இந்திய திரையுலகில் நடிகராகவும், இயக்குநராகவும், நடன இயக்குநராகவும் பல்வேறு பரிமாணங்களில் கலக்கும் ராகவா லாரன்ஸ், தனது தனித்துவமான சினிமா தேர்வுகளாலும், ஆன்மீக மற்றும் மனிதநேயம் கலந்த வாழ்க்கை முறைதனாலும் ரசிகர்களின் உள்ளங்களை வென்றவர். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் “பென்ஸ்” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இது LCU பட வட்டத்தில் வெளியாவதால், இதற்கான எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாக உள்ளது. அதேவேளை, தனது தம்பியுடன் இணைந்து தயாரிக்கப்படும் “புல்லட்” படத்திலும் முக்கிய பங்களிப்பை மேற்கொண்டு வருகிறார். இந்த இரு படங்களும் வேறுபட்ட கதைக்களத்துடன் உருவாகி வருவதால், ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
அனைத்து பிஸியான சினிமா திட்டங்களுக்கிடையே, சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான அனிமேஷன் திரைப்படம் “மகாவதார் நரசிம்மா”*வை தனது குடும்பத்தினருடன் நேரில் சென்று பார்த்து ரசித்துள்ளார் ராகவா லாரன்ஸ். இந்த அனுபவம் அவரை மிகவும் நெகிழவைத்ததாம். இது குறித்து, அவர் தனது எக்ஸ் தளப்பக்கத்தில், ஒரு உணர்ச்சிப் பூர்வமான பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “நல்ல சினிமா அனுபவம். பல காட்சிகளில் படம் என்னை கண்ணீர் மல்க வைத்தது. அந்த காட்சிகளை உயிர்ப்பித்ததற்காக இயக்குநர் அஸ்வின், தயாரிப்பாளர் ஹோம்பலே பிலிம்ஸ் மற்றும் முழு குழுவினருக்கும் எனது மிகப்பெரிய நன்றி" என கூறியுள்ளார்.

அவரது இந்த பதிவு, இணையத்தில் விரைவாக பரவியது. அதனை அவரது ரசிகர்கள் மட்டுமல்லாமல், படக்குழுவினரும் பெருமிதத்துடன் பகிர்ந்துள்ளனர். “மகாவதார் நரசிம்மா” படம், ஹிந்தூ புராணங்களை அடிப்படையாகக் கொண்டு, நரசிம்ம அவதாரத்தின் வீரத் தன்மை, தெய்வீக சக்தி, பக்தியின் பெருமை மற்றும் தர்மத்தின் ஒளி என அனைத்தையும் நவீன அனிமேஷன் தொழில் நுட்பத்தில் கொண்டு வந்த ஒரு முயற்சியாகக் கருதப்படுகிறது. இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார் அஸ்வின். இந்திய திரையுலகில் அனிமேஷன் தொழில்நுட்பம் முழுமையாக பயன்படுத்தப்படும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் படம், “ஹோம்பலே பிலிம்ஸ்” தயாரிப்பில் வெளிவந்தது. 'KGF', 'சளார்', 'காந்தாரா' போன்ற வெற்றிப்படங்களை வழங்கிய ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம், “மகாவதார் நரசிம்மா”வையும் ஒரு உயர்தர சினிமாவாக பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.
இதையும் படிங்க: கோயிலாக மாறிய தியேட்டர்.. செருப்பை வெளியே விட்டுச்சென்ற மக்கள்.. காரணம் இதுதானாம்..!!
ராகவா லாரன்ஸ், ஆன்மீகத்திற்கும், தெய்வ நம்பிக்கைக்கும் முக்கியத்துவம் தரும் ஒருவர் என்பதும், பல தன்னார்வ சமூக பணிகளிலும் ஈடுபடும் ஒருவர் என்பதும் நாம் அறிந்ததே. அந்த வகையில், இந்த படம் இவரை உணர்ச்சிப் பூர்வமாக தொட்ந்திருப்பது, அவரது பதிவிலேயே வெளிப்படுகிறது. இந்நிலையில், “மகாவதார் நரசிம்மா” படம் வெளியான சில நாட்களில் பெருமளவான பாராட்டு மற்றும் விமர்சனங்களைக் குவித்து வருகிறது. குறிப்பாக, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, அனைவரும் ரசிக்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டிருப்பதால், குடும்பத்துடன் சென்று பார்வையிட மிகவும் ஏற்ற படமாகும். ராகவா லாரன்ஸ், தனது நடிப்பில் மட்டுமல்லாமல், மனதளவிலும் ஒரு நல்ல மனிதராக இருப்பது மீண்டும் ஒரு முறை உறுதி செய்யப்பட்டது. அவரின் பாராட்டும், இந்த திரைப்படத்திற்கு மேலும் பாசிட்டிவ் பப்ளிசிட்டியைக் கூட்டியுள்ளது. மகாவதார் நரசிம்மா படம், இந்திய சினிமாவில் அனிமேஷனுக்கான வரம்புகளை மீறி ஒரு புதிய முன்னேற்றமாக அமைந்துள்ளது.

இது போன்ற முயற்சிகளை, பிரபலங்களும், ரசிகர்களும் நேரடியாக ஆதரிப்பது, திரைப்பட உலகத்தில் தரமான உள்ளடக்கங்களை ஊக்குவிக்கும் வகையில் அமைக்கிறது.
இதையும் படிங்க: மகேஷ் பாபு – ராஜமௌலி கூட்டணியின் பிரமாண்டப் படம்..! வெளியானது “SSMB29” முதல் அப்டேட்..!