மலையாள சினிமாவின் வரவேற்கப்பட்ட நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை ஆர்ஷா சாந்தினி, இவர் தற்போது தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார். அவர் நடித்துள்ள முதல் தமிழ் படம் ‘ஹவுஸ் மேட்ஸ்’, இந்த படம் வருகிற ஆகஸ்ட் 1-ம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகிறது. இந்த படம், ஒரு வீட்டுக்குள் நிகழும் சம்பவங்களையும், நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களின் உணர்வுகளையும், நகைச்சுவையையும் ஒன்றாகச் சொல்லும் ஒரு குடும்ப படம். இப்படி இருக்க இந்த திரைப்படம், தமிழ் சினிமா ரசிகர்களிடையே ஏற்கனவே எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது. ஒரு பக்கத்தில் நகைச்சுவையையும், மறுபக்கத்தில் நம்மை ஆழமாகத் தொட்டுப் போகும் உணர்ச்சிகளையும் கொண்ட ஒரு குடும்பக் கதையம்சம், ரசிகர்களை திரைக்கு இழுத்து செல்லும் வகையில் அமைந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்தப் படத்தை எழுதி இயக்கியவர் இயக்குநர் ராஜவேல். கதைக்கரு எளிமையானது தான். அதன்படி ஒரு வீட்டிற்குள் பல குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள், என பலதரப்பட்ட நபர்கள் ஒன்று கூடி வாழும் போது உருவாகும் நிகழ்வுகளை படம் சொல்லும். ஆனால், அந்த நிகழ்வுகளைச் சொல்லும் பாணி, காட்சிப்படுத்தும் விதம், உணர்வுகள் கலந்த நகைச்சுவை என இவை எல்லாம் ‘ஹவுஸ் மேட்ஸ்’ திரைப்படத்தை வித்தியாசமானதாக மாற்றுகின்றன. அதிலும் நடிகை ஆர்ஷா சாந்தினி, இத்திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மலையாள சினிமாவில் பல உணர்வுபூர்வமான கதைகளில் தனது நடிப்பை நிரூபித்தவர் தற்போது தமிழில் தனது பயணத்தை துவக்கியிருக்கிறார். இதுகுறித்து அவர், படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசும் போது, தனது மகிழ்ச்சியைத் வெளிப்படுத்தினார்.

அவர் பேசுகையில், "தமிழ் சினிமாவில் நடிப்பது எனக்கு நீண்டகால கனவு. அந்த கனவு இப்போது நிறைவேறி வருகிறது. இந்த வாய்ப்பை எனக்குத் தந்த இயக்குநர் ராஜவேலுக்கும், தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் அவர்களுக்கும் நன்றி. வருங்காலத்தில் சிவகார்த்திகேயன் சார் உடன் நடிக்க ஆசை படுகிறேன். அவரது நடிப்பு, காமெடி டைமிங், அட்டிட்யூட் எனக்கு மிகவும் பிடிக்கும், மேலும் இந்த படம் நம் வீட்டில் உள்ள அனைவரையும் பிரதிபலிக்கும் வகையில் இருக்கும். இதில் காமெடி, உணர்ச்சி மற்றும் குடும்பக்கதைகள் கலந்துள்ளன. நம்மில் யாரோ ஒருவரை இப்படத்தில் கண்டடையலாம்" என்றார். இந்த சூழலில் படத்தில் இடம்பெறும் முக்கியமான நட்சத்திரங்கள் என பார்த்தால் தர்ஷன் மற்றும் ஆர்ஷா சாந்தினிக்கு இணையாக முக்கிய வேடங்களில் காளி வெங்கட், பைஜூ, வினோதினி, தீனா, அப்துல் லீ, மற்றும் சிறு வயதிலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த மாஸ்டர் ஹென்ரிக் ஆகியோர் நடித்துள்ளனர்.
இதையும் படிங்க: யூடியூபில் இலவசமாக வெளியாக இருக்கும் அமீர்கானின் 'சித்தாரே ஜமீன் பர்'..!
இந்த நட்சத்திர பட்டாளம் ஒரே வீட்டைச் சுற்றி நடக்கும் கதையமைப்பில் இணைந்து வரும் போது, அந்த நிகழ்வுகள் எவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கும் என்பது ரசிகர்களுக்கே தெரியும். அதுமட்டுமல்லாமல் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. முன்னதாக ‘கனா’, ‘டான்’, ‘வாய் திரண்ட விளக்கம்’, போன்ற படங்களை வழங்கிய இந்த நிறுவனம், தரமான படைப்புகளுக்காக பெயர் பெற்றது. அந்தவகையில் ‘ஹவுஸ் மேட்ஸ்’, அந்த தரம் மற்றும் கதையம்சத்தில் எவ்வாறு தனிச்சிறப்பை காட்டப் போகிறது என்பதற்காகவே ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர். படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால், படக்குழுவினர் தற்போது பல்வேறு ஊடக நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், சமூக வலைதள பங்களிப்புகள் ஆகியவற்றின் மூலம் புரமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நடிகர்கள் ஒருவருக்கொருவர் கதாபாத்திரங்களாகவே இல்லாமல், நேர்மையான உறவுகளாக உணர்வுகளை பகிர்ந்துக் கொள்கிறார்கள் என பல விமர்சனங்கள் சொல்லும் நிலையில், இப்படம் ஒரு உண்மைச் சமூகத்தை பிரதிபலிக்கப்போகும் என தெரிகிறது.

ஆகவே ஆகஸ்ட் 1 அன்று குடும்பத்துடன் இந்த வீட்டுக்குள் வரவேற்கப்படுகிறார்கள் ரசிகர்கள். ‘ஹவுஸ் மேட்ஸ்’ என்ற குடும்பத்தின் கதை, ஒவ்வொரு குடும்பத்திலும் ஒலிக்க செய்யும்.
இதையும் படிங்க: நீளும் சாதிய அருவருப்பின் அட்டூழியம்.. இயக்குநர் மாரி செல்வராஜ் பதிவு..!