தஞ்சையை பூர்வீகமாக கொண்டு தற்போது சிங்கப்பூரில் வசித்து வரும் 76 வயது மூதாட்டியின் 800 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை, போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்ததாக, அ.தி.மு.க., நிர்வாகி செந்தில்குமார் உட்பட 12 பேர் மீது குற்றப்பிரிவு போலீசார் கடந்த டிசம்பர் மாதம் 30 ம் தேதி வழக்குப்பதிந்துள்ளனர். சிங்கப்பூரை சேர்ந்த ஷேக் சிராஜூதீன். தொழிலாதிபரான இவருக்கு தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை, சீராஜ்பூர் நகர், செங்கிப்பட்டி பகுதிகளில் சொத்துக்கள் இருந்தன. இந்நிலையில், கடந்த 2015ம் ஆண்டு ஷேக் சிராஜூதீன் இறந்தார்.
பிறகு, இவரது மனைவி 76 வயது முகமதா பேகம், என்பவரிடம், தஞ்சாவூரை சேர்ந்த ஸ்ரீவித்யாசுமதி என்பவர், தங்களின் சொத்துக்களை பராமரித்து, பாதுகாத்து தருவதாக, நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார். இதை நம்பி அவரிடம் முகமதா பேகம் பொறுப்பை ஒப்படைத்தார். பிறகு, ஸ்ரீவித்யாசுமதி தனக்கு அறிமுகமான, தஞ்சாவூரை சேர்ந்த அ.தி.மு.க., மத்திய மாவட்ட அம்மா பேரவையின் மாவட்ட தலைவரான செந்தில்குமார் உள்ளிட்ட சிலர் மூலம், முகமதா பேகத்திடம், கடந்த 2017ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை, போலியான பவர் ஆஃப் அட்டார்னி, விற்பனை பத்திரங்கள், உள்ளிட்ட ஆவணங்களை தயார் செய்து, பல்வேறு கையெழுத்து வாங்கியுள்ளனர்.
மேலும், செங்கிப்பட்டி, சிராஜ்பூர் பகுதியில் பெட்ரோல் பங்கு இடத்தினை, செந்தில்குமார் தனது உறவினரான ரேவதி, மணிகண்டன், ஆதித்யா, கவிதா, சுஜாதா ஆகியோருக்கு விற்பனை செய்யதுள்ளார். அத்துடன் சென்னை ஆழ்வார்பேட்டை மற்றும் நாஞ்சிக்கோட்டை பகுதியில், சிராஜூதீனுக்கு சொந்தமான இடத்தினையும், அவர் அன்பளிப்பாக வழங்கி விட்டதாக போலியான ஆவணங்களை தயார் செய்து அபகரித்தனர். மேலும், மூன்று வங்கிகளில் முகமதாபேகம் பெயரில், கணக்கு துவங்கி பணம் பரிவர்த்தனை செய்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, சிராஜூதீன் வீட்டினை உடைத்து, அங்கிருந்த ஆவணங்கள், நான்கு டூ வீலர்கள், இரண்டு நான்கு வாகனங்கள், பணம், நகைகளையும் திருடியுள்ளனர்.
இதையும் படிங்க: இன்றோடு 8 நாள்..! தாமதமான நீதி.. மறுக்கப்பட்ட அநீதி..! மாணவி கொலை வழக்கில் அதிமுக அதிருப்தி..!!

இது குறித்து தகவலறிந்த முகமதா பேகம், செந்தில்குமார் உள்ளிட்டோரிடம் கேட்டுள்ளார். ஆனால், முறையான பதில் அளிக்காமல், அவரை கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர். தொடர்ந்து அவர் தஞ்சாவூர் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் ஒன்பது பிரிவுகளில், செய்து விசாரித்து வந்த
நிலையில் இன்று தஞ்சை குற்றப்பிரிவு போலீசார் நாஞ்சிக்கோட்டை பகுதியில் உள்ள அ.தி.மு.க பிரமுகர் செந்திலை கைது செய்திட அவரது பங்களாவிற்கு சென்றபோது, உள்பக்கம் கதவை சாத்திக்கொண்ட அ.தி.மு.க பிரமுகர் தற்கொலை செய்துகொள்ள போவதாக தற்கொலை மிரட்டல் விடுத்து ஆடியோ பதிவு செய்து அவரது ஆதரவாளர்களுக்கு அனுப்பியதால் நாஞ்சிக்கோட்டை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அ.தி.மு.க பிரமுகரின் தற்கொலை மிரட்டலையடுத்து கைது செய்ய முடியாமல் திரும்பிய தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விரைவில் கூடுதல் போலீசாருடன் சென்று கைது செய்ய திட்டமிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: மீண்டும் அதிர்ச்சி பேச்சு.. பெண்களை இழிவுப்படுத்தி மேலும் ஒரு அதிமுக முக்கிய புள்ளி சர்ச்சை கருத்து...!