கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதியின் முன்னாள் எம்.பி.யும், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனுமான பிரஜ்வல் ரேவண்ணா, பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மதச்சார்பற்ற ஜனதா தள (மஜத) கட்சியைச் சேர்ந்த பிரஜ்வல், 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இவர் தனது வீட்டில் பணிபுரிந்த பணிப்பெண் உட்பட பலருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 3,000 ஆபாச வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

இதையடுத்து, கர்நாடக அரசு சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து விசாரணை நடத்தியது. வழக்கு தொடர்பாக பிரஜ்வல் ஜெர்மனிக்கு தப்பிச் சென்றார். கடந்த 2024ம் ஆண்டு மே மாதம் பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு, பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். சி.ஐ.டி. விசாரணையில், 1632 பக்க குற்றப்பத்திரிகையில் 113 சாட்சிகள் பதிவு செய்யப்பட்டன. கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி அன்று, எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் பிரஜ்வலை குற்றவாளியாக அறிவித்து, ஆகஸ்ட் 2ம் தேதி அன்று ஆயுள் தண்டனையுடன் 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 7 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டது.
இதையும் படிங்க: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை.. பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!
இந்நிலையில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் கைதி எண் 15528-ஆக அடைக்கப்பட்டுள்ள பிரஜ்வல் ரேவண்ணாவிற்கு, சிறை விதிமுறைகளின்படி, அவருக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரஜ்வல் ரேவண்ணாவிற்கு வாரத்திற்கு இரண்டு முறை, தலா 10 நிமிடங்கள் தொலைபேசி மூலம் உறவினர்களுடன் பேச அனுமதி உள்ளது.
மேலும், வாரத்திற்கு ஒரு முறை குடும்பத்தினர் அல்லது நண்பர்களுடன் நேரடி சந்திப்பு அனுமதிக்கப்படுகிறது. எம்பியாக மாதம் ரூ.1 லட்சம் மேல் சம்பளம் பெற்ற அவருக்கு, சிறையில் உணவு மற்றும் தூக்கம் தவிர, ஒரு நாளைக்கு 540 ரூபாய் மதிப்பிலான உணவு வழங்கப்படுகிறது, இதில் மாதத்திற்கு இரு முறை மட்டுமே இறைச்சி உணவு அடங்கும். சிறை விதிகளின்படி, அவர் சிறையில் பணிபுரிந்தால், ஒரு நாளைக்கு 524 ரூபாய் ஊதியமாகப் பெறலாம். இருப்பினும், பிரஜ்வலுக்கு இதுவரை எந்த வேலையும் ஒதுக்கப்படவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சலுகைகள், கைதிகளின் உடல் மற்றும் மனநலத்தை கருத்தில் கொண்டு வழங்கப்படுகின்றன.
இது தொடர்பாகச் சிறை வட்டாரங்கள் கூறுகையில், ஹாசன் முன்னாள் எம்பியான பிரஜ்வல், கடந்த வெள்ளிக்கிழமை தான் விசாரணை கைதிகள் பிரிவில் இருந்து தண்டனை கைதிகள் பிரிவுக்கு மாற்றப்பட்டார். எனவே, இன்று அல்லது நாளை வரை அவர் தனது வேலையைத் தேர்வு செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு திங்கட்கிழமையும், புதிய கைதிகளுக்கு அவர்களின் பணிகள் ஒதுக்கப்படும். வேலையின் தன்மை எதுவாக இருந்தாலும், தினசரி சம்பளமாக ₹540 மட்டுமே வழங்கப்படும். கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட அனைத்து கைதிகளும் நிச்சயம் வேலை செய்தே தீர வேண்டும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இருப்பினும், பிரஜ்வல் உயர் பாதுகாப்பு அறையில் அடைக்கப்பட்டுள்ளதால், அவரது நடமாட்டம் மற்றும் செயல்பாடுகள் கடுமையாக கண்காணிக்கப்படுகின்றன. தண்டனையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு, நீதி மற்றும் சிறை சீர்திருத்தம் குறித்த விவாதங்களை மீண்டும் எழுப்பியுள்ளது.
பிரஜ்வல் சிறையில் இருக்கும் அதேநேரம் ஏற்கனவே கர்நாடகாவில் பணிபுரியும் பல ஆயிரம் கைதிகளுக்கு ஒரு வருடத்திற்கும் மேலாக ஊதியம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது.. இது தொடர்பாகச் சிறை வட்டாரங்கள் கூறுகையில் "மாநிலம் முழுவதும், 1,500க்கும் மேற்பட்ட கைதிகள் பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அவர்களுக்குச் சேர வேண்டிய சுமார் ₹3 கோடி ஊதிய பணம் நிலுவையில் உள்ளது" என்றனர். கர்நாடகாவில் மொத்தம் எட்டு மத்தியச் சிறைகள் மற்றும் பல மாவட்ட சிறைகளில் சுமார் 14,500 கைதிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை.. பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!