எலான் மாஸ்க் நிர்வகிக்கும் சமூக ஊடகத் தளமான எக்ஸ் (முன்பு ட்விட்டர்), அதன் செயற்கை நுண்ணறிவு கருவியான குரோக் மூலம் உருவாக்கப்படும் ஆபாசப் படங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது.
குறிப்பாக, உண்மையான மனிதர்களின் (நிஜ நபர்களின்) புகைப்படங்களை எடுத்து, அவர்களை ஆபாசமான ஆடைகளில் அல்லது பாலியல் ரீதியான காட்சிகளில் காட்டும் வகையில் மாற்றும் வசதிக்கு தொழில்நுட்ப ரீதியான தடை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, குரோக் இனி இத்தகைய படங்களை உருவாக்க அனுமதிக்காது.
கடந்த சில மாதங்களாகவே செயற்கை நுண்ணறிவு கருவிகள் மூலம் உருவாக்கப்படும் “டீப் ஃபேக்” ஆபாசப் படங்கள் மிக வேகமாக அதிகரித்து வருகின்றன. பெண்கள், பிரபலங்கள், சாதாரண மக்கள் உள்ளிட்ட பலரின் புகைப்படங்கள் தவறாக பயன்படுத்தப்பட்டு சமூக வலைதளங்களில் பரவியதால் உலகளவில் பெரும் எதிர்ப்பு எழுந்தது.
இதையும் படிங்க: இமானுவேல் சேகரனாருக்கு பிரம்மாண்ட சிலை..!! நாளை திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்..!!
இந்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் எக்ஸ் நிர்வாகம் இப்போது முடிவெடுத்துள்ளது. இது பல நாடுகளில் இருந்து வந்த கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையிலான முக்கிய நடவடிக்கை என கருதப்படுகிறது.

இதற்கு முன்னதாகவே பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர், செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்படும் ஆபாசப் படங்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று தீவிரமாக வலியுறுத்தி வந்தார். அவர் இதற்காக சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் உலக நாடுகளை வலியுறுத்தி வந்தார்.
தற்போது எக்ஸ் எடுத்துள்ள இந்தக் கட்டுப்பாட்டு நடவடிக்கையை பிரிட்டன் அரசு “தமது முயற்சிக்கு கிடைத்த வெற்றி” என்று வரவேற்றுள்ளது. இந்த மாற்றம் சமூக ஊடகங்களில் டீப் ஃபேக் ஆபாசப் படங்களை குறைக்கும் முக்கிய படியாக பார்க்கப்படுகிறது.
எக்ஸ் தளம் இன்னும் சில நாட்களில் இந்தக் கட்டுப்பாட்டை முழுமையாக செயல்படுத்தும் என்றும், தற்போது உள்ள படங்களை நீக்கும் பணியும் நடைபெறும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: திருப்பரங்குன்றம் கல்லத்தி மரத்தில் இரவோடு இரவாக பிறைக்கொடி அகற்றம்! தர்கா தரப்பினர் போலீசில் புகார்!