பிரபல இந்தி நடிகையாக தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியுள்ள ஊர்வசி ரவுதேலா, தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பாரம்பரிய அழகு, நடிப்புத் திறமை மற்றும் சமூக வலைதளங்களில் அவருடைய செயல்பாடுகளால் இந்திய திரையுலகில் அவர் முக்கிய இடம் பெற்றுள்ளவர். இந்த நிலையில், சமீபத்தில் லண்டனில் நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டியை நேரில் பார்வையிடுவதற்காக, ஊர்வசி ரவுதேலா சென்றிருந்தார். இந்த பயணத்திற்குப் பின்னர், அவர் எதிர்பாராத ஒரு அதிர்ச்சி சம்பவத்தை சந்திக்க வேண்டியதாகியுள்ளது.
இந்த சூழலில் ஊர்வசி ரவுதேலா, லண்டனில் உள்ள கேட்விக் விமான நிலையத்தில் இறங்கியபோது, தனது பயணச்சுமைகளை கொண்ட பெட்டியை பெக்கேஜ் பெல்டில் இருந்து எடுத்துக் கொள்வதற்காக காத்திருந்தார். ஆனால், சில நிமிடங்களுக்குள் அவருடைய முக்கியமான சூட்கேஸ் காணாமல் போனது. அந்த சூட்கேசில், அவரது சொந்த நகைகள் மற்றும் ஆடைகள் இருந்ததாகவும், அதில் மட்டும் ரூ.70 லட்சம் மதிப்புள்ள நகைகள் இருந்ததாகவும் ஊர்வசி தெரிவித்தார். நகைகள் மட்டுமல்லாமல், அவருடைய முக்கியமான தனிப்பட்ட ஆவணங்களும் மற்றும் புகைப்படப் பொருட்களும் அந்த சூட்கேஸில் இருந்ததாக கூறப்படுகிறது. சூட்கேஸ் காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்த ஊர்வசி, உடனடியாக எமிரேட்ஸ் விமான நிறுவனம் மற்றும் விமான நிலைய நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார்.

ஆனால், அதன் பின்னரும், விமான நிறுவனம் அவருக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்ற மிகுந்த ஆதங்கத்தையும் ஊர்வசி தனது சமூக ஊடகப் பதிவுகளில் வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளம் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் ஊர்வசியின் பதிவில் "பெக்கேஜ் பெல்டில் இருந்த என் சூட்கேஸ் திருடுபோனது மிகவும் வருத்தமளிக்கிறது. இது, விமான நிலையத்தின் பாதுகாப்பு தொடர்பான பல கேள்விகளை எழுப்புகிறது. நான் புகார் அளித்தபோதும், விமான நிறுவனம் எந்த வகையிலும் உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை என்பதும் என் மனதை வேதனையாக்குகிறது" என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: தேசிய விருது பெற்ற ஷாருக்கானுக்கு இயக்குநர் அட்லீ எப்படிப்பட்ட வாழ்த்தை சொல்லி இருக்கார் பாருங்க...!
அவருடைய இந்த பதிவு, சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. அவரது ரசிகர்கள், இந்த சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்ததோடு, விமான நிலையத்தில் பாதுகாப்பு துறையின் செயல்பாடுகள் தொடர்பாக விமர்சனங்களை எழுப்பி வருகின்றனர். இப்படி இருக்க லண்டன் மெட்ரோ பொலிட்டன் போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். கேட்விக் விமான நிலையத்தில் உள்ள CCTV காட்சிகள் தற்போது சேகரிக்கப்பட்டுள்ளன. மேலும், எமிரேட்ஸ் விமான நிறுவனம் தங்கள் தரப்பிலும் விசாரணை மேற்கொண்டு வருவதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில், ஊர்வசி ரவுதேலா தனது பயணங்களை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளதாகவும், மீண்டும் தனது சொத்துக்களைப் பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைப் போன்ற சூட்கேஸ், நகைகள் அல்லது பயணச் சுமைகள் காணாமல் போவதற்கான சம்பவங்கள், திரையுலக பிரபலங்களிடையே முன் காலங்களிலும் நடந்துள்ளன. விமான நிலையங்களில் பாதுகாப்பு கட்டுப்பாடுகள் இருந்தும், இவ்வாறு திருட்டுச் சம்பவங்கள் நடைபெறுவது பயணிகளின் நம்பிக்கையை தளர்க்கும் விதமாக அமைந்துள்ளது.

இந்த நிலையில் ஊர்வசி ரவுதேலா சந்தித்துள்ள இச்சம்பவம், விமான நிலையங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மறுபரிசீலனை தேவைப்படுகிறதா? என்ற கேள்வியை எழுப்புகிறது. ஒரு பிரபல நடிகையின் சூட்கேஸே இவ்வாறு திருடப்படும் நிலை ஏற்பட்டிருப்பது, பொதுமக்கள் பாதுகாப்புக்கும் பெரும் சவாலாக அமைந்துள்ளது. ஊர்வசி தனது நகைகள் மீட்கப்பட்டால் அதை தன்னுடைய பக்கங்களில் பகிர்வேன் என்றும், எதிர்கால பயணிகளுக்காக இது ஒரு விழிப்புணர்வாக அமைய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: 2வது முறை தேசிய விருது வென்ற ஜி.வி.பிரகாஷ்.. வாழ்த்து சொன்னது இந்த பாடகியா..!!