தமிழகத்தில் அரசுப் பள்ளி ஆய்வின் போது மாணவியிடம் நடந்து கொண்ட விதம் குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், பள்ளிகளில் கழிப்பறைகள் இல்லை, உடற்கல்வி ஆசிரியர்கள் இல்லை; இப்படிப்பட்ட மிகச் சாதாரண அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலையை அரசுப் பள்ளிகளில் விட்டுச் சென்றபோது, உங்களுடைய முன்னுரிமை எங்கே இருந்தது? என்று முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களுக்கு தற்போதைய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கீர்த்தனா அவர்கள் மிக காரசாரமான கேள்வியை எழுப்பியுள்ளார்.

அரசு பள்ளிகளில் ஆங்கிலப் புலமை மற்றும் உள்கட்டமைப்பை ஆய்வு செய்த அமைச்சர் கீர்த்தனாவின் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி விவாதங்களை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் அமைச்சரின் இந்த உத்தியை கடுமையாக விமர்சித்திருந்தனர். இந்த நிலையில், தன் மீதான விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் கீர்த்தனா அவர்கள் அரசுப் பள்ளிகளின் உண்மையான தற்போதைய நிலை மற்றும் கடந்த கால நிர்வாகக் குறைபாடுகள் குறித்த புள்ளிவிவர விபரங்களை முன்வைத்துள்ளார்.
இதையும் படிங்க: "அடுத்த கதைக்கு வாழ்த்துகள்": மோதல் வதந்திகளுக்கு அமைச்சர் கீர்த்தனா பதிலடி!

அமைச்சர் கீர்த்தனா செய்தியாளர்களிடம் பேசுகையில், அரசுப் பள்ளிகளின் கல்வித் தரத்தையும், அங்குள்ள உள்கட்டமைப்பு குறைபாடுகளையும் நேரில் கண்டறிந்து சரிசெய்வதற்காகவே நான் தொடர்ந்து கள ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறேன். ஆனால், கடந்த ஆட்சிக் காலத்தில் கல்வித்துறையை கவனித்தவர்கள், பள்ளிகளில் மாணவர்களுக்குத் தேவையான கழிப்பறை வசதிகள் கூட இல்லாமல் செய்துள்ளனர். பல பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் (PT Teachers) பணியிடங்கள் நீண்ட நாட்களாக நிரப்பப்படாமல் காலியாகவே விடப்பட்டுள்ளன. இப்படிப்பட்ட மிக முக்கியமான அடிப்படை வசதிகளைக் கூட செய்து தராமல், எங்களது சீர்திருத்த நடவடிக்கைகளை சுயவிளம்பரம் என்று விமர்சிப்பது எந்த விதத்தில் நியாயம்? என்று வாதிட்டார்.
மேலும், தனது ஆய்வின் முக்கிய நோக்கம் மாணவர்களின் தன்னம்பிக்கையை உடைப்பது அல்ல என்றும், மாறாக பள்ளிகளில் நிலவும் உண்மை நிலையைத் தெரிந்துகொண்டு, கணினி அறைகள் மற்றும் கழிப்பறைகளைத் தூய்மைப்படுத்தி மாணவர்களுக்குச் சிறந்த கற்றல் சூழலை உருவாக்குவதே தங்களது தார்மீகக் கடமை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதையும் படிங்க: விளம்பர வெறியை இத்துடன் நிறுத்தி கொள்ளுங்கள்! அமைச்சர் கீர்த்தனாவை சாடிய உதயநிதி!