தமிழ் திரைப்பட இசையின் மைஸ்ட்ரோ இளையராஜா, தனது இசையில் உருவான மூன்று புகழ்பெற்ற பாடல்களை அனுமதியின்றி நடிகர் அஜித் படத்தில் பயன்படுத்தியதாக புகார் எழுப்பியுள்ளார். இந்த பாடல்களை, கடந்த ஏப்ரல் மாதம் வெளியான ‘குட் பேட் அக்லி திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளன. இதற்காக இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர, நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.
‘குட் பேட் அக்லி’ திரைப்படம், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தலைமையில் உருவானது. பிரபல தயாரிப்பு நிறுவனம் மைத்திரி மூவி மேக்கர்ஸ் இதனை தயாரித்தது. இதில் நடிகர் அஜித் குமார், திரிஷா உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். படம் வெளியான சில நாட்களிலேயே, அதில் இடம்பெற்ற பழைய ஹிட் பாடல்களான: 'இளமை இதோ இதோ', 'ஒத்த ரூபாயும் தாரேன்', 'என் ஜோடி மஞ்சக் குருவி' எனும் மூன்று பாடல்களும் இளையராஜாவின் இசையில் இருந்தவை என்பது ரசிகர்களிடையே கவனத்தை பெற்றது. இப்படி இருக்க இளையராஜா, தனது இசையில் உருவான இந்த மூன்று பாடல்களும் எந்தவித அனுமதியும் இல்லாமல் பயன்படுத்தப் பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார். பதிப்புரிமை சட்டம் முக்கியமாகக் கூறுவது, எந்த இசையமைப்பாளரின் படைப்பும் அவருடைய எழுத்துப்பூர்வ அனுமதியின்றி பயன்படுத்தப்படக்கூடாது என்பதே. இதைத் தொடர்ந்தே, இசையமைப்பாளர் இளையராஜா, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதில், அவர் கூறியிருந்தது, “இந்த மூன்று பாடல்களும் நான் இசையமைத்த, ஏற்கனவே வெளிவந்த திரைப்படங்களில் இருந்தவை. இவற்றை அனுமதியின்றி ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் பயன்படுத்தியுள்ளனர். இது எனது காப்புரிமையை மீறுகிறது. எனவே, இந்தப் பாடல்களைப் படம் மற்றும் அதன் பதிப்புகளில் இருந்து நீக்க வேண்டும். மேலும், இதனால் ஏற்பட்ட நஷ்டத்திற்கு ரூ.5 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்” என்றார். இதற்கு பதிலளித்த திரைப்பட தயாரிப்பு நிறுவனம், “நாங்கள் பாடல்களை பயன்படுத்துவதற்கான உரிமையை சட்டபூர்வமாக பெற்றோம்” எனக் கூறியது. எனினும், அந்த உரிமையளித்தவரின் பெயரையும், உரிமை பெற்ற ஆவணங்களையும் விளக்கமளிக்கவில்லை. இது வழக்கின் முக்கியப் பிரச்சனையாகும்.
இதையும் படிங்க: யாருக்கும் தெரியாம நடந்த நிச்சயதார்த்தம்..! வசமாக சிக்கிய ராஷ்மிகா மந்தனா...இப்படி மாட்டிகிட்டேயே குமாரு..!
ஆகவே இந்த வழக்கு, இன்று நீதிபதி என். செந்தில்குமார் முன்பாக விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போதான தகவல்களை ஆய்வு செய்த நீதிபதி, “இளையராஜாவின் இசையில் வெளியான மூன்று பாடல்களையும் 'குட் பேட் அக்லி' திரைப்படத்தில் பயன்படுத்த இடைக்கால தடை விதிக்கப்படுகிறது” என்று உத்தரவு பிறப்பித்தார். மேலும், தயாரிப்பு நிறுவனம் வழக்குக்கு பதிலளிக்க வேண்டும் என கூறி, விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தார். இந்த சூழலில் இது ஒரு சாதாரண காப்புரிமை வழக்காக மட்டுமல்ல. தமிழ்த் திரையுலகத்தில், இசையமைப்பாளர்களின் உரிமைகள், அவர்களின் படைப்புகளுக்கு கிடைக்க வேண்டிய மதிப்பு மற்றும் சட்ட பாதுகாப்பு குறித்த பிரமாண்டமான முன்னுதாரணமாக இது உருவாகிறது. பல ஆண்டுகளாக இசை, கவிதை, படங்கள் உள்ளிட்ட படைப்புகளில், படைப்பாளிகளின் அனுமதியின்றி மேற்கொள்ளப்படும் “ரீமிக்ஸ்”, “ரீயூஸ்” கலாச்சாரத்திற்கு இது ஒரு தடையாக இருக்க வாய்ப்பு உள்ளது.

இந்த வழக்கு எப்படி தொடரும் என்பதைக் கருத்தில் கொண்டு, திரையுலகமும், சட்டவியலாளர்களும் இது தொடர்பாக தீவிரமாக கவனம் செலுத்தி வருகின்றனர். எனவே இதேபோன்ற சட்டவழிகள் மூலம், படைப்பாளிகளின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது திரையுலகத்தின் பெரும் எதிர்பார்ப்பாகும்.
இதையும் படிங்க: 'மதராஸி' பட வெற்றியால் 'ஹாலிவுட்டில்' அடியெடுத்து வைக்கும் பிரபல நடிகர்..!