அஜிங்க்யா மதுகர் ரகானே (Ajinkya Rahane), இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் துணைக் கேப்டனும், சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்களில் ஒருவருமாவார். இவர், 2007-08 ரஞ்சி கோப்பையில் மும்பை அணிக்காக முதல் தர கிரிக்கெட் அறிமுகமானார். 2011இல் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமாகி, 2013இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் அறிமுகம் செய்தார்.

ரகானே, டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது நேர்த்தியான பேட்டிங்கிற்கு பெயர் பெற்றவர், குறிப்பாக 2020-21 ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இந்தியாவை வெற்றியை நோக்கி வழிநடத்தியது மறக்க முடியாதது. அந்தத் தொடரில், விராட் கோலி இல்லாத நிலையில், கேப்டனாக இருந்து சதம் அடித்து அணியை மீட்டெடுத்தார்.
இதையும் படிங்க: மும்பை மக்களே.. எல்லாரும் பாதுகாப்பா இருங்க.. ரோகித் சர்மாவின் அன்பு வேண்டுகோள்..!!
தற்போது, ரகானே இந்திய அணியில் இடம்பெறவில்லை; 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆடிய பின் ஓரங்கட்டப்பட்டார். இருப்பினும், உள்ளூர் கிரிக்கெட்டில் மும்பை அணிக்காக தொடர்ந்து ஆடி வருகிறார். 2024 ரஞ்சி கோப்பையில் மும்பையை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், மும்பை கிரிக்கெட் அணியின் கேப்டனுமான அஜிங்க்யா ரஹானே, 2025-26 ரஞ்சி ட்ராஃபி சீசனுக்கு முன்னதாக கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 37 வயதான இவர், தனது முடிவை சமூக வலைதளமான எக்ஸ்-இல் பகிர்ந்து, புதிய தலைவரை உருவாக்குவதற்கு இது சரியான தருணம் எனக் கூறினார்.
ரஹானே தனது பதவி விலகல் முடிவு குறித்து, "மும்பை அணியை வழிநடத்தி, சாம்பியன்ஷிப்களை வெல்வது மிகப்பெரிய பெருமையாக இருந்தது. புதிய சீசனை முன்னிட்டு, ஒரு புதிய தலைவரை உருவாக்க வேண்டிய நேரம் இது. நான் ஒரு வீரராக முழு அர்ப்பணிப்புடன் தொடர்ந்து பங்களிப்பேன்," என்று தெரிவித்தார்.

ரஹானே தலைமையில் மும்பை அணி 2023-24 சீசனில் 42-வது ரஞ்சி ட்ராஃபி கோப்பையை வென்று, ஏழு ஆண்டு கால தவிப்புக்கு முடிவு கட்டியது. மேலும், 2024-25 சீசனில் இரானி கோப்பையையும், 2022-23 சையத் முஷ்டாக் அலி ட்ராஃபியையும் வென்று, உள்நாட்டு கிரிக்கெட்டில் மும்பையின் ஆதிக்கத்தை மீட்டெடுத்தார். தற்போது, ஐபிஎல் 2025-ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வழிநடத்துகிறார். மும்பை கிரிக்கெட் சங்கம் 18 வயது இளம் வீரர் ஆயுஷ் மாற்றேவை எதிர்கால கேப்டனாக உருவாக்க திட்டமிட்டுள்ளது.