திமுக தலைமையிலான கூட்டணியில் மதிமுக தொடர்ந்து பயணிக்கும் என்கிற கேள்விக்கு வைகோ பதில் அளித்துள்ளார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மாநிலங்களவை உறுப்பினர் பதவி ஜூலை மாதத்தில் நிறைவடைய உள்ளது. ஜூலை மாதம் நடைபெற உள்ள மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசனுக்கு ஓரிடத்தை திமுக ஒதுக்கி உள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மதிமுகவுக்கு மக்களவைத் தேர்தலில் ஒரு தொகுதியும் மாநிலங்களவையில் ஓரிடமும் ஒதுக்கப்பட்டது. மாநிலங்களவைக்கு ஒதுக்கப்பட்ட ஓரிடத்தில்தான் வைகோ எம்பி ஆனார்.

ஆனால், 2024 மக்களவைத் தேர்தலில் மதிமுகவுக்கு ஓரிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டது. எனவே மதிமுகவுக்கு மேலும் மாநிலங்களையில் ஓரிடம் ஒதுக்க முடியுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில்
சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ராஜ்யசபா சீட் வழங்கப்படுமா? கிடைக்காவிட்டாம் திமுக கூட்டணியில் மதிமுக நீடிக்குமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த வைகோ, “ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மொழி என்ற ஆர்.எஸ்.எஸ் கோட்பாட்டை இந்தியா மீது திணிக்கும் இந்துத்துவா சக்திகளை எதிர்ப்பதற்காகவே திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம். இது கொள்கையின் அடிப்படையில் உருவான கூட்டணி ஆகும். இந்தப் பதவி கிடைக்குமா? அந்தப் பதவி கிடைக்குமா என்று கணக்குப் போட்டுக்கொண்டு நாங்கள் கூட்டணி அமைக்கவில்லை. திமுக தலைமையிலான கூட்டணியில் மதிமுக தொடர்ந்து பயணிக்கும். இந்துத்துவா சக்திகளை எதிர்த்து அண்ணா உருவாக்கிய திமுக கட்சி கொடியை காப்பதற்காக மதிமுக முன்னின்று முழு மூச்சோடு பாடுபடும்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: மோடியின் வெற்றுக் கூச்சல்... தீவிரவாதத்துக்கு எதிராக வேஷம்... திமுக அதிரடி அட்டாக்..!
இதையும் படிங்க: தமிழகத்தில் திமுகவை வீழ்த்தி தே.ஜ.கூ. ஜெயிக்கணும்.. எல்லோரும் ஓரணியில் இணையணும்.. இது நயினார் அழைப்பு!