சமூக வலைத்தளங்களில் பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கை மட்டுமல்லாமல், அவர்களது குடும்ப உறுப்பினர்களையும் குறிவைத்து அவதூறு, கேலி மற்றும் தரக்குறைவான கருத்துகள் பதிவிடப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு சுந்தர் தனது மகள்களை குறிவைத்து இணையத்தில் பரவி வரும் விமர்சனங்களுக்கு எதிராக மிகக் கடுமையான பதிவொன்றை வெளியிட்டுள்ளார். குறிப்பாக, தங்களது சமூக வலைத்தள பக்கங்களுக்கு அதிக பார்வையாளர்கள், "வியூஸ்" மற்றும் "பாலோயர்கள்" பெறும் நோக்கில் பிரபலங்களின் குடும்பங்களை குறிவைத்து வீடியோக்கள் மற்றும் பதிவுகள் வெளியிடும் சில கன்டென்ட் கிரியேட்டர்களை அவர் நேரடியாகக் கண்டித்துள்ளார்.
குஷ்புவின் இந்த உணர்ச்சிகரமான பதிவு சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், அவருக்கு ஆதரவாக நடிகை ராதிகா சரத்குமாரும் கருத்து தெரிவித்துள்ளார். பிரபலங்களின் குழந்தைகளை குறிவைத்து அவமதிப்பது கருத்து சுதந்திரம் அல்ல என்றும், அது சமூகத்தின் ஒழுக்கச் சிதைவைக் காட்டுவதாகவும் ராதிகா தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். பாலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பயணத்தைத் தொடங்கிய குஷ்பு, பின்னர் தமிழ் சினிமாவில் 'வருஷம் 16' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பிறகு ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான வெற்றிப் படங்களில் நடித்த அவர், 1990-களில் தமிழ் திரையுலகின் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக உயர்ந்தார்.
பின்னர் இயக்குநர் சுந்தர் சியை காதலித்து திருமணம் செய்து கொண்ட குஷ்புவுக்கு அவந்திகா மற்றும் ஆனந்திதா என இரண்டு மகள்கள் உள்ளனர். இருவரும் திரைப்படத் துறையில் தங்களுக்கென தனித்த பாதையை உருவாக்க முயற்சித்து வருகின்றனர். மூத்த மகள் அவந்திகாவின் திருமணம் சமீபத்தில் நடைபெற்றது. மேலும், அவர் மலையாளத்தில் 'ஆரம்பம்' திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாக உள்ளதாக கூறப்படுகிறது. இளைய மகள் ஆனந்திதா, இயக்குநராகும் கனவுடன் திரைப்படத் துறையில் பல்வேறு படைப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
இதையும் படிங்க: நம்ப ஆர்யா மேல மோசடி வழக்கா.. என்ன சொல்லுறீங்க..!! தீவிர விசாரணையில் இறங்கிய ஐதராபாத் போலீசார்..!

ஆனந்திதா சிறுவயதில் உடல் பருமன் காரணமாக பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொண்டிருந்தார். அப்போது சமூக வலைத்தளங்களில் அவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து, உடல் எடையை கேலி செய்து பலரும் விமர்சித்தனர். அந்த இணைய வழித் துன்புறுத்தல்களை அவர் நீண்ட காலமாக எதிர்கொண்டதாகவும், அது தனது மனநிலையை பெரிதும் பாதித்ததாகவும் பல்வேறு சந்தர்ப்பங்களில் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை சமூக வலைத்தளமான எக்ஸ் (X) தளத்தில் பகிர்ந்த குஷ்பு, தனது மகள்களை குறிவைத்து தொடர்ந்து பதிவுகள் வெளியிடுபவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது, "நானும் என் கணவர் சுந்தர் சி-யும் எங்கள் பிள்ளைகளை நல்ல ஒழுக்கத்துடனும், சுயமரியாதையுடனும் வளர்த்துள்ளோம். அவர்கள் எங்களின் பிரபல அந்தஸ்தை ஒருபோதும் தவறாகப் பயன்படுத்தியதில்லை. நான் அமைதியாக இருக்கிறேன் என்பதற்காக, உங்களின் அழுக்கு பிடித்த, வக்கிரமான மனநிலையை நான் ஏற்றுக்கொண்டதாக அர்த்தமல்ல."
மேலும், "வெறும் இரண்டு நிமிட மலிவான விளம்பரத்திற்காகவும், வியூஸ் மற்றும் பாலோயர்களைப் பெறுவதற்காகவும் பிரபலங்களின் குடும்பத்தினரை, குறிப்பாகப் பெண்களைக் குறிவைக்கும் கன்டென்ட் கிரியேட்டர்களுக்கு எனது கடுமையான கண்டனங்கள். ஒரு தாயிடம் விளையாடாதீர்கள். தன் குட்டிகளைப் பாதுகாக்கும் காயம்பட்ட புலி நான். இனி பொறுத்துக்கொள்ள முடியாது... போதும்," என்று ஆவேசமாக பதிவிட்டுள்ளார். குஷ்புவின் இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் அவரது கருத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

பிரபலங்களின் குழந்தைகளும் தனிப்பட்ட வாழ்க்கை வாழும் மனிதர்களே தவிர, அவர்களை கேலி செய்வது எந்த வகையிலும் நியாயமல்ல என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் நடிகை ராதிகா சரத்குமாரும் குஷ்புவுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் தளப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது, "கருத்து சுதந்திரம் என்பது மற்றவர்களைத் துன்புறுத்துவதற்கான உரிமம் அல்ல. விமர்சனம் என்பது கொடூரமாக இருக்கக் கூடாது. நகைச்சுவை என்ற பெயரில் யாரையும் அவமானப்படுத்தக் கூடாது. ஒரு பிரபலமான பெண்ணின் மகள்களைக் கேலி செய்வது நகைச்சுவை அல்ல; அது அப்பட்டமான கோழைத்தனம். ஒருவருடைய தோற்றம் என்பது சாதனையோ அல்லது தோல்வியோ அல்ல; அவர்களின் குணமே முக்கியம். ஒரு பெண்ணை விமர்சிக்கலாம். ஆனால், அவளுடைய குழந்தைகளை கேலி செய்வது நாகரிகம் அல்ல. அது ஒரு சமூகத்தின் ஒழுக்கத் தோல்வி. நான் குஷ்பு மற்றும் அவரது மகள்களுக்கு ஆதரவாக நிற்கிறேன்," என்று பதிவிட்டுள்ளார்.
ராதிகாவின் இந்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்த குஷ்பு, தனது உணர்வுகளை புரிந்துகொண்டு ஆதரவாக குரல் கொடுத்ததற்காக மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார். இதற்கிடையில், சில வாரங்களுக்கு முன்பு ஆனந்திதாவும் அளித்திருந்த நேர்காணலில், சிறுவயது முதலே இணைய வழித் துன்புறுத்தல்களை எதிர்கொண்டதாக வெளிப்படையாகக் கூறியிருந்தார். குறிப்பாக, தனது தோற்றத்தை வைத்து தொடர்ந்து கேலி செய்ததாகவும், சமீப காலங்களில் தன்னை திருநங்கையுடன் ஒப்பிட்டு சமூக வலைத்தளங்களில் பதிவுகள் வெளியிடப்படுவதாகவும் அவர் வேதனையுடன் தெரிவித்திருந்தார்.
அந்த கருத்துகள் தன்னை மட்டுமல்ல, திருநங்கைகள் சமூகத்தையும் அவமதிக்கும் வகையில் இருப்பதாகவும், இத்தகைய பதிவுகள் சமூகத்தில் இன்னும் நிலவி வரும் அறியாமை மற்றும் பாலினப் பாரபட்ச மனநிலையை வெளிப்படுத்துவதாகவும் ஆனந்திதா கூறியிருந்தார். 23 வயதான ஆனந்திதா சுந்தர், திரைப்படத் துறையில் படைப்பாற்றல் சார்ந்த பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன் 2', 'தக் லைப்' உள்ளிட்ட படங்களில் பணியாற்றியுள்ளார். அதேபோல், சமீபத்தில் வெளியான 'டபுள் ஆக்குபென்சி' திரைப்படத்தில் குஷ்புவின் மூத்த மகள் அவந்திகா படைப்புத் தயாரிப்பாளராக பணியாற்றியிருந்தார்.

தற்போது ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிக்கும் 'மீசைய முறுக்கு 2' திரைப்படத்தின் பணிகளிலும் அவர் ஈடுபட்டு வருகிறார். பிரபலங்களின் குடும்ப உறுப்பினர்களை, குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளை சமூக வலைத்தளங்களில் குறிவைத்து அவதூறு பரப்புவது குறித்து நீண்ட காலமாக பலரும் கவலை தெரிவித்துவரும் நிலையில், குஷ்பு மற்றும் ராதிகா போன்ற மூத்த நடிகைகள் வெளிப்படையாக குரல் கொடுத்திருப்பது சமூக வலைத்தளங்களில் பரவலான ஆதரவைப் பெற்றுள்ளது. கருத்து சுதந்திரம் என்ற பெயரில் தனிநபர் கண்ணியத்தையும், குடும்ப உறுப்பினர்களின் மனநிலையையும் பாதிக்கும் வகையிலான தாக்குதல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் தேவை என்ற விவாதமும் இதன் மூலம் மீண்டும் வலுப்பெற்றுள்ளது.
இதையும் படிங்க: அண்ணனுக்கு Birthday வரப்போகுது.. So இரத்ததானம் பண்ணனும்..!! ஹாஸ்பிட்டலில் போலீசாருடன் சண்டை.. நடிகர் சூர்யாவின் விழுதுகள் அட்ராசிட்டி..!!