தமிழ் சினிமாவில் பயோகிராபி என்றாலே பெரும்பாலும் ஒரு மனிதரின் முழு வாழ்க்கைப் பயணத்தை பதிவு செய்யும் முயற்சிகளாகத்தான் இதுவரை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், ஒரு மனிதரின் வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரே ஒரு மொமெண்ட், ஒரு காலகட்டம், ஒரு அரசியல் – சமூக போராட்டத்தை மட்டும் மையமாக வைத்து உருவாகும் படங்கள் மிக மிக அரிது. அந்த வகையில், ஹிந்தி திணிப்பு என்ற மையக் கருத்தை அடிப்படையாக கொண்டு, இயக்குநர் சுதாவின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், அதர்வா, ரவிமோகன், ஸ்ரீலீலா ஆகியோர் நடித்துள்ள ‘பராசக்தி’ திரைப்படம், தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான முயற்சியாக திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம், அந்த எதிர்பார்ப்புகளை எந்த அளவிற்கு பூர்த்தி செய்துள்ளது என்பதைக் காண்போம்.
படத்தின் கதை, நேரடியாக எந்த சுற்றுப்பாதையும் இல்லாமல், முதல் காட்சியிலேயே தனது அரசியலை அறிவித்து விடுகிறது. ஹிந்தி திணிப்புக்கு எதிராக ‘புறநானூறு’ என்ற அமைப்பை உருவாக்கி போராடும் செழியன் (சிவகார்த்திகேயன்) தான் கதையின் மையம். படம் தொடங்கும் முதல் சில நிமிடங்களிலேயே, ஒரு ரயிலை எரிக்கும் சம்பவம் நிகழ்கிறது. இது வெறும் ஒரு காட்சி அல்ல.. இந்த போராட்டம் எவ்வளவு தீவிரமானது, எந்த அளவிற்கு அந்த இளைஞர்கள் சென்று கொண்டிருக்கிறார்கள் என்பதைக் காட்டும் அடையாளம்.
இந்த ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, அரசாங்கத்தின் சார்பில், இந்த அமைப்பை ஒடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் களமிறங்குகிறார் அதிகாரி ரவிமோகன். “எத்தனை உயிர்கள் போனாலும் பரவாயில்லை, நான் நினைத்தது நடக்க வேண்டும்” என்ற மனநிலையுடன் செயல்படும் அவரது கதாபாத்திரம், படத்தின் ஆரம்பத்திலிருந்தே ஒரு அச்சுறுத்தலான எதிர்முனையாக உருவாக்கப்படுகிறது. இந்த போராட்டத்தின் நடுவே, சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பர் ஒருவர் அந்த ரயில் எரிப்பு சம்பவத்தில் உயிரிழக்கிறார். இந்த இழப்பு, செழியனை முற்றிலுமாக உடைத்துப் போடுகிறது.
இதையும் படிங்க: பின்னுக்கு போன 'ஜனநாயகன்'.. முன்னுக்கு வந்த 'பராசக்தி'..! நான் நினைத்தது எதுவுமே நடக்கல.. சிவகார்த்திகேயன் வேதனை..!

“இனி இந்த வன்முறை வேண்டாம், இந்த போராட்டமே வேண்டாம்” என்று அனைத்தையும் கைவிட்டு, ஒரு சாதாரண வாழ்க்கையை தேர்வு செய்ய முடிவு செய்கிறார். இந்த இடத்தில் படம், ஒரு போராளியின் மனநிலையை மிக நுட்பமாக பதிவு செய்கிறது. ஆனால், செழியன் பின்னால் இருந்து போராட்டத்தை விட்டுவிடும் நேரத்தில், அவரது தம்பி அதர்வா அந்த கொடியை கையில் எடுக்கிறார். இளம் ரத்தம், ஆவேசம், தளராத உறுதி என இந்த மூன்றையும் ஒருங்கே கொண்ட அதர்வாவின் கதாபாத்திரம், படத்திற்கு ஒரு பூஸ்டாக செயல்படுகிறது. மறுபுறம், செழியன் “ஹிந்தி தெரிந்தால் தான் வேலை” என்ற நிலை காரணமாக, ஹிந்தி கற்றுக்கொண்டு டெல்லிக்கு வேலைக்கு செல்ல முயற்சி செய்கிறார்.
ஆனால் அங்கேயும் நிலைமை வேறாக இருக்கிறது. “ஹிந்தி படித்தால் மட்டும் போதாது, ஹிந்திக்காரன் மாதிரி பேச வேண்டும்” என்ற சமூக கட்டாயம், செழியனை மீண்டும் கேள்விக்குள்ளாக்குகிறது. இதன் உச்சமாக, அவரது கண் முன்னே ஒரு இளைஞன் உயிரிழப்பதும், அதே சமயம் தன்னுடைய வேலை வாய்ப்பும் பறிபோவதும், செழியனுக்குள் மறுபடியும் அந்த எரியும் தீயை ஏற்றுகிறது. “இங்கு போராடினால் தான் எதுவும் கிடைக்கும்” என்ற உண்மை புரிய, மீண்டும் போராட்ட களத்தில் குதிக்கிறார்.
சிவகார்த்திகேயன் – செழியன் கதாபாத்திரமாக வாழ்ந்திருக்கிறார். இது வெறும் நடிப்பு அல்ல. ஒரு போராளியாக வாழ்ந்து, ஒரு இழப்புக்கு பிறகு தளர்ந்து, மீண்டும் போராட்டத்தை ஏற்றுக்கொண்டு, கடைசி வரை இரத்தம் சிந்தி போராடும் அந்த பயணம், நடிகராக சிவகார்த்திகேயனை பல மடங்கு உயர்த்தியுள்ளது. அவரது திரை வாழ்க்கையில் இது நிச்சயமாக ஒரு மைல்கல் படம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ரவிமோகன், படத்தின் முழுவதும் அரசாங்கத்திற்கு ஆதரவான ஒரு குளிர்ச்சியான, ஆனால் கொடூரமான அதிகாரியாக மிரட்டுகிறார். “எத்தனை பேர் செத்தாலும் பரவாயில்லை” என்ற அவரது அணுகுமுறை, ஒவ்வொரு காட்சியிலும் நெஞ்சை பதபதைக்க வைக்கிறது. இது அவரது career-இல் ஒரு மிரட்டல் பெர்ஃபார்மன்ஸ்.

அதர்வா, இளம் போராளியாக வந்து முழு படத்திற்கும் ஒரு வேகத்தை தருகிறார். அவரது ஆவேசம், உடல் மொழி, வசன உச்சரிப்பு அனைத்தும் கதைக்கு பலம் சேர்க்கிறது. ஸ்ரீலீலா, இந்த படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார். அவரது நடிப்பு இயல்பாக இருந்தாலும், முதல் பாதியில் இடம்பெறும் சிவகார்த்திகேயன் – ஸ்ரீலீலா காதல் காட்சிகள், உண்மையிலேயே பொறுமையை சோதிக்கின்றன. ஆனால், இரண்டாம் பாதி கிளைமாக்ஸில், அவர் ஒரு முக்கியமான எமோஷனலாக செய்கிறார்.
படம் முழுவதும் “இது ஹிந்திக்கு எதிரான படம் அல்ல.. ஹிந்தி திணிப்புக்கு எதிரான படம்” என்ற தெளிவு மிக அழுத்தமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. பல வரலாற்று சம்பவங்களை “கற்பனை, சித்தரிப்பு” என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், திரையரங்கில் அமர்ந்திருக்கும் ரசிகர்கள், படத்தோடு ஒன்றி கைதட்டியும், கமெண்ட் அடித்தும் தங்களது ஆதரவை வெளிப்படுத்துகிறார்கள். கட் செய்யப்பட்ட காட்சிகள், மியூட் செய்யப்பட்ட வசனங்கள் இருப்பதையும் ரசிகர்கள் உணர்கிறார்கள்.
இந்த படத்தின் மிகப்பெரிய பலம் வசனங்கள். “ஹிந்தி திணிப்புக்கு தான் எதிரி… ஹிந்திக்கு இல்லை”, “முதலில் ஹிந்தி படிங்கன்னு சொன்னீங்க… இப்போ ஹிந்திக்காரன் மாதிரி பேசணும்னு சொல்றீங்க”, “இரண்டு பேரையும் ஒரே கோட்டில் ஓட்டத்தை தொடங்க சொல்வது தானே முறை”, “சிப்பாய் கழகம் முன்னாடியே போராடியவன் தமிழன்”, “எனக்கு தேசபக்தி க்ளாஸ் எடுக்காதே” போன்ற வசனங்கள், தியேட்டரை அதிர வைக்கின்றன. ஆர்ட் டைரெக்ஷன், 1960-களுக்கு நம்மை நேரடியாக அழைத்துச் செல்கிறது. செட், உடை, லொகேஷன் – அனைத்திலும் அந்த காலகட்டத்தின் மணம் வீசுகிறது. மைக்கேல் ரெட்டி ரெபரன்ஸ், பாசில் ஜோசம் கேமியோ போன்ற அம்சங்கள், கிளைமாக்ஸில் கூஸ்பம்ஸை குவிக்கின்றன.

டெக்னிக்கலாக, படம் இசை, ஒளிப்பதிவு, ஆர்ட் ஒர்க் என அனைத்திலும் அட்டகாசமாக ஸ்கோர் செய்கிறது. க்ளாப்ஸ் என பார்த்தால், அனைத்து நடிகர்களின் அசத்தல் நடிப்பு, பொறி பறக்கும் வசனங்கள், டெக்னிக்கல் ஒர்க் தான். பல்ப்ஸ் என பார்த்தால், முதல் பாதி நீளமான காதல் காட்சிகள். அதிக கட், மியூட் காரணமாக சில இடங்களில் குழப்பம் தான். மொத்தத்தில், ‘பராசக்தி’ என்பது வெறும் ஒரு திரைப்படம் அல்ல. அது ஒரு அரசியல் குரல், ஒரு சமூக ஆவேசம், ஒரு போராட்டத்தின் சின்னம். “தமிழர்கள் நெஞ்சில் என்றுமே அனையாத தீ” என்பதை மீண்டும் ஒருமுறை திரையில் உயிருடன் கொண்டு வந்திருக்கிறது இந்த பராசக்தி.
இதையும் படிங்க: மேலிடத்துக்கு பணியலன்னா படமே இனி ரிலீசாகாது..! இது என்ன ஹாலிவுட்டா நியாமா நடக்க.. தயாரிப்பாளர் பரபரப்பு பேச்சு..!