சீனா மற்றும் வடகொரியா இடையேயான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தும் வகையில், சீன அதிபர் ஷீ ஜின்பிங் இரண்டு நாள் அரசுமுறை பயணமாக வடகொரியா சென்றுள்ளார். இந்த பயணத்தின் போது, வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன்னுக்கு சீனாவின் முழுமையான ஆதரவு தொடரும் என்று அவர் உறுதியளித்துள்ளார்.
சீனா மற்றும் வடகொரியா இடையேயான துாதரக உறவுகள் 1949ஆம் ஆண்டு தொடங்கின. அதன் பின்னர் இரு நாடுகளும் அரசியல், பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு துறைகளில் நெருக்கமான ஒத்துழைப்பை பேணி வருகின்றன. 1961ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தான ‘நட்புறவு மற்றும் பரஸ்பர உதவி ஒப்பந்தம்’ இன்று வரை முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருந்து வருகிறது.
அந்த ஒப்பந்தத்தின்படி, இரு நாடுகளில் ஏதேனும் ஒன்றின் மீது வெளிநாட்டு தாக்குதல் நடத்தப்பட்டால், மற்றொரு நாடு ராணுவ மற்றும் பாதுகாப்பு உதவிகளை வழங்க வேண்டும் என்ற உறுதி இடம்பெற்றுள்ளது. இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி 65 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதனை நினைவுகூரும் வகையில் ஜின்பிங் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: அப்பாச்சி ஹெலிகாப்டரை அடித்து வீழ்த்திய ஈரான்! அசூர பலத்துடன் மீண்டும் தாக்கும் அமெரிக்கா! நீடிக்கும் பதற்றம்!

சமீப காலமாக வடகொரியா மற்றும் ரஷ்யா இடையேயான உறவுகள் வேகமாக வளர்ந்து வருகின்றன. குறிப்பாக உக்ரைன் போரின் பின்னணியில் ரஷ்யாவுக்கு வடகொரியா ஆதரவு வழங்கி வருவது சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. இதனால், வடகொரியாவுடனான தனது பாரம்பரிய நட்புறவை மேலும் வலுப்படுத்த சீனா விரும்புவதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
பயணத்தின் போது ஷீ ஜின்பிங் மற்றும் கிம் ஜாங் உன் இடையே நடைபெற்ற சந்திப்பில், இருதரப்பு உறவுகள், பிராந்திய பாதுகாப்பு நிலவரம் மற்றும் சர்வதேச அரசியல் சூழ்நிலைகள் குறித்து விரிவான ஆலோசனைகள் நடைபெற்றன.
அப்போது பேசிய ஷீ ஜின்பிங், உலக அரசியல் சூழ்நிலைகள் எவ்வாறு மாறினாலும், சீனா மற்றும் வடகொரியா இடையேயான பாரம்பரிய நட்பு தொடர்ந்து நிலைத்திருக்கும் என்று தெரிவித்தார். மேலும், கிம் ஜாங் உன் தலைமையிலான வடகொரிய அரசுக்கு சீனாவின் ஆதரவு எந்த சூழ்நிலையிலும் குறையாது என்றும் உறுதியளித்தார்.
இந்த சந்திப்பு, கிழக்காசிய பிராந்திய அரசியலில் புதிய கவனத்தை ஈர்த்துள்ளதுடன், சீனா-வடகொரியா உறவின் எதிர்கால திசையை வெளிப்படுத்தும் முக்கிய நிகழ்வாகவும் பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஆந்திராவுக்கு கைமாறிய கப்பல் கட்டும் தளம்?! வெளியேறுகிறதா மசகான் டாக்! பெருமுதலீடு நழுவல்?!