ஜப்பானின் அய்ச்சி-நாகோயாவில் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 4 வரை நடைபெறவுள்ள 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கிரிக்கெட் போட்டிகளுக்கான வசதிகள் குறித்து எழுந்துள்ள கவலைகள், இந்திய கிரிக்கெட் வாரியத்தை (பிசிசிஐ) கவலையடையச் செய்துள்ளன. இருப்பினும், ‘பி’ அணியை அனுப்பும் வதந்திகளை பிசிசிஐ உறுதியாக மறுத்துள்ளது. முதன்மை அணியே பங்கேற்கும் என தெளிவுபடுத்தியுள்ளது.
நிசின் நகரில் உள்ள கொரோகி விளையாட்டுப் பூங்காவில் நடைபெறும் போட்டிகளில், வீரர்களுக்கான உடைமாற்றும் அறைகள் தற்காலிகக் கூடாரங்களில் அமைக்கப்பட்டுள்ளன. கழிவறைகள் அங்கிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ளன. தங்குமிட அறைகள் மிகச் சிறியதாக இருப்பதால் கிட் பைகளை வைக்கக்கூட இடமில்லை என புகார்கள் எழுந்துள்ளன. தங்குமிட விருப்பங்கள் நகரில் தங்கி புல்லட் ரயிலில் செல்வது, கப்பலில் தங்குவது அல்லது கூடார வசதி என மூன்று விதமாக இருப்பதாகவும் தகவல்கள்.
இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல ஆசிய கிரிக்கெட் வாரியங்கள் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏசிசி) கூட்டத்தில் இதை எழுப்பியுள்ளன. ஜப்பான் ஒலிம்பிக் அதிகாரிகளிடம் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.பிசிசிஐ, வசதிகளை நேரில் ஆய்வு செய்ய ஒரு கண்காணிப்பாளரை அனுப்பத் திட்டமிட்டுள்ளது.
இதையும் படிங்க: ரூ.70,000 பென்ஷன் பெறும் ரகானே.. அப்போ ரோகித், கோலிக்கு எவ்ளோ கிடைக்கும் தெரியுமா?
வசதிகள் திருப்திகரமாக இல்லாவிட்டால் ‘பி’ அணியை அனுப்பலாம் என்ற வதந்திகள் பரவியபோதிலும், பிசிசிஐ வட்டாரங்கள் “கவலைகள் உண்மைதான். ஆனால் ‘பி’ அணி திட்டம் ஏதும் இல்லை. திட்டமிட்டபடி நட்சத்திர வீரர்கள் அடங்கிய முதன்மை அணியே செல்லும்” என உறுதி செய்துள்ளன.

2023 சீனா ஆசிய விளையாட்டுப் போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் அனுபவம் குறைந்த வீரர்கள் பங்கேற்ற அணி தங்கம் வென்றது. இப்போது ஜஸ்பிரித் பும்ரா, ஸ்ரேயாஸ் ஐயர், திலக் வர்மா, அக்சர் படேல் உள்ளிட்ட வலுவான அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆடவர் அணி: ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், சிவம் துபே, திலக் வர்மா (துணை கேப்டன்), அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் குமார் ரெட்டி, வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னோய், ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், வைபவ் சூர்யவன்ஷி, ஜஸ்பிரித் பும்ரா.
மகளிர் பிரிவில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையில் ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா உள்ளிட்ட வலுவான அணி தங்கத்தைத் தக்கவைக்கத் தயாராக உள்ளது. மகளிர் போட்டிகள் செப்டம்பர் 17-22, ஆடவர் போட்டிகள் 24 முதல் அக்டோபர் 3 வரை நடைபெறும். வசதிகள் மேம்படுத்தப்பட்டால், இந்தியா இரு பிரிவிலும் மீண்டும் தங்கம் வெல்லும் வாய்ப்பு அதிகம்.
இதையும் படிங்க: ரூ.70,000 பென்ஷன் பெறும் ரகானே.. அப்போ ரோகித், கோலிக்கு எவ்ளோ கிடைக்கும் தெரியுமா?