தமிழ் சினிமாவில் தனது வித்தியாசமான குரலாலும், மிரட்டலான நடிப்பாலும் ரசிகர்களிடம் தனி அடையாளத்தைப் பெற்றவர் நடிகர் அர்ஜுன் தாஸ். ஆரம்பத்தில் வில்லன் மற்றும் நெகட்டிவ் கதாபாத்திரங்களில் நடித்து கவனம் பெற்ற இவர், தற்போது ஹீரோவாகவும் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார்.
அந்த வகையில் அவர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ஜான் டோ. சைக்கோ த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சிறுவன் ஒருவன் காணாமல் போவதில் தொடங்கும் இந்த ட்ரெய்லரில், காவல்துறை அதிகாரியாக அர்ஜுன் தாஸ் மேற்கொள்ளும் விசாரணையும் அதிரடி காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
தமிழ் சினிமாவில் ரகுவரனுக்கு பிறகு தனித்துவமான குரலால் ரசிகர்களை ஈர்த்த நடிகர்களில் அர்ஜுன் தாஸுக்கும் முக்கியமான இடம் உண்டு. இவரது கரகரப்பான குரலும், வசனங்களை உச்சரிக்கும் விதமும் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. குறிப்பாக, ஒரு சாதாரண வசனத்தைக்கூட தனது குரலால் மிரட்டலாக மாற்றிவிடும் திறமை இவருக்கு இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க: தங்கலான் தோல்வி.. பா. ரஞ்சித்தின் மாஸ்டர் வியூகம்..!! பொங்கலுக்கு வெளியாகும் வேட்டுவம்.. வந்தாச்சி அறிவிப்பு..!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி திரைப்படத்தின் மூலம் பிரபலமான அர்ஜுன் தாஸ், அதன்பிறகு மாஸ்டர், விக்ரம் உள்ளிட்ட படங்களில் நடித்து தனது ரசிகர் பட்டாளத்தை அதிகரித்தார். தொடர்ந்து அநீதி, போர், குட் பேட் அக்லி உள்ளிட்ட படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான தோற்றம் மற்றும் நடிப்பை வெளிப்படுத்தி வந்ததால், இவருக்கு கோலிவுட்டில் தனி அடையாளம் உருவானது.
ஆரம்பத்தில் வில்லன் கதாபாத்திரங்களில் மட்டுமே அதிகம் கவனம் செலுத்தி வந்த அர்ஜுன் தாஸ், ஒரு கட்டத்தில் ஹீரோவாகவும் நடிக்கத் தொடங்கினார். அந்த வகையில் அவர் கதாநாயகனாக நடித்த ஒன்ஸ்மோர், கான் சிட்டி உள்ளிட்ட படங்கள் ஓரளவிற்கு ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றன. மேலும், லவ் என்ற வெப் சீரிஸிலும் ஐஸ்வர்யா லட்சுமியுடன் இணைந்து நடித்திருந்தார். இதன் மூலம் ஹீரோவாகவும் தன்னால் ரசிகர்களை ஈர்க்க முடியும் என்பதை நிரூபிக்க முயற்சி செய்து வருகிறார்.
இந்த நிலையில், தற்போது மதுமிதா இயக்கத்தில் ஜான் டோ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் சந்துரு என்ற கதாபாத்திரத்தில் காவல்துறை அதிகாரியாக அர்ஜுன் தாஸ் நடித்துள்ளார். சைக்கோ த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தில் மர்மமான சம்பவங்களும், விசாரணைகளும் கதையின் முக்கிய அம்சங்களாக இருக்கும் எனத் தெரிகிறது.

தற்போது வெளியாகியுள்ள ட்ரெய்லர் ஒரு சிறுவன் திடீரென காணாமல் போவதில் இருந்து தொடங்குகிறது. அந்தச் சிறுவனைத் தேடும் விசாரணையில் இறங்கும் காவல்துறை அதிகாரியாக அர்ஜுன் தாஸ் களமிறங்குகிறார். ஆனால் விசாரணை செல்லச் செல்ல, மேலும் பல சிறுவர்கள் காணாமல் போன மர்மமான சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வருவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இதனால் ஒரு சிறுவனைத் தேடும் சாதாரண விசாரணையாகத் தொடங்கும் கதை, அதன்பிறகு பல மர்ம முடிச்சுகளைக் கொண்ட சைக்கோ த்ரில்லராக மாறும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ள ஆக்ஷன் காட்சிகள், காவல்துறை விசாரணை மற்றும் அர்ஜுன் தாஸின் நடிப்பு ஆகியவை கவனம் ஈர்த்துள்ளன.

தீபாவளிக்குப் பிறகு நவம்பர் 13-ஆம் தேதி ஜான் டோ திரைப்படம் திரைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஹீரோவாக ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ள அர்ஜுன் தாஸ், இந்தப் படத்தின் மூலம் மீண்டும் கவனம் ஈர்ப்பாரா? வித்தியாசமான சைக்கோ த்ரில்லர் கதைக்களம் ரசிகர்களைக் கவருமா? என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.
இதையும் படிங்க: சூர்யாவுடன் நடிக்க மறுத்த நஸ்ரியா..!! இவரு பெரிய ரஜினி.. கலாய்த்து தள்ளும் ப்ளூ சட்டை மாறன்..!