தமிழ் சினிமாவின் பல்துறை திறமைசாலிகளில் ஒருவராக அறியப்படுபவர் நடிகை ரேவதி. 1983ஆம் ஆண்டு வெளியான ‘மண் வாசனை’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமான அவர், நான்கு தசாப்தங்களை கடந்தும் தனது தனித்த அடையாளத்தையும், கலை நேர்மையையும் இழக்காமல் தொடர்ந்து பயணித்து வருகிறார். ஒரு படம் ரேவதி நடித்திருக்கிறார் என்றால், அந்த படம் தரமானதாக இருக்கும் என்ற நம்பிக்கை ரசிகர்கள் மத்தியில் நீண்ட காலமாகவே நிலவி வருகிறது. கதைத்தேர்வு, கதாபாத்திரத்தின் ஆழம், சமூகப் பொறுப்பு ஆகியவற்றில் அவர் எப்போதும் சமரசம் செய்ததில்லை என்பதே அதற்குக் காரணமாக பார்க்கப்படுகிறது.
நடிப்பைத் தாண்டி, இயக்குநராகவும் தனது முத்திரையை பதித்துள்ள ரேவதி, பெண்களின் வாழ்க்கை, சமூகச் சிக்கல்கள், மனித உறவுகள் போன்ற அம்சங்களை மையமாகக் கொண்டு பல படங்களை இயக்கியுள்ளார். கடந்த ஆண்டு அவர் இயக்கத்தில் வெளியான ‘தி குட் வைஃப்’ (The Good Wife) என்ற வெப் தொடர், விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த தொடரில், ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கை, குடும்பம், சமூக அழுத்தங்கள் மற்றும் அவற்றை எதிர்கொள்ளும் மனவலிமை போன்ற விஷயங்கள் நுட்பமாக பேசப்பட்டிருந்தது. இது ரேவதி இயக்குநராகவும் எவ்வளவு முதிர்ச்சியடைந்த பார்வையுடன் செயல்படுகிறார் என்பதற்கான சான்றாக அமைந்தது.
ரேவதியை தனித்துவமாக்குவது அவரது திரை வாழ்க்கை மட்டுமல்ல; அவரது நேர்மையான, தைரியமான பேச்சும்தான். சமூகத்தில் நடக்கும் பல விஷயங்கள் குறித்து அவர் வெளிப்படையாக கருத்து தெரிவித்து வந்தவர். பெண்களின் உரிமைகள், பாலியல் தொல்லைகள், குடும்ப வன்முறை, சினிமாவில் பெண்களின் பிரதிநிதித்துவம் போன்ற பல விஷயங்களில் அவர் எப்போதும் அழுத்தமான கருத்துகளை முன்வைத்திருக்கிறார். இதனால், அவர் சில நேரங்களில் விமர்சனங்களையும் எதிர்கொண்டாலும், தனது கருத்துக்களில் உறுதியாக நின்று வருகிறார்.
இதையும் படிங்க: விஜய் என்ன முருகப்பெருமானா.. கடவுள் பாடலில் தளபதி பெருமையா..! வெளுத்து வாங்கிய பக்தர்கள்.. மன்னிப்பு கேட்ட வேல் முருகன்..!

இந்த நிலையில், சமீபத்தில் அவர் அளித்த ஒரு பேட்டியில், தனது பள்ளி காலத்தில் தனக்கு ஏற்பட்ட ஒரு சம்பவத்தை மிகுந்த துணிச்சலுடன் பகிர்ந்துள்ளார். அந்த அனுபவம் தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. 11ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது, பேருந்தில் பயணம் செய்த சமயத்தில் தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை குறித்து அவர் மனம் திறந்து கூறியுள்ளார்.
அந்த சம்பவத்தை நினைவுகூர்ந்து பேசிய ரேவதி, “நான் 11வது வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது, பேருந்தில் பயணம் செய்தேன். அப்போது, என்னை ஒருவர் தவறான முறையில் தொட்டார். அந்த தருணத்தில் நான் யாருக்கும் பயப்படவில்லை. உடனடியாக அவனை அந்த இடத்திலேயே பளாரென கன்னத்தில் அடித்தேன்” என்று கூறியுள்ளார். இந்த சம்பவம் நடந்தவுடன், பேருந்தில் இருந்த மற்ற பயணிகள் அனைவரும் தனக்கு ஆதரவாக நின்றதாகவும், அந்த நிமிடம் தன்னை தனியாக உணரவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
“அப்போது அங்கிருந்த அனைவரும் என்னை ஆதரித்தார்கள். அவன் தான் தவறு செய்தான் என்பதை அனைவரும் புரிந்துகொண்டார்கள். அந்த ஆதரவு எனக்கு மேலும் தைரியத்தை கொடுத்தது” என்று அவர் கூறியுள்ளார். பல பெண்கள் இதுபோன்ற சூழ்நிலைகளில் மௌனமாக இருப்பதற்கும், பயப்படுவதற்கும் காரணம் சமூக அழுத்தங்களும், ஆதரவின்மையும் தான் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த தைரியம் தனக்குத் தானாக வந்தது அல்ல என்றும், அதற்குப் பின்னால் தனது அம்மாவின் வளர்ப்பு மற்றும் அறிவுரைகள் தான் காரணம் என்றும் ரேவதி கூறியுள்ளார். “என் அம்மா எப்போதும் எனக்கு ஒரு விஷயத்தைச் சொல்லுவார். யாராவது தவறாக நடந்து கொண்டால், பயப்படாமல் தைரியமாக எதிர்த்து நில். தேவைப்பட்டால் அடி. நீ தவறு செய்யவில்லை என்றால், யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என்பார். அந்த வார்த்தைகளே அந்த நாளில் என் நினைவுக்கு வந்தது. அதைத்தான் நான் செய்தேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், “இதைப்போல் ஒவ்வொரு பெண்ணுக்கும், அவர்களின் பெற்றோர் பக்கபலமாக இருக்க வேண்டும். குறிப்பாக, பெண் குழந்தைகளுக்கு சிறுவயதிலிருந்தே தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் பெற்றோர் கற்றுக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள முடியும்” என்று அவர் கூறியுள்ளார். இந்த கருத்து பலரிடமும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ரேவதியின் இந்த பேட்டி வெளியானதற்கு பிறகு, பல பெண்கள் தங்களுக்கும் இதுபோன்ற அனுபவங்கள் இருந்ததாக சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
அதே நேரத்தில், “அந்த வயதிலேயே இப்படியான தைரியத்தை காட்டியது பாராட்டத்தக்கது” என்றும், “பெற்றோர் வளர்ப்பு எவ்வளவு முக்கியம் என்பதற்கு இது ஒரு உதாரணம்” என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். திரையுலகில் ஒரு வெற்றிகரமான நடிகை, இயக்குநர் என்ற அடையாளத்தைத் தாண்டி, சமூக பொறுப்புணர்வுடன் பேசும் ஒரு பெண்ணாக ரேவதி தொடர்ந்து பயணித்து வருகிறார். அவரது இந்த வெளிப்படைப் பேச்சு, பாலியல் தொல்லைகள் குறித்து பெண்கள் மௌனம் காக்காமல், தைரியமாக பேச வேண்டும் என்ற செய்தியை வலியுறுத்துகிறது.

அதே சமயம், சமூகமும் இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக நிற்க வேண்டும் என்பதையும் அவர் இந்த அனுபவம் மூலம் எடுத்துரைத்துள்ளார். மொத்தத்தில், ரேவதியின் இந்த பேட்டி, ஒரு தனிப்பட்ட அனுபவமாக மட்டுமின்றி, சமூகத்திற்கு ஒரு முக்கியமான பாடமாகவும் பார்க்கப்படுகிறது. பெண்களின் பாதுகாப்பு, தைரியம், பெற்றோர் வளர்ப்பு ஆகியவை குறித்து மீண்டும் ஒரு முறை விவாதத்தை கிளப்பியுள்ள இந்த சம்பவம், பலருக்கும் ஊக்கமாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க: 'With Love' படத்திற்கு certificate கொடுத்த ரஜினி காந்த்..! மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்த படக்குழு..!