தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் கோடை விடுமுறை, சட்டமன்றத் தேர்தல் காரணமாக எதிர்பார்த்ததை விட நீண்ட காலம் நீடித்தது. முதலில் ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கடுமையான வெப்பத்தின் தாக்கம் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் சார்பில் வெயில் குறையும் வரை பள்ளி திறப்பை ஒத்திவைக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
தமிழகத்தின் பல மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாகப் பதிவாகியுள்ளது. சில பகுதிகளில் வெப்பக் காற்று வீசுவதால் மக்கள் கடும் அசௌகரியத்துக்கு உள்ளாகியுள்ளனர். இதனை கருத்தில் கொண்டு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன், பள்ளி திறப்பை மூன்று நாட்கள் தள்ளி ஜூன் 4-ம் தேதி (வியாழக்கிழமை) என அறிவித்தார்.
என்றாலும், தற்போது பள்ளிகள் திறக்க இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், வெப்பத்தின் தாக்கம் குறையாதது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. 14 மாவட்டங்களில் இயல்பு நிலையை விட அதிக வெப்பம் நிலவுகிறது. சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் கடந்த ஒரு வாரமாக வெயில் தொடர்ந்து கொளுத்தி வருகிறது. பகல் நேரத்தில் மட்டுமின்றி இரவு நேரங்களிலும் உஷ்ணம் மற்றும் புழுக்கம் அதிகமாக உள்ளது. வாகன ஓட்டிகள், சிறு குழந்தைகள், முதியவர்கள் மற்றும் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். வெயிலின் தாக்கத்தால் மயக்கம், உடல் நீரிழப்பு, தலைவலி உள்ளிட்ட பிரச்னைகள் அதிகரித்துள்ளன.
இதையும் படிங்க: வெயிலின் தாக்கம் குறையும் வரை பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும்! முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கோரிக்கை!

தென்மேற்கு பருவமழை விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் கூட, தற்போதைய வெப்ப அலை தொடர்கிறது. இந்தச் சூழலில் பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள், பள்ளி திறப்பை மேலும் ஒரு வாரம் ஒத்தி வைக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர். “தற்போதைய வெப்ப நிலையில் குழந்தைகள் பள்ளிக்குச் சென்றால் உடல்நலக் குறைவு ஏற்படும் அபாயம் அதிகம். அவர்களின் உடல்நலத்தை முன்னிட்டு அரசு மீண்டும் பரிசீலிக்க வேண்டும்” என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
குழந்தைகளின் கல்வி இழப்பைத் தவிர்க்க வேண்டியதும் முக்கியம் என்பதால், அரசு சமநிலையான முடிவு எடுக்க வேண்டிய நிலையில் உள்ளது. சில மாவட்டங்களில் வெப்ப அலை எச்சரிக்கை ஏற்கெனவே விடுக்கப்பட்டுள்ளது. மருத்துவ நிபுணர்களும், குழந்தைகளுக்கு அதிக நேரம் வெயிலில் இருப்பதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்துகின்றனர்.
எனவே, ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுமா அல்லது மீண்டும் தள்ளி வைக்கப்படுமா என்பது பெரும் எதிர்பார்ப்பாக மாறியுள்ளது. மக்களின் உடல்நலப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அரசு விரைவில் இறுதி முடிவை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: சுட்டெரிக்கும் வெயில்.. தள்ளிப்போகிறதா பள்ளிகள் திறப்பு..?? வானிலை மையம் சொல்வது என்ன..??