தமிழ் சின்னத்திரை தொடர்களுக்கும் சமூக வலைதள விமர்சனங்களுக்கும் இடையிலான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பிரபல திரைப்படங்கள் அல்லது இணையத் தொடர்களில் இடம்பெறும் காட்சிகளை சீரியல்களில் பயன்படுத்தும்போது, “காப்பி”, “ரீமேக்”, “காட்சி திருட்டு” போன்ற விமர்சனங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் ஒளிபரப்பான ஒரு சின்னத்திரை தொடரில் இடம்பெற்ற காட்சி, சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்ற “கருப்பு” திரைப்படத்தின் காட்சியை ஒத்திருந்ததாக நெட்டிசன்கள் குற்றச்சாட்டு முன்வைத்தனர்.
இந்த விவகாரத்தில் அந்த தொடரில் நடித்துவரும் நடிகர் ஸ்ரீகுமார் கடுமையான விமர்சனங்களுக்கும், சமூக வலைதள ட்ரோல்களுக்கும் ஆளானார். இதையடுத்து தனது மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு அவர் தற்போது வெளிப்படையாக பதிலளித்துள்ளார். அவரது கருத்துகள் சமூக வலைதளங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகின்றன.
ஒரு நேர்காணலில் பேசிய ஸ்ரீகுமார், தன்னை குறிவைத்து சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் கருத்துகள் குறித்து வருத்தம் தெரிவித்ததோடு, சின்னத்திரை கலைஞர்களின் வாழ்க்கை மற்றும் அவர்களின் தொழில் பற்றியும் விரிவாக பேசியுள்ளார். குறிப்பாக “சீரியல் என்றால் ஏன் இவ்வளவு கேவலமாக பார்க்கப்படுகிறது?” என்ற கேள்வியை அவர் முன்வைத்திருப்பது கவனம் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: பிரபல தொகுப்பாளினி டிடி வாங்கிய புதிய கார்..!! வீடியோவை வெளியிட்டு உற்சாகப்படுத்திய ரசிகர்கள்..!
இதுகுறித்து பேசிய அவர், “கருப்பு படம் வெளியான பிறகு அதை பார்த்து காப்பி அடித்ததாக சொல்கிறார்கள். சரி, அப்படியே காப்பி அடித்திருந்தாலும் அதில் என்ன தவறு இருக்கிறது? உலகத்தில் உருவாகும் பல படைப்புகளும் ஏதோ ஒரு வகையில் மற்றொரு படைப்பிலிருந்து ஈர்க்கப்பட்டவைதான். எல்லாமே இன்ஸ்பிரேஷன் அடிப்படையில் உருவாகின்றன” என்று கூறினார்.

மேலும், சின்னத்திரை தொடர்களை சிலர் மிகவும் தாழ்வாக மதிப்பிடுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். “சீரியலில் நடிக்கிறோம் என்றாலே சிலர் எங்களை கேவலமாக பார்க்கிறார்கள். ‘வெட்கமே இல்லையா?’, ‘இதெல்லாம் ஒரு வேலைஆ?’ என்று கேட்கிறார்கள். அதில் என்ன தவறு இருக்கிறது? இது எங்களுடைய தொழில். மற்ற எந்த கலை வடிவத்தைப் போலவே இதுவும் ஒரு கலை வடிவம்தான்” என்று அவர் தெரிவித்தார்.
ஸ்ரீகுமாரின் இந்த கருத்துகள், சின்னத்திரை கலைஞர்கள் நீண்ட காலமாக எதிர்கொண்டு வரும் ஒரு முக்கிய பிரச்சினையை மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளன. திரைப்படங்களில் நடிக்கும் நடிகர்களுக்கு கிடைக்கும் மரியாதை, பல நேரங்களில் தொலைக்காட்சி நடிகர்களுக்கு கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக இருந்து வருகிறது. அதேசமயம், தினசரி தொடர்களின் மூலம் கோடிக்கணக்கான குடும்பங்களை சென்றடையும் கலைஞர்களின் பங்களிப்பு பெரும்பாலும் கவனிக்கப்படாமல் போகிறது என்பதும் சின்னத்திரை வட்டாரங்களின் ஆதங்கமாக உள்ளது.
“கொஞ்சம் கெட்ட வார்த்தைகள் இல்லாமல் கருத்து சொல்லுங்கள்” என்று ரசிகர்களிடம் கேட்டுக்கொண்ட ஸ்ரீகுமார், சமூக வலைதளங்களில் பரவும் தனிநபர் தாக்குதல்கள் குறித்து கவலை தெரிவித்தார். விமர்சனம் செய்வது தவறல்ல என்றாலும், அவமதிக்கும் வகையிலான கருத்துகள் மன உளைச்சலை ஏற்படுத்துகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.
அவரது பேச்சின் மிகவும் உணர்ச்சிகரமான பகுதி, சின்னத்திரைத் துறையை நம்பி வாழும் குடும்பங்கள் குறித்து அவர் கூறிய கருத்தாகும். “ஒரு சீரியலை நம்பி 100 குடும்பங்கள் வாழ்கின்றன. நடிகர்கள் மட்டுமல்ல, இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள், எடிட்டர்கள், மேக்கப் கலைஞர்கள், தயாரிப்பு ஊழியர்கள் என ஏராளமானோர் இந்தத் துறையை நம்பி இருக்கிறார்கள். ஒரு சீரியலை விமர்சிப்பது எளிது. ஆனால் அதன் பின்னால் இருக்கும் உழைப்பையும் வாழ்க்கைகளையும் புரிந்துகொள்ள வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.

மேலும், கதை மற்றும் காட்சிகளில் ஒற்றுமை இருப்பதை மட்டும் வைத்து “காப்பி” என்று குற்றம்சாட்டுவது சரியல்ல என்றும் அவர் கூறினார். “விடாது கருப்பு போன்ற கதைகள் 90களிலேயே வந்துவிட்டன. அதற்கு முன்பும் இதேபோன்ற கதைகள் இருந்துள்ளன. காதல், பழிவாங்குதல், குடும்ப உறவுகள், மர்மம் போன்ற அடிப்படை கதைக் கோடுகள் மீண்டும் மீண்டும் பல வடிவங்களில் சொல்லப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. அதனால் ஒவ்வொரு ஒற்றுமையையும் காப்பி என்று சொல்ல முடியாது” என்றார்.
திரைப்படம், தொலைக்காட்சி, நாடகம், தெருக்கூத்து உள்ளிட்ட அனைத்து கலை வடிவங்களும் ஒரே அடிப்படையில் செயல்படுகின்றன என்ற கருத்தையும் அவர் வலியுறுத்தினார். “சினிமா, சீரியல், நாடகம், தெருக்கூத்து – இவைகளுக்கு அடிப்படையில் பெரிய வித்தியாசம் இல்லை. எல்லாரும் மக்களை மகிழ்விப்பதற்காகத்தான் வேலை செய்கிறோம். பார்வையாளர்களுக்கு இது பொழுதுபோக்கு. ஆனால் எங்களுக்கு இதுதான் வாழ்க்கை. இதுதான் எங்கள் சோறு” என்று அவர் உருக்கமாக கூறினார்.
ஸ்ரீகுமாரின் இந்த கருத்துகள் சமூக வலைதளங்களில் கலவையான எதிர்வினைகளை உருவாக்கியுள்ளன. சிலர் அவரது கருத்துக்கு ஆதரவு தெரிவித்து, சின்னத்திரை கலைஞர்களின் உழைப்பை மதிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். அதேசமயம், மற்றொரு தரப்பினர் படைப்பாற்றலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்றும், ஒற்றுமைகள் இருந்தால் அதுகுறித்து கேள்வி எழுப்புவது இயல்பானதே என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
எதுவாக இருந்தாலும், இந்த விவாதம் சின்னத்திரை உலகம் எதிர்கொள்ளும் மிகப் பெரிய சவால்களில் ஒன்றை மீண்டும் பேசுபொருளாக மாற்றியுள்ளது. ஒரு புறம் பார்வையாளர்களின் எதிர்பார்ப்புகள், மறுபுறம் தினசரி ஒளிபரப்பு அழுத்தம், குறுகிய காலத்தில் உள்ளடக்கம் உருவாக்க வேண்டிய கட்டாயம் ஆகியவற்றுக்கு மத்தியில் சீரியல் துறை செயல்பட்டு வருகிறது.

அந்த சூழலில், “சீரியல் என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல; ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம்” என்ற ஸ்ரீகுமாரின் கருத்து பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் தொடர்ந்தாலும், சின்னத்திரை உலகின் உழைப்பையும் அதன் பின்னால் இருக்கும் மனிதர்களின் வாழ்க்கையையும் புரிந்துகொள்ள வேண்டிய அவசியத்தை அவரது பேச்சு மீண்டும் நினைவூட்டியுள்ளது.
இதையும் படிங்க: சினிமாவுல என்னைக்குமே மறக்க முடியாதவர்..!! மறைந்த பாராஜாவுக்கு திரைபிரபலங்கள் இரங்கல்..!