ஓடும் ரயிலில் செல்போன் சார்ஜிங் சாக்கெட்டைப் பயன்படுத்தி மின்சார கெட்டிலில் நூடுல்ஸ் சமைத்து, அதை வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் போட்ட பெண்ணை இந்திய ரயில்வே கண்டுபிடித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. புனே சின்ச்வாட் பகுதியைச் சேர்ந்த சரிதா லிங்காயத் என்பவர்தான் அந்தப் பெண். கடந்த அக்டோபர் 16-ம் தேதி ஹரித்வார்-புனே ரயிலில் (தெஹ்ராடூன் எக்ஸ்பிரஸ்) இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
வீடியோவில் சரிதா உற்சாகமாக, “சமையலறை எப்போதும் எங்கும் இருக்கிறது! விடுமுறைக்கு எங்களுக்கு விடுமுறை இல்லை!” என்று பேசியபடி, சார்ஜிங் சாக்கெட்டில் கெட்டில் பிளக் போட்டு தண்ணீர் கொதிக்க வைத்து நூடுல்ஸ் போட்டு சமைத்தார். அதை வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டதும், நெட்டிசன்கள் கடுமையாக தாக்கினர். “ரயிலில் இது ஆபத்து! ஷார்ட் சர்க்யூட் ஆகி தீ விபத்து வரலாம்!” என்று பலரும் எச்சரித்தனர்.
இந்த வீடியோ ரயில்வேயின் காதுக்கு எட்டியதும், மும்பை ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) உடனடியாக விசாரணை தொடங்கியது. சரிதாவின் இன்ஸ்டா பக்கம், பயண தேதி, ரயில் எண், சீட் எண் வரை கண்டுபிடித்து, அவரை அழைத்து எச்சரித்தனர். ரயில்வே சட்டம் 154-ன் கீழ் “பயணிகளின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவித்தல்” என்ற குற்றத்துக்காக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதையும் படிங்க: பிரியாணி Its an Emotion! உலக அளவில் கலக்கும் ஐதராபாத் பிரியாணி! அள்ளுது சுவை!
அதோடு நிற்காமல், சரிதாவை அழைத்து, “மன்னிப்பு வீடியோ போட்டு இன்ஸ்டாகிராமில் பதிவிட வேண்டும்” என்று உத்தரவிட்டனர். அதன்படி சரிதா அழுதுகொண்டே வீடியோ பதிவு செய்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது:
“ரயிலில் கெட்டில் பயன்படுத்தக் கூடாது என்பது எனக்குத் தெரியாமல் தவறு செய்துவிட்டேன். யாருக்கும் ஆபத்து ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கமில்லை. பெட்டியில் இருந்த குழந்தைகளுக்காக நூடுல்ஸ் சமைத்தேன். விரதம் இருந்ததால் முதியவர்களுக்குத் தேநீர் தயாரித்துக் கொடுத்தோம். ஆனால் இது தவறு என்று இப்போது புரிகிறது. என்னைப் போல வேறு யாரும் இதைச் செய்ய வேண்டாம். ரயில்வேயின் பாதுகாப்புக்கு நன்றி. மீண்டும் இந்தத் தவறு செய்ய மாட்டேன்” என்றார்.
ரயில்வே அதிகாரிகள், “சார்ஜிங் சாக்கெட் மொபைல், லேப்டாப் சார்ஜ் செய்யவே. அதிக வாட்டேஜ் கொண்ட கெட்டில், ஹீட்டர் போன்றவை பயன்படுத்தினால் ஷார்ட் சர்க்யூட், தீ விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதுபோன்ற வீடியோக்கள் மற்றவர்களுக்கு தவறான முன்னுதாரணமாகி விடும்” என்று எச்சரித்துள்ளனர்.
சரிதாவின் மன்னிப்பு வீடியோவும் இப்போது வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் “தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டது நல்ல விஷயம்” என்றும், “ரயில்வே விரைந்து நடவடிக்கை எடுத்தது பாராட்டுக்குரியது” என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ஏமாற்றினால் கம்பி எண்ணனும்! 2வது திருமணம் செய்தால் 10 ஆண்டு சிறை!! அசாமில் அசத்தல்!