முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் கடந்த 2009ம் ஆண்டு ஜூலை 2ம் தேதி அன்று கும்பாபிஷேக விழா நடந்தது. அதன் பின் சுமார் 16 ஆண்டுகளுக்கு பிறகு, வரும் ஜூலை மாதம் 7ம் தேதி கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற உள்ளது.

சுமார் 137 அடி உயரமும், 9 நிலைகளையும் கொண்ட ராஜகோபுரம் புதுப்பிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று முடிந்தது. ராஜகோபுரத்தில் தலா 7¾ அடி உயரமுள்ள செம்பாலான 11 அடுக்குகள் கொண்ட 9 கலசங்களும் தனித்தனியாக பிரிக்கப்பட்டு பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டது. பின்னர் அவற்றில் வரகு நிரப்பப்பட்டு ராஜகோபுரத்தின் உச்சியில் மீண்டும் பொருத்தப்பட்டது.
இதையும் படிங்க: திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு: நாளை தொடங்குகிறது யாக சாலை பூஜை..! பக்தர்களுக்காக இவ்ளோ ஏற்பாடா!!

பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், வரும் ஜூலை 7ஆம் தேதி மகா கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. இதனை ஒட்டி கடந்த மே 18ம் தேதி காலை ராஜகோபுரம் முன் பகுதியில் முகூர்த்த பந்தக்கால் நடும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. மேலும் ஜூலை 7ஆம் தேதி காலை 6.15 மணி முதல் 6.50 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், குடமுழுக்கு தமிழில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 1ம் தேதி யாக சாலை பூஜை கோலாகலமாக தொடங்கியது. இதையொட்டி மூலவர், பார்வதி அம்பாள், கரியமாணிக்க விநாயகர், வள்ளி, தெய்வானை அம்பாள் ஆகிய தெய்வங்களுக்கு கோவில் உள்பிரகாரத்தில் காலை மற்றும் மாலையில் யாக பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

ராஜகோபுர அடிவாரத்தில் பிரமாண்டமாக 8 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் யாகசாலை மண்டபம் அமைக்கப்பட்டு நேற்று முன்தினம் இரவு யாகசாலை பூஜை தொடங்கி, முதல் கால பூஜை நடைபெற்றது. 2-வது நாளான நேற்று காலை 2-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. இதில் சுவாமி சண்முகருக்கு 49, ஜெயந்திநாதருக்கு 5, நடராஜருக்கு 5 மற்றும் பரிவார மூர்த்தி தெய்வங்களுக்கு 12 என மொத்தம் 71 ஓம குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாலையில் 3-ம் கால யாகசாலை பூஜை தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மூன்றாவது நாளான இன்று காலையில் நான்காம் கால பூஜை நடைபெற்றது. காலையில் கோபுர விமான கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. காலை 11 மணியளவில் திரவிய பூர்ணாஹுதி நடைபெற்று தீபாராதனை நடைபெற்றது. இந்த யாகசாலை பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் மாலையில் ஐந்தாம் கால யாக பூஜை, பூர்ணாஹுதி, திருவொளி வழிபாடு, திருநீறு திருவமுது வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
பெருமாளுக்கு நாளை மறுநாள் (சனிக்கிழமை) மாலையில் முதல்கால யாகசாலை பூஜை தொடங்கி, கும்பாபிஷேகம் வரை காலை, மாலை என 4 கால யாகசாலை பூஜைகள் நடக்கின்றன.
இதையும் படிங்க: களைகட்டப்போகும் திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு விழா.. நாளை மறுநாள் யாகசாலை பூஜை..!