தமிழ் திரையுலகின் நாயகன், இந்திய சினிமாவின் அடையாளம், உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 75-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். பஸ் கண்டக்டராக வாழ்க்கையைத் தொடங்கி, உலக திரைப்பட வரலாற்றில் “ரஜினி என்பதே பிராண்ட்” என்ற அளவுக்குச் சென்று நிற்கும் இவரின் வாழ்க்கைப் பயணம் இன்று வரை சினிமா பாடமாகப் பயன்படுத்தப்படுகிறது.
சினிமாவைத் தாண்டியும், தமிழர் கலாச்சாரம், மனிதநேயம், ஆன்மீகம், அன்பு, அழகு, ஆட்ட விடா மனபக்குவம் ஆகிய அனைத்திற்கும் சின்னமாக இருந்து வரும் ரஜினிகாந்தின் 75-வது பிறந்தநாள் இந்திய திரையுலகில் தேசியத் திருநாள் போலவே கொண்டாடப்படுகிறது. இப்படி இருக்க ரஜினிகாந்த் 1950 டிசம்பர் 12-ம் தேதி கர்நாடகத்தில் உள்ள மராத்தா குடும்பத்தில் பிறந்தார். உண்மையான பெயர் சிவாஜி ராவ் கெய்க்வாட். தந்தை ராமஜி ராவ் காவல்துறையில் பணியாற்றினார். சிறுவயதிலேயே வேதி நாடகங்கள், டிராமாக்கள் மீது அவருக்கு உள்ள ஈர்ப்பு நண்பர்கள் வட்டத்தில் பிரபலமாக இருந்தது.
இளம் வயதில் அவர் பெங்களூரு போக்குவரத்து கழகத்தில் பஸ் கண்டக்டராக பணிபுரிந்தார். அந்தக் காலத்தில் பஸ்சில் அவர் கூவிய ஸ்டைலிஷ் ஒலி, டிக்கெட் கொடுக்கும் தனி நடையோட்டம், பயணிகளை ஈர்க்கும் குரல் என இவை அனைத்தும் பின்னாளில் திரையுலகில் அவர் கொண்டுவந்த தனித்துவ பாணிகளுக்கு விதை போட்டன. பின்னர் ரஜினிகாந்த் மதராஸ் திரைப்படக் கழகத்தில் பயின்றார். அவரின் திறமையை முதலில் கண்டறிந்தவர் இந்திய சினிமாவின் ஜாம்பவான் இயக்குநர் கே. பாலச்சந்தர். பாலச்சந்தரின் “அபூர்வ ராகங்கள்” திரைப்படம் ரஜினிகாந்தின் தமிழ் திரையுலகப் பயணத்தின் அதிரடி தொடக்கம்.
இதையும் படிங்க: மீண்டும் திரையில் ரஜினி-மீனா..! சூப்பர் ஸ்டாரின் ஹார்ட் பிரேக் திரைப்படமான “எஜமான்” படம் ரீ-ரிலீஸ்..!

அந்தப் படம் மிகப்பெரிய ஹிட்டாகவில்லை என்றாலும், “இந்த முகம்… இந்த கண்கள்… இந்த நடிப்பு… இந்த உடல் மொழி… தமிழ்ச் சினிமாவை புரட்டிப் போடும்” என்று பார்வையாளர்களை வியக்க வைத்தது. இதன் பின்னர் ரஜினிகாந்த், பாலச்சந்தர், பாரதிராஜா, ச.ப.முத்துராமன் போன்ற முன்னணி இயக்குநர்களுடன் இணைந்து தொடர்ந்து வெற்றிகளை படைத்தார். இந்த சூழலில் ரஜினிகாந்தின் வளர்ச்சி சாதாரணமானது அல்ல. சினிமாவில் முதலில் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து,
அதில் இருந்து நாயகனாக, அதில் இருந்து சின்னத்திரையில்லாத தனி உலகத்தின் “அதிகாரம்” ஆனார். அவரின் பாணி, பஞ்ச் டயலாக், புன்னகை, மிரட்டல், ஆன்மீகத்தன்மை என இவை அனைத்தும் ரசிகர்களை பல தலைமுறைகளாக இன்றும் கவர்ந்து கொண்டு வருகின்றன. திரைப்பட வரலாற்றில், ரஜினி ரசிகர் வெறி என்ற தனி அடையாளத்தை உருவாக்கிய ஒரே நடிகர். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக இந்திய சினிமாவில் ஆட்சி செய்து வருகிறார். இந்த ஆண்டு அவர் சினிமா வாழ்க்கையின் அரை நூற்றாண்டை நிறைவு செய்திருப்பது அனைத்து ரசிகர்களுக்கும் பெருமை அளித்துள்ளது. ரஜினிகாந்தின் பங்களிப்பு வெறும் வணிக சினிமாவுக்குத் தான் என்று கூற முடியாது. இந்திய அரசும் இவரின் கலையை மதித்து பல தேசிய விருதுகளால் கௌரவித்துள்ளது.
2000- வது வருஷத்தில் பத்ம பூஷண், 2016- வது வருஷத்தில் பத்ம விபூஷண், 2019- வது வருஷத்தில் தாதா சாகேப் பால்கே விருது (இந்திய சினிமாவின் உயரிய விருது) என இந்த விருதுகள் ரஜினிகாந்தின் கலைஞனாகிய உயரத்தை மட்டுமல்ல, அவர் மக்களிடையே பெற்றுள்ள அபாரமான அன்பையும் காட்டுகின்றன. லட்சக்கணக்கான ரசிகர்கள் இன்று காலை முதலே கோவில்கள், அனாதை இல்லங்கள், மருத்துவமனைகள், ரத்த தான முகாம்களில் சமூகநல பணிகளை செய்து வருகிறார்கள். திரையுலக நாயகர்கள், முன்னணி அரசியல் வாதிகள், விளையாட்டு பிரபலங்கள், தொழிலதிபர்கள் அனைவரும் ஒருமித்துக் குரலாக ரஜினிகாந்துக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த சிறப்பு நாளில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தமிழில் வெளியிட்ட ரஜினிக்கான வாழ்த்து ரசிகர்களைப் பரவசப்படுத்தியுள்ளது. அவரது பதிவில், “ரஜினிகாந்தின் 75-வது பிறந்தநாள் எனும் சிறப்பான தருணத்தில் அவருக்கு என் வாழ்த்துகள். அவரது நடிப்பாற்றல் பல தலைமுறைகளைக் கவர்ந்துள்ளது; பரவலான பாராட்டைப் பெற்றுள்ளது. அவரது திரையுலகப் படைப்புகள் பல்வேறு பாத்திரங்கள் மற்றும் பாணிகளில் பரவி, தொடர்ச்சியான முத்திரைகளைப் பதித்துள்ளன. திரைப்பட உலகில் அவர் 50 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பது இந்த ஆண்டின் குறிப்பிடத்தக்க அம்சமாகும். அவரது நீண்டகால ஆரோக்கியமான வாழ்க்கைக்காகப் பிரார்த்திக்கிறேன்” என்றார்.
இந்த பதிவின் தமிழ்ச்சுவையும், அதில் உள்ள அன்பும் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. ரஜினிகாந்த் திரை உலகில் மட்டும் அல்ல, சமூக நல பணிகளில் நேரடியாக ஈடுபடுவதிலும் பிரசித்தி பெற்றது. பல கல்வி உதவித் திட்டங்கள், பேரிடர் நிவாரண வேலைகள், மருத்துவ உதவிகள் ஆகியவற்றில் தொடர்ந்து குறைந்தது 40 ஆண்டுகளாக அமைதியாக பங்களித்து வருகிறார். ரஜினிகாந்தின் ஒரு சிறப்பு அவர் எப்போதும் விளம்பரம் செய்யாமல் உதவி செய்வார். ரஜினிகாந்தின் குடும்ப வாழ்க்கை அவர் திரையில் காட்டும் எளிமையைப் போலவே அமைதியானதும், மதிப்புமிக்கதுமானது. மனைவி லதா ரஜினிகாந்த், மகள்கள் ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா ஆகிய மூவரும் சமூகத்திலும், கலைத்துறையிலும் மதிப்பிற்குரியவர்கள்.
ரஜினிகாந்தின் வாழ்க்கையின் மையம் ஆன்மீகம். திரைப்படப் பணி எவ்வளவு பிஸியானதாக இருந்தாலும், அவர் இமயமலைக்கு செல்லும் தியானப் பயணத்தை ஒருபோதும் தவிர்ப்பதில்லை. அவரின் ஒழுக்கம் இன்றும் பல தலைமுறைகளுக்கு முன்மாதிரி. ரஜினிகாந்தின் படங்கள் வெற்றி பெறுவதற்கான முக்கிய காரணம் காண்டெண்ட் + கரிச்மா + ஸ்டைல் என்ற மூன்றின் கலவை. “பாஷா”, “படயப்பா”, “முத்து”, “அண்ணாமலை”, “சிவாஜி”, “எந்திரன்” போன்ற திரைப்படங்கள் ரஜினிகாந்தின் தனித்துவத்தை உலகம் முழுவதும் கொண்டுசென்றன. இன்று ஓடிடி காலத்திலும், ரஜினிகாந்தின் ஒரு படம் வெளியானாலே தமிழ்நாடு முழுவதும் திருவிழா தான்.

இப்படி 75 வயதிலும் ரஜினிகாந்த் இந்திய சினிமாவின் மிகச்சிறந்த ரோல் மாடல். அவர் தன்னுடைய வாழ்க்கை எடுத்துக்காட்டாக, எளிமை, நற்பண்பு, கடின உழைப்பு, ஆன்மீகம், மக்களை நேசிப்பது, உயர்ந்த மனிதநேயம் என அனைத்தையும் உலகுக்கு கற்றுத்தந்து வருகிறார்.
இதையும் படிங்க: வாழ்நாள் சாதனையாளர் விருது..! கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிகாந்த்-க்கு கௌரவம்..!