தமிழ் திரையுலகில் புதிய தலைமுறையினரை கவரும் காதல் படங்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் இன்று திரையரங்குகளில் வெளியாகி வெற்றிநடை போட்டு வருகிறது “ஆரோமலே”. அறிமுக இயக்குநர் சாரங் தியாகு இயக்கியுள்ள இந்த படம், வித்தியாசமான காதல் கோணத்தில் உருவாகி, ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இப்படத்தில் கிஷன் தாஸ், ஷிவாத்மிகா ராஜசேகர், ஹர்ஷத் கான், விடிவி கணேஷ், மற்றும் மூத்த நடிகை துளசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் கதை முழுமையாக காதலை மையமாகக் கொண்டு நகர்கிறது. கிஷன் தாஸ் நடித்திருக்கும் நாயகன், பள்ளிப் பருவத்தில் “விண்ணைத்தாண்டி வருவாயா” படத்தைப் பார்த்து காதல் பற்றிய ஒரு கனவுலகை உருவாக்கிக்கொள்கிறார். அந்த கனவு அவரின் வாழ்க்கையிலும் உருவாகுமா என்று தேடிக்கொண்டே இருப்பவர் அவர். பள்ளியிலிருந்து கல்லூரி வரை, ஒவ்வொரு பெண்ணிடமும் அவர் காதல் முயற்சி செய்வார். ஆனால் அந்த எல்லா முயற்சிகளும் தோல்வியில் முடிகின்றன. அவருக்கு உண்மையான காதல் என்பதே என்ன என்பதை புரிந்துகொள்ள முடியாமல் போகிறது. இதனிடையே, “காதல் என்றால் ஒரு பிம்பம் மட்டுமே, உண்மையில் அது இல்லவே இல்லை” என நம்பும் பெண்ணாக ஷிவாத்மிகா கதாநாயகியாக அறிமுகமாகிறார். அவர் ஒரு மேட்ரிமோனி நிறுவனத்தில் சீனியர் மேனேஜராக பணிபுரிகிறார்.
அந்த நிறுவனத்தில்தான் கிஷன் தாஸ் புதியதாக வேலைக்கு வருகிறார். அவரைப் பார்த்தவுடனே காதலிக்கத் தொடங்கும் நாயகன், சில நாட்களில் அவரின் உண்மையான மனப்பான்மையை அறிந்து அதிர்ச்சி அடைகிறார். இருவரும் இரு துருவங்களாக இருந்தாலும், அவர்கள் உறவில் ஏற்படும் சிறிய சண்டைகள், நகைச்சுவை தருணங்கள், உணர்ச்சி காட்சிகள் அனைத்தும் திரைப்படத்தின் இதயமாக அமைந்துள்ளது. இறுதியில், இந்த இரு முரண்பட்ட மனங்கள் ஒரே பாதையில் சேருமா? உண்மையான காதல் வெற்றி பெறுமா? என்பதே படத்தின் மையக்கரு. இப்படத்தை இயக்கியுள்ள சாரங் தியாகு, முன்பு கவுதம் வாசுதேவ் மேனன் அவர்களின் துணை இயக்குநராக பணியாற்றியவர். அதன் தாக்கம் திரைப்படத்தின் பல காட்சிகளில் தெளிவாக தெரிகிறது. காதல் காட்சிகளின் படப்பிடிப்பு முறை, உரையாடல்களில் காணப்படும் மென்மை, நாயகன்-நாயகியின் மனநிலை மாற்றங்கள் ஆகியவை “விண்ணைத்தாண்டி வருவாயா” பாணியை நினைவுபடுத்துகின்றன. அதனால், படம் சில இடங்களில் நம்மை உணர்வில் ஆழ்த்துகிறது.
இதையும் படிங்க: நடிப்பில் கொடிகட்டி பறக்கும் ஹர்ஷத் கான்..! சர்ப்ரைஸ் நிறைந்த 'ஆரோமலே' படம்.. வெளியானது முதல் விமர்சனம்..!

இயக்குநர் வித்தியாசமான காதல் கதை ஒன்றை சொல்லவில்லை என்றாலும், ஒரு அழகான, மென்மையான, நெஞ்சை தொட்ட காதல் அனுபவத்தை வழங்கியுள்ளார். முதல் பாதி நன்றாக ஓடுகிறது. நகைச்சுவை, காதல், உணர்ச்சி அனைத்தும் சரியான அளவில் கலந்துள்ளது. ஆனால் இரண்டாம் பாதியில் கதை கணிக்கக்கூடியதாக மாறுகிறது. அடுத்த காட்சி என்ன என்பது பார்வையாளர்களுக்கே தெரிந்து விடுகிறது. இது தான் திரைப்படத்தின் ஒரே குறை. மேலும் கிஷன் தாஸ், தனது கதாபாத்திரத்தில் இயல்பாக நடித்துள்ளார். ஒரு சாதாரண இளைஞனின் குழப்பங்களையும், காதலைப் பற்றிய தவறான புரிதல்களையும் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். அவரின் முகபாவனைகள் சில காட்சிகளில் சிறந்தவை. குறிப்பாக, தந்தையிடம் வெறுப்பு காட்டும் காட்சிகளில் அவர் சிறப்பாகப் பொருந்தியுள்ளார்.
ஷிவாத்மிகா – ரமேஷ் ராஜசேகர் அவர்களின் மகள் – தன்னுடைய குணாதிசயமுள்ள கதாபாத்திரத்தில் நம்பகத்தன்மையுடன் நடித்துள்ளார். அவர் காதலை மறுப்பதற்கான காரணங்கள், அவற்றை வெளிப்படுத்தும் விதம், கடைசி பகுதியில் மனம் உருகும் மாற்றம் ஆகிய அனைத்தும் நல்ல தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதில் ஹர்ஷத் கான், இந்தப் படத்தின் சிரிப்பு மருந்து என்றே சொல்லலாம். அவர் வரும் ஒவ்வொரு காட்சியும் ரசிக்க வைக்கும். நகைச்சுவை டைமிங் சரியான அளவில் இருக்கிறது. பல இடங்களில் கதை தளரும்போது, அவரது நகைச்சுவை படம் மீண்டும் உயிர் பெறச் செய்கிறது. விடிவி கணேஷ் நடித்த காட்சி சிறியது தான், ஆனால் திருப்புமுனை தருணத்தில் அவர் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். அதேபோல், துளசி கதாநாயகனின் தாயாக நடித்த விதம் மனதை உருக்கும். பொதுவாக காதல் திரைப்படங்களில் இசை மிக முக்கியமான பங்காற்றுகிறது. ஆனால் “ஆரோமலே” படத்தில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை சுமாரான அளவில்தான் உள்ளது.
பாடல்கள் நம்முடன் நீண்ட நேரம் தங்கவில்லை. பின்னணி இசை சில காட்சிகளில் உணர்ச்சியை தட்டி எழுப்பிய போதும், பெரும்பாலான இடங்களில் அது சாதாரணமாகவே இருந்தது. இது ஒரு சிறிய குறைபாடாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், படம் முழுவதும் சிலம்பரசன் வழங்கிய வாய்ஸ் ஓவர் ஒரு பெரும் பிளஸ் பாயிண்ட்.. அவர் குரல் திரைக்கதையோடு இயல்பாக கலந்துள்ளது. முதல் காட்சியிலிருந்து கடைசி வரை அவரின் குரல் காதல் உணர்வுகளை நம் காதில் ஊற்றுகிறது. ஒளிப்பதிவு சீராக இருந்தது, நிறங்கள் மற்றும் லைட்டிங் காட்சிகளுக்கு அழகை கூட்டின. எடிட்டிங் மிருதுவாக இருந்தது. எனவே படத்தில் பிளஸ் பாயிண்ட்கள் என பார்த்தால் கிஷன் தாஸ் மற்றும் ஷிவாத்மிகா நடிப்பு, ஹர்ஷத் கானின் நகைச்சுவை, துளசி – உணர்ச்சி காட்சிகள், எஸ்டிஆர் வாய்ஸ் ஓவர், காட்சிப்பதிவின் அழகு எடிட்டிங் மற்றும் கதை ஒழுங்கு என சொல்லலாம்.

படத்தின் மைனஸ் பாயிண்ட்கள் என்றால், இரண்டாம் பாதி சுவாரஸ்யம் குறைவு, காதல் காட்சிகள் கனெக்ட் ஆகாத நிலை, பாடல்கள் மற்றும் பின்னணி இசை நினைவில் நிற்காதவை எனலாம். ஆகவே “ஆரோமலே” ஒரு பெரிய வித்தியாசமான காதல் கதை அல்ல. ஆனால் இது ஒரு அழகான, நெஞ்சை தொடும் சின்ன காதல் அனுபவம். படம் சில இடங்களில் பழைய காதல் படங்களை நினைவுபடுத்தினாலும், அது தனது பாதையில் இருந்து விலகாமல் நன்றாக செல்கிறது. சுவாரஸ்யம் குறைவாக இருந்தாலும், நம்மை ஏமாற்றாது. மென்மையான, எளிய, உண்மையான காதல் உணர்வுகளைக் கொண்ட ஒரு திரைப்படம் என்று சொல்லலாம்.
இதையும் படிங்க: நீங்க நினைக்கிற மாறி இல்ல.. படம் வேற மாறி இருக்கும்..! 'டாக்ஸிக்' படம் குறித்து அப்டேட் கொடுத்த நடிகை ருக்மிணி வசந்த்..!