கோவை நகரத்தை உலுக்கிய கொடூரச் சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரி மாணவி ஒருவருக்கு நேர்ந்த கூட்டு வன்கொடுமை சம்பவம் தமிழகமெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவி தனது நண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது மூவர் சேர்ந்து தாக்கி, கடுமையான வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததும் மக்களிடையே ஆத்திரமும், அச்சமும் பரவியுள்ளன. இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் மட்டுமின்றி திரையுலக மற்றும் தொலைக்காட்சி பிரபலங்களும் தங்கள் எதிர்ப்பை கடுமையாக பதிவு செய்து வருகின்றனர். குறிப்பாக பிக் பாஸ் புகழ் நடிகை அர்ச்சனா ரவிச்சந்திரன், தனது சமூக வலைதளப் பதிவில் மிகுந்த கோபத்துடன் எதிர்வினை தெரிவித்துள்ளார். அதன்படி அவர் எழுதிய பதிவில், “பெண்கள் பொம்மை அல்ல. பெண்கள் சுமை அல்ல. பெண்களை பாதுகாக்க முடியாத சமூகம், அதை சமூகம் என்றே சொல்லக்கூடாது. பெண்ணை இழுத்து சென்று வன்கொடுமை செய்திருக்கிறார்கள். ஆனாலும் மக்கள் கேட்கும் முதல் கேள்வி — ‘அந்த பெண் அங்கே எதற்காக போனார்?’. ஏன் வன்கொடுமை செய்தார்கள், கொலை வழக்கில் கைதானவர்கள் ஏன் வெளியில் வந்தார்கள் என யாரும் கேட்கவில்லை. பெண்கள் என்றால் வீட்டில் இருக்க வேண்டும், டீசென்ட் உடை அணிய வேண்டும், சீக்கிரம் வீட்டுக்கு வர வேண்டும், தலை குனிந்து இருக்க வேண்டும் என்று எல்லாம் விதிகள் போடுகிறோம்.
பாதுகாப்பாக இருக்க வேண்டும், ஆனால் யாரிடமிருந்து? இதே ஆண்களிடமிருந்து தான். எப்போதும் பெண் மீதே தவறு சுமத்தப்படுகிறது - அவளது நேரம், அவளது உடை, அவளது வாழ்க்கை, அவளது தேர்வு என அனைத்தும் குற்றமாக்கப்படுகிறது. ஆனால் அவனது குற்றம் மட்டும் எப்போதும் மன்னிக்கப்படுகிறது. இந்த நாட்டில் தற்போது பெண்களுக்கு அடிப்படை உரிமைகளே இல்லை. பாதுகாப்பு இல்லை, கண்ணியம் இல்லை, வாழ்வதற்கே உரிமை இல்லை. இதெல்லாம் சமூகம் என்ற பெயரில் நடப்பது வெட்கக்கேடாகும்” என்று கடுமையாகப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: விருதுகளை அள்ளிக்குவித்த "மஞ்சுமெல் பாய்ஸ்"..!! 7வது முறையாக சிறந்த நடிகராக மம்முட்டி தேர்வு..!!

அர்ச்சனாவின் இந்தப் பதிவு பலராலும் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. ரசிகர்கள், பெண்ணியம் சார்ந்த இயக்கங்கள், சமூக ஆர்வலர்கள் அனைவரும் அவரது கருத்துக்கு ஆதரவாக வலுவான பதில்களை அளித்து வருகின்றனர். பலரும் “நியாயம் கேட்பது குற்றமல்ல” எனவும், “பெண்கள் பாதுகாப்பாக வாழ்வது அரசின் பொறுப்பு” எனவும் கூறி வருகின்றனர். இதேபோல், நடிகை சுஹாசினி மணிரத்னம், கவிஞர் தீபா, பத்திரிகையாளர் மாலா உள்ளிட்ட பலரும் இந்தச் சம்பவத்தைக் கண்டித்து சமூக வலை தளங்களில் தங்கள் கருத்துகளை பகிர்ந்துள்ளனர். பலர் காவல்துறை துரிதமாக நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவையில் நடந்த இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை பெண்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்புகிறது. கல்வி பெற்று தன்னம்பிக்கையுடன் வாழ முயலும் இளம்பெண்கள் கூட இத்தகைய ஆபத்துகளுக்குள்ளாக வேண்டிய நிலை சமூகத்தில் இன்னும் மாற்றம் வரவில்லை என்பதைக் காட்டுகிறது. மக்கள் மனங்களில் எழும் கோபம், அச்சம், வேதனை ஆகியவை சமூக வலைதளங்களில் வெடித்தெழுகிறது. “பெண்களை மதிக்காத சமூகம் முன்னேறாது” என்ற குரல் பல இடங்களில் ஒலிக்கிறது. கோவை சம்பவம் நீதிக்காகக் காத்திருக்கும் நிலையில், மக்கள் ஒரே கோரிக்கையை முன்வைக்கின்றனர்.. “பெண்கள் பயமின்றி வாழும் நாடாக இந்த தேசம் மாறட்டும்” இந்தச் சம்பவம் குறித்து விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் மக்கள் கேள்வி ஒன்றே — “நீதியெப்போது?” என்பது தான்.

அர்ச்சனாவின் பதிவை ஒட்டி சமூக வலைதளங்களில் இது ஒரே பெண்ணுக்கான போராட்டம் மட்டுமல்ல, சமூக மாற்றத்துக்கான குரலாக மாறி வருகிறது. எனவே “பெண்களை காப்பாற்ற முடியாவிட்டால், நாம் மனிதர்கள் அல்ல” — என்று பலரும் பகிரும் இந்த வார்த்தைகள், கோவையின் இருளில் வெளிச்சம் தேடும் குரலாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: அடடா..பார்வையாலயே மயக்குறீங்களே..! இளசுகளை தன்பக்கம் இழுக்க நியூ பிளான்.. கவர்ச்சியில் இறங்கிய நடிகை திவ்ய பாரதி..!