சொகுசு கார்கள் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட விவகாரத்தில், மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப அமலாக்கத்துறை (ED) முடிவு செய்துள்ளது. இந்த மோசடி வழக்கு, அரசுக்கு பெரும் வருவாய் இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

பூடானில் இருந்து வாகனங்களை குறைந்த விலையில் ஏலத்தில் வாங்கி, இமாச்சலப் பிரதேசம் வழியாக இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டு, உயர் விலையில் விற்பனை செய்யப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதில் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி, அருணாச்சலப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் போலி வாகன பதிவுகளைப் பெற்றுள்ளனர். இந்த வழக்கில், நடிகர்கள் மம்முட்டி, துல்கர் சல்மான், பிரித்விராஜ் சுகுமாரன், அமித் சக்கலக்கல் ஆகியோர் சம்பந்தப்பட்டுள்ளனர். இவர்கள் மோசடியை நடத்தியவர்கள் அல்ல என்றாலும், சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை வாங்கியதாகக் குற்றச்சாட்டு உள்ளது.
இதையும் படிங்க: “GBU” தயாரிப்பு நிறுவனத்திற்கு பறந்த நோட்டீஸ்.. இளையராஜா வைத்த செக்..!!
கொச்சியில் உள்ள நடிகர்கள் துல்கர் சல்மான், பிரித்விராஜ் ஆகியோரின் வீடுகள், அலுவலகங்கள், உறவினர்கள் இல்லங்கள் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட இடங்களில் சுங்கத்துறை அதிகாரிகள் கடந்த மாதம் 23ஆம் தேதி சோதனை நடத்தினர். அதனைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை வெளிநாட்டு பரிவர்த்தனை சட்டம் (பெமா) அடிப்படையில் விசாரணையைத் தொடங்கியது.
நேற்று, கேரளா மற்றும் தமிழ்நாட்டில் என 17 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். எர்ணாகுளம், திரிச்சூர், கோழிக்கோடு, மலப்புரம், கொட்டயம் ஆகிய இடங்களில் நடிகர்களின் வீடுகள் உள்ளிட்டவை சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் மம்முட்டி, துல்கர் சல்மான் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது. இதில் சில முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கோவையை மையமாகக் கொண்டு செயல்படும் கும்பல், இந்திய இராணுவம், அமெரிக்க தூதரகம், வெளியுறவு அமைச்சகம் போன்றவற்றின் போலி ஆவணங்களைப் பயன்படுத்தியதாகத் தெரியவந்துள்ளது. லேண்ட் க்ரூயிசர், டிபெண்டர், மசராட்டி போன்ற உயர்தர வாகனங்கள் இந்தோ-பூடான், நேபாள் வழியாகக் கடத்தப்பட்டன.

இந்நிலையில், துல்கர் சல்மான், பிரித்விராஜ், அமித் சக்கலக்கல் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரணைக்கு அழைக்க அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது. இந்த வழக்கு மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பை மீட்கும் வகையில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்காக அதிகாரிகள் ஆவணங்களை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த மோசடியின் முழு அளவு இன்னும் வெளியாகவில்லை என்றாலும், உயர்மட்ட விசாரணை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ரொம்ப அர்ஜன்ட் Foreign போகனும்... சரி அப்ப ரூ.60 கோடி கொடுங்க..! ஷில்பா ஷெட்டிக்கு செக் வைத்த அதிகாரிகள்..!