தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே எஞ்சியுள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவரும், பிரபல நடிகருமான விஜய், தேர்தல் வியூகங்களை தீட்டி வருகிறார். திமுக மற்றும் பாஜகவுடன் எந்தவித கூட்டணியும் இல்லை என அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதனால், இம்முறை தேர்தலில் திமுக, அதிமுக, பாஜக, தவெக என நான்கு முனைப் போட்டி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, விஜய் சில நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகிறார். அவரது 'ஜனநாயகன்' திரைப்படம் தொடர்பான சர்ச்சைகள், சிபிஐ விசாரணை போன்ற பிரச்சினைகள் அரசியல் பயணத்தில் சவால்களை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில், தவெக கட்சிக்கு பொதுச் சின்னம் கிடைக்குமா என்பது குறித்து கட்சித் தொண்டர்களிடையே தீவிர விவாதம் நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: த.வெ.க. தேர்தல் பிரசாரக்குழு நாளை ஆலோசனை: 234 தொகுதிகளுக்கும் விஜய் புதிய வியூகம்!
தற்போது, தவெகவிற்கு பொதுச் சின்னம் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தவெக சார்பில் பொதுச் சின்னம் கோரி விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது. இது தற்போது பரிசீலனையில் உள்ளது. அங்கீகரிக்கப்படாத கட்சியாக இருந்தாலும், தேர்தல் ஆணைய விதிகளின்படி கட்சியின் கணக்குகளை சரியாக தாக்கல் செய்துள்ளதால், சின்னம் கிடைக்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக கூறப்படுகிறது.
தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே சின்னம் ஒதுக்கீடு செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தவெக சார்பில் வழங்கப்பட்ட 10 சின்னங்களின் பட்டியலில் ஆட்டோரிக்ஷா, கிரிக்கெட் பேட், விசில் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. இவற்றில் ஏதேனும் ஒன்று ஒதுக்கப்படும் என கட்சியினர் உற்சாகத்துடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்த முன்னேற்றம் தவெகவின் தேர்தல் தயாரிப்புக்கு புது உத்வேகம் அளிக்கும் என அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தமிழக அரசியலில் விஜய்யின் நுழைவு, இளைஞர்களை ஈர்க்கும் வகையில் உள்ளது. எனினும், போட்டி கடுமையாக இருப்பதால், சின்னம் ஒதுக்கீடு கட்சியின் வெற்றி வாய்ப்பை பலப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: டெல்லியில நடக்குறது விசாரணையா? இல்ல டீலா? பாஜக-விடம் விஜய் சரணாகதி? காங்கிரஸ் கிளப்பும் புதுப் புகார்!