புதுச்சேரி மாநிலம் தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதிக்கு நடைபெறவுள்ள இடைத்தேர்தலில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் திமுக வேட்பாளராக திரு. சேது (எ) சேது செல்வம் போட்டியிடுவார் என்று கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அரசியல் ரீதியாக மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் அக்டோபர் 6, 2026 அன்று நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் அட்டவணையை இந்தியத் தேர்தல் ஆணையம் அண்மையில் வெளியிட்டுள்ள நிலையில், தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், இத்தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் களம் காணும் திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் குறித்துக் கட்சியின் தலைமைக் கழகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், வருகிற 06-10-2026 அன்று நடைபெற உள்ள புதுச்சேரி மாநிலம், தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகளின் ஏகோபித்த ஆதரவுடன் திரு. சேது (எ) சேது செல்வம் அவர்கள் கழக அதிகாரப்பூர்வ வேட்பாளராகப் போட்டியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நேபாள வெள்ளத்தில் சிக்கிய புதுச்சேரி குடும்பத்தினர்! அரசு உடனே மீட்க வேண்டும் என மகன் கண்ணீர் கோரிக்கை!
புதுச்சேரி அரசியல் களத்தில் தீவிர மக்கள் பணிகளிலும், தொழிலாளர் நலப் போராட்டங்களிலும் நீண்ட காலமாக ஈடுபட்டு வரும் சேது செல்வம் திமுக சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளது, தொண்டர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆளுங்கட்சியான என்.ஆர். காங்கிரஸ் தனது பலத்தை நிரூபிக்கத் தயாராகி வரும் நிலையில், திமுகவும் வலுவான வேட்பாளரைக் களமிறக்கியுள்ளதால் தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் களம் உச்சக்கட்ட விறுவிறுப்பை எட்டியுள்ளது.
இதையும் படிங்க: தென்மாநில முதல்வர்கள் மாநாடு: புதுவை CM ரங்கசாமி ‘ஆப்சென்ட்’..!! காரணம் என்ன??