தற்போதைய டிஜிட்டல் உலகில் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, ஏஐ தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகின்றன. சாதாரண புகைப்படங்களைக்கூட தத்ரூபமான வீடியோக்களாக மாற்றும் அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்துள்ளதால், இணையத்தில் வெளியாகும் ஒவ்வொரு வீடியோவும் உண்மையானதா அல்லது ஏஐ மூலம் உருவாக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்து வருகிறது.
குறிப்பாக, சினிமா பிரபலங்களை மையமாக வைத்து உருவாக்கப்படும் ஏஐ புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு இணையத்தில் தனி வரவேற்பு கிடைத்து வருகிறது. நடிகர், நடிகைகளின் முகங்களைப் பயன்படுத்தி பல்வேறு விதமான காட்சிகள் உருவாக்கப்பட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படுகின்றன. இதில் சில வீடியோக்கள் ரசிகர்களை சிரிக்க வைக்கும் வகையில் இருந்தாலும், சில நேரங்களில் சம்பந்தப்பட்ட நடிகர், நடிகைகளுக்கு தர்மசங்கடத்தையும் ஏற்படுத்துகின்றன. குறிப்பாக, நடிகைகளின் புகைப்படங்கள் ஏஐ மூலம் தவறான முறையில் மாற்றப்பட்டு பகிரப்படுவது தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

இதற்கு பல நடிகைகளும் வெளிப்படையாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தங்களுடைய அனுமதியின்றி புகைப்படங்களை மாற்றி பயன்படுத்துவது தனிப்பட்ட உரிமையை பாதிக்கும் செயல் என்றும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: காசா.. கல்யாணமா.. SK வாக்கு பளிச்சிடிச்சி..!! திருமணத்திற்காக ரூ.450 கோடி படத்தில் இருந்து விலகிய அனிருத்.!
இப்படியான சூழலில், தற்போது நடிகர் ஆனந்த்ராஜை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள ஏஐ வீடியோக்கள் இணையத்தில் கவனம் பெற்று வருகின்றன. குறிப்பாக, ஆனந்த்ராஜ் பேசுவது போன்ற தோற்றத்தில் உருவாக்கப்பட்டுள்ள "தோத்துகிட்டே இருக்கியேடா..." என்ற வசனம் இடம்பெற்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. இந்த வீடியோக்களை ரசிகர்கள் பலரும் பகிர்ந்து வருவதுடன், தங்களது நண்பர்களுக்கும் அனுப்பி ரசித்து வருகின்றனர்.

இதனால், ஆனந்த்ராஜை மையமாகக் கொண்ட இந்த ஏஐ வீடியோக்கள் தற்போது இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளன. இந்நிலையில், இந்த வீடியோக்கள் குறித்து நடிகர் ஆனந்த்ராஜிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "அதை யார் செய்திருந்தாலும் அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். ட்ரெண்ட் ஆவது நல்லது. ஆனால் அதே நேரத்தில் கொஞ்சம் காயப்படுத்தாமல் இருந்தால் சந்தோஷம்" என்று தெரிவித்துள்ளார்.
ஆனந்த்ராஜின் இந்த பதில் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஏஐ வீடியோக்கள் மூலம் தன்னை ட்ரெண்ட் ஆக்குவதை அவர் வரவேற்றாலும், அதே நேரத்தில் மற்றவர்களின் மனதை புண்படுத்தும் வகையில் அவற்றை உருவாக்க வேண்டாம் என்பதையும் தனது பதிலில் நகைச்சுவையாகவும் அதே சமயம் நிதானமாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொதுவாக இதுபோன்ற ஏஐ வீடியோக்கள் வெளியாகும்போது சில பிரபலங்கள் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து வரும் நிலையில், ஆனந்த்ராஜ் அளித்துள்ள இந்த வித்தியாசமான பதில் இணையத்தில் பேசப்பட்டு வருகிறது. தொழில்நுட்ப வளர்ச்சியை ரசிப்பதில் தவறில்லை; ஆனால் ஒருவரின் புகழையும் தனிப்பட்ட மரியாதையையும் பாதிக்காத வகையில் பயன்படுத்த வேண்டும் என்பதே இந்த விவகாரத்தில் எழும் முக்கியமான கருத்தாக உள்ளது.
இதையும் படிங்க: நடிகை ராதிகா வீட்டில் கொடூர கொலை..! கடற்கரையில் உடலை புதைத்த அவலம்.. என்ன நடந்தது.!