செக் மோசடி வழக்கில் பிரபல திரைப்பட தயாரிப்பாளரும், ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன்ஸ் நிறுவன உரிமையாளருமான சரவணன் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சரவணன் மீது, சென்னையைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்திடம் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான செக் மோசடி செய்ததாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக, சென்னை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சரவணன் பலரிடம் செக் மூலம் பணம் பெற்று, அதனை திருப்பிச் செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து, காவல்துறையினர் அவரை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து கைது செய்தனர்.
இதையும் படிங்க: மும்பை மோசடி வழக்கு: தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகருக்கு பறந்த சம்மன்..!
இந்த வழக்கில், சரவணனுக்கு எதிராக பல ஆவணங்கள் மற்றும் சாட்சியங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இவர் மீது மற்றொரு சில பொருளாதார மோசடி வழக்குகளும் நிலுவையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுமட்டுமின்றி பூவிருந்தவல்லியைச் சேர்ந்த கண்ணப்பனிடம் 2017இல் ரூ.1.3 கோடி பணம் பெற்று மோசடி செய்ததாகவும் வழக்கு தொடரப்பட்டது. கைது செய்யப்பட்ட சரவணன், சென்னை மாநகர குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தை அறிந்து திரையுலகைச் சேர்ந்த பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சரவணனின் கைது, அவரது நிறுவனத்தின் எதிர்கால திட்டங்களையும், தயாரிப்பில் உள்ள படங்களையும் பாதிக்கலாம் எனத் திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த சம்பவம் திரைப்படத் தயாரிப்பு துறையில் நிதி நிர்வாகம் குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது, மேலும் இந்த வழக்கில் புதிய தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: மஞ்சும்மல் பாய்ஸ் நடிகர் அதிரடி கைது.. என்ன செய்தார் தெரியுமா? வெளியான முக்கிய தகவல்!!