திமுக கூட்டணியில் இடம் பெற பாமகவுக்கு வாய்ப்பே இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில முன்னாள் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
நாகையில் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "நாட்டில் மத்திய, மாநில அரசுகள் எப்படி முக்கியமோ, அதேபோல உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பங்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் முடிந்து 6 மாதங்கள் ஆகிவிட்டன. எனவே, உடனடியாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும்.

அதிகாரிகளைக் கொண்டு உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகித்தால், அடித்தட்டு மக்களின் உரிமைகள் சின்னாபின்னமாகிவிடும். ஊழல், முறைகேடுகள் அதிகரிக்கும். வரும் ஜூலை மாதம் முதல் தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. நாளுக்கு நாள் மக்களின் வருமானம் குறைந்து வரும் நிலையில், மின் கட்டணத்தை உயர்த்தி கொண்டே போனால், அவர்கள் மின்சாரத்தை எப்படிப் பயன்படுத்த இயலும்?

மின் வாரியம் தன்னுடைய சொந்த மின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமே தவிர, தனியாரிடம் அதிக விலை கொடுத்து வாங்கக் கூடாது. மின்சார வாரியத்தின் மொத்த வரவு செலவில் 60 சதவீதம் தனியாருக்கு செல்கிறது. இதையெல்லாம் சரி செய்ய வேண்டுமே தவிர, மின் கட்டணத்தை உயர்த்த கூடாது.
இதையும் படிங்க: பூதாகரமாக வெடிக்கும் பாலியல் சம்பவம்! தெய்வ சாயலை கட்சி பொறுப்பில் இருந்து விடுத்த திமுக

திமுக கூட்டணியில் பாமக இடம் பெறுவதற்கான வாய்ப்பே கிடையாது. ஏற்கெனவே திமுக கூட்டணி வலுவாகத்தான் இருக்கிறது. திமுக கூட்டணி வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெறும்" என்று கே. பாலகிருஷ்ணன் கூறினார்.
இதையும் படிங்க: ஆர்ப்பாட்டத்தை கையில் எடுத்த அதிமுக... அரக்கோணம் சம்பவத்தில் புதுரூட் எடுத்த எடப்பாடி பழனிசாமி!!