சென்னை உயர் நீதிமன்றம், நடிகர் ரவி மோகனுக்கு ரூ.5.90 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்களை நான்கு வாரங்களுக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு, பாபி டச் கோல்டு யூனிவர்சல் பிரைவேட் லிமிடெட் என்ற தயாரிப்பு நிறுவனத்துடனான ஒரு சட்டப் பிரச்னையைத் தொடர்ந்து வந்துள்ளது.

இந்நிறுவனம், ரவி மோகனுக்கு ஒரு படத்தில் நடிக்க முன்பணமாக வழங்கிய ரூ.6 கோடியை திருப்பி செலுத்தக் கோரி வழக்கு தொடர்ந்தது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, ரவி மோகன், தயாரிப்பு நிறுவனம் தனது 80 நாள் படப்பிடிப்பு அட்டவணையை பயன்படுத்தவில்லை என்று கூறி, ரூ.9 கோடி இழப்பீடு கோரி எதிர் வழக்கு தாக்கல் செய்தார்.
இதையும் படிங்க: நயன்-க்கு வந்த அடுத்த தலைவலி.. ஆவணப்பட வழக்கில் மேலும் ஒரு சிக்கல்..!
நீதிபதி அப்துல் குதோஸ் முன்பு விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், தயாரிப்பு நிறுவனம் செப்டம்பர் 2024-ல் ரவி மோகனுடன் ஒப்பந்தம் செய்து முன்பணம் வழங்கியதாகவும், ஆனால் அவர் ‘பராசக்தி’ என்ற படத்தில் பணியாற்றியதால் ஒப்பந்தத்தை மீறியதாகவும் வாதிட்டது. மறுபுறம், ரவி மோகனின் வழக்கறிஞர், முன்பணத்தை திருப்பி செலுத்தத் தயாராக இருப்பதாகவும், ஆனால் தயாரிப்பு நிறுவனத்தின் தாமதத்தால் நஷ்டம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து, இரு தரப்புக்கும் இடையேயான இந்த பிரச்சனையை பேசி தீர்த்துக்கொள்ள மத்தியஸ்தரை நியமிப்பதாக தெரிவித்த நீதிபதி, 9 கோடி ரூபாய் இழப்பீடு கோரியும், வேறு படங்களை வெளியிடவும் பாபி டச் கோல்டு யுனிவர்சல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு தடை விதிக்கக்கோரி ரவி மோகன் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும், 5 கோடியே 90 லட்சம் ரூபாய்க்கான சொத்து உத்தரவாதத்தை தாக்கல் செய்ய நடிகர் ரவி மோகனுக்கு உத்தரவிட்ட நீதிபதி, இந்த உத்தரவை நிறைவேற்றியது தொடர்பாக நான்கு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தார். ரவி மோகனின் சமீபத்திய படமான ‘காதலிக்க நேரமில்லை’ வெற்றி பெற்ற நிலையில், இந்த சட்டப் பிரச்னை தமிழ் திரையுலகில் பரவலான கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: இலங்கைக்கு ஜோடியாக பறந்த ரவி மோகன் – கெனிஷா..! முக்கிய புகைப்படங்கள் வெளியானதால் அதிர்ச்சி..!