தென்னிந்திய திரையுலகின் புகழ்பெற்ற நடிகையான பி. சரோஜா தேவி (வயது 87) உடல்நலக்குறைவால் ஜூலை 14ம் தேதியான நேற்று பெங்களூருவில் உள்ள மல்லேஸ்வரம் இல்லத்தில் காலமானார். அவரது மறைவைத் தொடர்ந்து, அவரது உடல் சொந்த ஊரான ராம்நகரா மாவட்டம், தசவாரா கிராமத்தில் இன்று முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. கர்நாடக மாநில அரசு அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடத்தப்படும் என அறிவித்திருந்தது.

சரோஜா தேவியின் உடல் பங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். நடிகர்கள் விஷால், கார்த்தி, அர்ஜுன் மற்றும் முதலமைச்சர் சித்தராமையா ஆகியோர் அவருக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
இதையும் படிங்க: மை வைத்த கண்ணழகி சரோஜா தேவியின் கண்கள் தானம்.. இருவர் வாழ்வில் வீசப்போகும் ஒளி..!
‘கன்னடத்து பைங்கிளி’ மற்றும் ‘அபிநய சரஸ்வதி’ என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட சரோஜா தேவி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். 1955 ஆம் ஆண்டு தனது 17 வயதில் கன்னடத்தில் மகாகவி காளிதாஸ் எனும் படத்தின் மூலம் அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே தேசிய விருதை பெற்ற இவர், அதை தொடர்ந்து, தமிழில் 1958ம் ஆண்டு எம்ஜிஆரின் நாடோடி மன்னன் படத்தில் அறிமுகம் ஆனார். தொடர்ந்து 1959ல் இயக்குநர் ஸ்ரீதரின் கல்யாணபரிசு படத்தில் நடித்தார்.
சரோஜா தேவி கன்னடத்தை சேர்ந்தவராக இருந்தாலும் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளை கற்றுக் கொண்டு அந்த மொழி படங்களிலும் தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தினார். அவர் நடித்த பார்த்திபன் கனவு, அன்பே வா, ஆசைமுகம், ஆலையமணி , கல்யாணபரிசு, எங்கள் வீட்டுப்பிள்ளை என அனைத்து படங்களும் அவருக்கு வெற்றியை தான் கொடுத்தன.

இந்திய சினிமாவில் கொடிகட்டி பறந்த சரோஜா தேவியின் கோபால் வசனமும், லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ் பாடலும் இன்றும் மக்கள் மத்தியில் பேசப்படும் ஒன்று என்றே கூறலாம். மேலும் இவர் 1969 இல் இந்திய அரசின் உயரிய விருதான பத்ம ஸ்ரீ, 1992 இல் பத்ம பூஷன், மற்றும் வாழ்நாள் சாதனையாளர்களுக்கான விருதுகளையும் பெற்றுள்ளார். பல அரசு விருதுகளையும் பெற்றுள்ளார்.
இதைத் தொடர்ந்து அவரது சொந்த ஊரான சென்னபட்டணா தாலுகா தசவாரா கிராமத்தில் ஒக்கலிகர் சமூக முறைப்படி இறுதிச்சடங்கு நடந்தது. சரோஜாதேவி தனது தாயார் ருத்ரம்மாவின் கல்லறை அருகே தனக்கு இறுதிச் சடங்கு செய்யப்பட வேண்டும் என கூறி இருந்தார். அவரது விருப்பத்திற்கிணங்க தாயார் கல்லறை அருகில் அரசு மரியாதையுடன் சரோஜாதேவியின் உடல் துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. மேலும் அவரது கண்கள் தானம் செய்யப்பட்டன, இது அவரது பொதுசேவை மனப்பான்மையை பிரதிபலிக்கிறது.
இதையும் படிங்க: ‘செல்ல மகனே’ என்று அழைக்கும் இன்னொரு தாய்.. சரோஜா தேவி மறைவுக்கு உலக நாயகன் இரங்கல்..!