இயக்குனர் வெற்றி மாறனின் "கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி" தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் "பேட் கேர்ள்". சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகியதிலிருந்து பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. இந்தப் படம், இயக்குனராக அறிமுகமாகும் வர்ஷா பரத் என்பவரால் இயக்கப்பட்டுள்ளது. முக்கிய கதாபாத்திரத்தில் அஞ்சலி சிவராமன் நடித்துள்ளார். இவருடன் சாந்தி பிரியா, சரண்யா ரவிச்சந்திரன், ஹ்ரிது ஹரூன், டீஜே, சஷங்க் பொம்மிரெட்டிபல்லி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி வெளியிடப்படவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இப்படத்தின் டீசர் வெளியாகியதிலிருந்து அதில் காணப்படும் சில காட்சிகள் பெரும் கண்டனத்துக்கு உள்ளாகி வருகின்றன. குறிப்பாக, சிறுவர் மற்றும் சிறுமிகளை குறித்து ஆபாசமான காட்சிகள் அடங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் பேரில் சங்கரன்கோவிலில் வசிக்கும் ராம்குமார், ரமேஷ்குமார் உள்ளிட்ட மூன்று பேர், மதுரை கிளை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில், "டீசரில் சிறுவர்களைத் தாக்குவதுபோல் தோன்றும் காட்சிகள் உள்ளன. இது போக்சோ சட்டத்தின் கீழ் குற்றமாக பார்க்கப்படுகிறது. இப்படியான காட்சிகளை சமூக ஊடகங்களில் பகிர்வது, நேரடியாக பாலியல் குற்றச்சாட்டுக்கு உட்பட்டதாக மாறும் அபாயம் இருக்கிறது" என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “இந்த டீசரை சமூக ஊடகங்களில் இருந்து முழுமையாக நீக்கி, தொடர்புடைய நபர்களிடம் இருந்து விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் வழக்கில் கோரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த மதுரை கிளை உயர்நீதிமன்றம், தற்பொழுது முக்கியமான உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி, "பேட் கேர்ள்" திரைப்படத்தின் டீசரை யூடியூப் மற்றும் சமூக ஊடகங்களில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும்" என்று உத்தரவிட்டுள்ளது. மேலும், எதிர்காலத்தில் இத்தகைய ஆபாச காட்சிகள் இணையத்தில் பகிர்வதைத் தடுக்கும் வகையில் கடுமையான வழிகாட்டுதல்களும், கண்காணிப்பும் மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கிங்காங் மகளை நேரில் சந்தித்து வாழ்த்து கூறிய நடிகர் சிவகார்த்திகேயன்..! மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!
இந்த உத்தரவால், "பேட் கேர்ள்" திரைப்படம் திட்டமிட்டபடி செப்டம்பர் 5 அன்று திரையிடப்படுமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது. தற்போது, படக்குழு இந்த சட்ட சிக்கல்களைத் தீர்க்கும் வரை, படத்தின் விளம்பர நடவடிக்கைகள் தற்காலிகமாக தடைபட்டுள்ளன. மேலும், டீசரில் உள்ள காட்சிகள் குறித்த முறையான விளக்கம் மற்றும் திருத்தங்கள் செய்வதற்கான ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சர்ச்சைகள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகள் "பேட் கேர்ள்" திரைப்படத்தின் எதிர்கால வெளியீடுகளை பாதிக்கும் வாய்ப்பு காணப்படுகிறது. இது வெறும் ஒரு திரைப்பட சர்ச்சையைத் தாண்டி, சிறுவர் பாதுகாப்பு, சமூக ஊடக நெறிமுறைகள், திரை ஊடகங்களின் பொறுப்புகள் ஆகியவைகள் மீதும் அதிக கேள்விகளை எழுப்புகிறது. ஆகவே, "பேட் கேர்ள்" திரைப்படம் திட்டமிட்ட தேதியில் வெளியாகுமா என்பது தெளிவாகாத நிலையில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் படங்கள் மற்றும் டீசர்களுக்கெதிரான சட்ட நடவடிக்கைகள் அதிகரித்து வருகிறது.

பொதுவாக, எந்த ஒரு படத்திற்கும் எதிர்ப்பு கிளம்பும் போது, அது வெளியாகும் வரை பல தடைகளை சந்திக்க வேண்டி வரும். அதுபோல், "பேட் கேர்ள்" படம் சர்ச்சைகளைச் சுமந்தபடியே வெளியாகுமா, அல்லது வெளியீட்டில் மாற்றம் ஏற்படுமா என்பதை பொறுத்திருந்து பார்த்தால் தான் தெரியும்.
இதையும் படிங்க: நடிகர் துருவ் விக்ரம் நடிக்கும் 'பைசன் காளமாடன்'..! தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்..!