சென்னையைச் சேர்ந்த பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகருக்கு ரூ.5.24 கோடி மோசடி வழக்கில் மும்பை குற்றப்பிரிவு காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது. மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் அஜய் ஜெகதீஷ் கபூர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பங்குச் சந்தையில் முதலீடு செய்து அதிக லாபம் தருவதாக ஆசை வார்த்தை கூறி, ரவீந்தர் சந்திரசேகரும், கேரளாவைச் சேர்ந்த ரோகன் என்பவரும் கடந்த ஆண்டு அஜய் ஜெகதீஷிடம் இருந்து ரூ.5.24 கோடி பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால், உறுதியளிக்கப்பட்ட லாபம் வழங்கப்படவில்லை என்பதால், அஜய் மும்பை குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தார்.
இதையும் படிங்க: இங்கு குற்றங்கள் அதிகம் ஆனால் நீதிமன்றம் குறைவு..! பருத்திவீரன் சரவணனின் ஆதங்க குரல் இணையத்தில் வைரல்..!
தமிழ் திரையுலகில் தயாரிப்பாளராகவும், சமூக ஊடகங்களில் பிரபலமாகவும் விளங்கும் ரவீந்தர் சந்திரசேகர், லிப்ரா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் மூலம் லிப்ட், முருங்கைக்காய் சிப்ஸ், நளனும் நந்தினியும் உள்ளிட்ட படங்களைத் தயாரித்துள்ளார். 2022-ல் சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்து, சமூக ஊடகங்களில் டிரெண்டிங் ஜோடியாக இடம்பிடித்தார். இவர் சமீபத்தில் வெளியான டிராகன் படத்தில் நடித்திருந்தார்.
இருப்பினும், அவரது சமீபத்திய செயல்பாடுகள் சர்ச்சைகளால் கவனம் பெற்றுள்ளன. 2023 செப்டம்பரில், நகராட்சி திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் திட்டத்தில் முதலீடு செய்ய வைத்து, சென்னையைச் சேர்ந்த பாலாஜி என்பவரிடம் 16 கோடி ரூபாய் மோசடி செய்ததாக ரவீந்தர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனால், அவர் கைது செய்யப்பட்டு ஒரு மாதம் சிறையில் இருந்தார். பின்னர் நிபந்தனை ஜாமீனில் விடுதலையானார். தொடர்ந்து 2024ம் ஆண்டு ஜூலையில், சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக சென்னை அசோக் நகரில் உள்ள அவரது வீட்டில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனிடையே சிறையில் இருந்து விடுதலையான பின், பின்னர் பிக்பாஸ் சீசன் 8ல் போட்டியாளராகப் பங்கேற்று இருந்தார் ரவீந்தர் சந்திரசேகர். அப்போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நுரையீரல் தொற்று காரணமாக தீவிர சிகிச்சை பெற்று, தற்போது மீண்டு வருகிறார். இந்நிலையில் தற்போது, மும்பை காவல்துறையின் சம்மனைத் தொடர்ந்து, ரவீந்தரை கைது செய்ய மும்பை காவல்துறை அதிகாரிகள் சென்னை வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரம் கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: என்ன.. விஜய் தனது மனைவியை விட்டு பிரிந்து விட்டாரா..! நடிகர் சஞ்சீவ் சொன்ன விஷயம் வைரல்..!