்சியில் மகளிருக்கு ரூ.2,500, தாலிக்கு தங்கம், பட்டுப் புடவை, குழந்தைகளுக்கு மோதிரம், ஆறு காஸ் சிலிண்டர் இலவசம் உள்ளிட்ட வாக்குறுதிகளை விஜய் அறிவித்திருந்தார். அதற்குப் பிறகு இதுவரை அதிகாரப்பூர்வ தேர்தல் அறிக்கை வெளியிடப்படவில்லை. இந்நிலையில், நேற்று இளைஞர்களுக்காக புதிய வாக்குறுதிகளை அவர் மேடையில் அறிவித்தார்.
இதில், போதைப்பொருளை கட்டுப்படுத்த கடுமையான சட்டம் கொண்டு வரப்படும், அனைத்து கல்வி நிறுவனங்களிலும் போதை எதிர்ப்பு மன்றங்கள் அமைக்கப்படும், பிளஸ் 2 முதல் பிஎச்.டி. வரை படிக்க 20 லட்சம் ரூபாய் வரை பிணையில்லா கடன் வழங்கப்படும், அரசு பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம், மின் வாரியம் உள்ளிட்டவற்றில் ஆள் சேர்ப்பு பணிகளை 365 நாட்களுக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தார்.
இதையும் படிங்க: அமித்ஷா கோரிக்கைகளை நிராகரித்த பழனிசாமி!! பாஜக கேட்ட தொகுதிகள் கைவிரிப்பு!
மேலும், 29 வயதுக்கு மேல் வேலை கிடைக்காத பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் 4,000 ரூபாயும், டிப்ளமா முடித்தவர்களுக்கு மாதம் 2,500 ரூபாயும் வழங்கப்படும். 5 லட்சம் பேருக்கு தொழில் பயிற்சி அளிக்க நிறுவனங்களுக்கு நிதி உதவி, தொழில் தொடங்க 25 லட்சம் ரூபாய் பிணையில்லா கடன், தொழில் நிறுவனங்களில் 75 சதவீதம் தமிழர்கள் இருந்தால் மாநில ஜிஎஸ்டியில் 2.5 சதவீதமும்,

மின்கட்டணத்தில் 5 சதவீதமும் மானியம், உள்ளாட்சிகளில் 5 லட்சம் ‘மக்கள் நண்பர்’ பணியிடங்கள் உருவாக்கி மாதம் 18,000 ரூபாய் ஊதியம், தமிழக வரலாறு மற்றும் பாரம்பரியத்தை உலக அளவில் கொண்டு செல்ல 500 படைப்பாளிகள் பள்ளிகள் நிறுவப்படும் என்றும் விஜய் அறிவித்தார்.
இந்த அறிவிப்புகள் குறித்து த.வெ.க. நிர்வாகிகள் சிலர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். “அ.தி.மு.க. பொதுச்செயலர் பழனிசாமி போல் விஜய்யும் அவ்வப்போது மேடையில் வாக்குறுதிகளை அறிவிக்கிறார். ஆனால் அ.தி.மு.க. வாக்குறுதிகளை அதிகாரப்பூர்வ அறிக்கையாக வெளியிட்டது. விஜய் இதுபோன்று வெறும் மேடை அறிவிப்புகளை மட்டும் செய்வது மக்கள் மத்தியில் நம்பகத்தன்மையை ஏற்படுத்தாது” என்று அவர்கள் வருத்தத்துடன் தெரிவித்தனர்.
கட்சியின் சில முக்கிய நிர்வாகிகள், வாக்குறுதிகளை ஒருங்கிணைத்து முழுமையான தேர்தல் அறிக்கையை விரைவில் வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். விஜய்யின் அறிவிப்புகள் இளைஞர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றாலும், கட்சிக்குள் எழுந்துள்ள இந்த அதிருப்தி த.வெ.க.வின் தேர்தல் தயாரிப்பில் புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது.
இதையும் படிங்க: பாஜக வேட்பாளர் தேர்வு!! கறார் காட்டும் அமித்ஷா!! கட்சி நிர்வாகிகளுக்கு பறந்த கண்டிஷன்!!