தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கிய இயக்குநர் அட்லீ குமார், இன்று உலகளாவிய அளவில் பேசப்படும் பெயராக மாறியுள்ளார். குறைந்த காலத்தில் மிகப்பெரிய வெற்றிகளைச் சாதித்த இவர், தற்போது இந்திய சினிமாவின் மிக உயர்ந்த வருமானம் பெற்ற இயக்குநர்களில் ஒருவராக திகழ்கிறார். இப்படி இருக்க அட்லீ தனது திரைப்படப் பயணத்தை இயக்குநர் ஷங்கரின் உதவியாளராகத் தொடங்கினார்.
“நாயகன்”, “எந்திரன்” போன்ற படங்களின் தயாரிப்பில் பங்கேற்ற அனுபவம், அவருக்கு தொழில்நுட்ப ரீதியான ஆழ்ந்த புரிதலை அளித்தது. பின்னர், 2013-ம் ஆண்டு “ராஜா ராணி” என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். பின் ஆர்யா மற்றும் நயன்தாரா நடித்த அந்த படம் வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. அங்கிருந்து தொடங்கிய அவரது வெற்றி பாதை, இன்று வரை இடையறாத வளர்ச்சியை கண்டுள்ளது. அடுத்ததாக “தெறி”, “மெர்சல்”, “பிகில்” ஆகிய மூன்று படங்களில் தளபதி விஜயுடன் இணைந்து பணியாற்றிய அட்லீ, ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றார். இவை எல்லாம் அவரை இந்திய திரையுலகின் ஹிட் மெஷினாக மாற்றியமைத்தது.

குறிப்பாக 2023-ம் ஆண்டு வெளியான “ஜவான்” படத்தின் மூலம் அட்லீ பாலிவுட் சினிமாவில் தனது முதல் படியாக கால் வைத்தார். ஷாருக் கான் நடித்த இந்த திரைப்படம், பாக்ஸ் ஆஃபிஸில் ரூ.1100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் மூலம் ஷாருக் கானுக்கு அவரது முதல் தேசிய விருதும் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் அட்லீயின் கதை சொல்லும் முறை, வணிக அம்சங்களோடு சமூகக் கருத்துக்களையும் இணைக்கும் திறமை ஆகியவை ஹிந்தி திரையுலகிலும் பெரும் பாராட்டைப் பெற்றன. இதன் விளைவாக, பாலிவுட்டில் அவருக்கு தனி மரியாதை மற்றும் இடம் கிடைத்தது. அத்துடன் அட்லீ தற்போது அல்லு அர்ஜுன் நடிப்பில் ஒரு மிகப்பெரிய படத்தை இயக்கி வருகிறார்.
இதையும் படிங்க: வீட்டிலேயே 'லோகா சாப்டர் 1' படம் பார்க்க ரெடியா மக்களே..!! ரிலீஸ் தேதி வந்தாச்சு..!!
இந்த படம் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வருகிறது. இதில் பாலிவுட் முன்னணி நடிகை தீபிகா படுகோன் கதாநாயகியாக நடிக்கிறார். பான்-இந்தியா மட்டுமின்றி பான்-வர்ல்ட் ரேஞ்சில் உருவாகும் இப்படம், தென்னிந்திய சினிமாவுக்கே புதிய பரிமாணத்தை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் இயக்குநர் அட்லீயின் பெயர் மற்றொரு காரணத்தால் செய்திகளில் இடம் பெற்றுள்ளது. தமிழ் திரையுலகில் தளபதி விஜய், ஷங்கர், ரஜினிகாந்த், தனுஷ், ஹன்சிகா, லெஜெண்ட் சரவணன் போன்றோர் ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வைத்திருப்பது அனைவரும் அறிந்ததே. இப்போது அந்த பட்டியலில் அட்லீயும் இணைந்துள்ளார்.

அவர் சமீபத்தில் ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் எனும் புதிய மாடல் காரை வாங்கியுள்ளார். இந்த கார் விலை ரூ.7.50 கோடி முதல் ரூ.9.50 கோடி வரை இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மும்பை தனியார் விமான நிலையத்தில் தனது குடும்பத்துடன் அட்லீ இந்த புதிய ரோல்ஸ் ராய்ஸில் வந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. அட்லீ இன்று வெறும் இயக்குநராக அல்ல, ஒரு பிராண்டாக மாறியுள்ளார். அவரது ஒவ்வொரு படமும் எதிர்பார்ப்பை உருவாக்கும் வகையில் இருக்கும்.
திரையுலகில் பெரும் உயரத்தில் இருப்பதுடன், தனிப்பட்ட வாழ்க்கையிலும் அவர் மனைவி பிரியா மற்றும் குழந்தையுடன் அமைதியான, மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். இன்று அட்லீ பாலிவுட் மட்டுமின்றி ஹாலிவுட் தயாரிப்பாளர்களிடமும் கவனத்தை ஈர்த்துள்ளார். சில சர்வதேச நிறுவனங்கள் அவருடன் இணைந்து பணியாற்ற ஆர்வம் காட்டி வருகின்றன. இதனால் எதிர்காலத்தில் ஒரு பன்னாட்டு அளவிலான படத்தை இயக்கும் வாய்ப்பு அவருக்கு உறுதியென கூறப்படுகிறது.

ஆகவே இயக்குநர் அட்லீயின் பயணம் தமிழ் சினிமாவிலிருந்து உலக சினிமாவுக்கு எவ்வாறு சென்றடைந்தது என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. கடின உழைப்பு, திறமை மற்றும் தன்னம்பிக்கை இருந்தால் எவ்வளவு உயரத்தையும் அடையலாம் என்பதற்கு அட்லீயின் வாழ்க்கை ஒரு சான்றாக உள்ளது. இன்று அவர் ஒரு வெற்றிகரமான இயக்குநராக மட்டுமல்ல, இந்திய சினிமாவின் பெருமையாகவும் திகழ்கிறார்.
இதையும் படிங்க: யானை தந்தம் விவகாரம்: நடிகர் மோகன்லாலின் உரிமம் ரத்து..!! கேரள ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!!