கடந்த சில ஆண்டுகளாக உலகம் முழுவதும் வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் ஒன்றாக செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் கருதப்படுகிறது. கல்வி, மருத்துவம், தகவல் தொடர்பு, சினிமா, வணிகம் என பல துறைகளில் ஏஐ தொழில்நுட்பம் மனித வாழ்க்கையை எளிதாக்கும் வகையில் பயன்பட்டு வருகிறது.
ஆனால் அதே நேரத்தில், இந்த தொழில்நுட்பம் தவறானவர்கள் கைகளில் சிக்கும்போது எவ்வளவு பெரிய சமூக ஆபத்தாக மாற முடியும் என்பதையும் சமீப கால சம்பவங்கள் தெளிவாக காட்டி வருகின்றன. குறிப்பாக ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்படும் டீப் ஃபேக் (Deep Fake) புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள், பெண்கள் – அதிலும் குறிப்பாக நடிகைகள் – மீது நடத்தப்படும் ஒரு புதிய வகை டிஜிட்டல் வன்முறையாக மாறியுள்ளது. உண்மையில் நடக்காத விஷயங்களை நடந்தது போல காட்டும் இந்த போலி காட்சிகள், அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை, கண்ணியம் மற்றும் மனநலத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.

இந்த விவகாரம் சமீபத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா தொடர்பான டீப் ஃபேக் வீடியோ வெளியானபோது பெரும் அளவில் பேசப்பட்டது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, பல பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். ஆனால், அந்த சம்பவத்துடன் இந்த பிரச்சனை முடிவுக்கு வரவில்லை.
இதையும் படிங்க: ஹயீனாக்களை விட மோசமாக நடக்கும் ஆண்கள் கூட்டம்..! நடிகையிடம் அத்துமீறிய ரசிகர்களை வெளுத்து வாங்கிய சின்மயி..!
தொடர்ந்து சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன், ஸ்ரீலீலா, சமந்தா, தமன்னா உள்ளிட்ட பல முன்னணி நடிகைகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மோசமாக ஏஐ மூலம் எடிட் செய்யப்பட்டு இணையத்தில் பரப்பப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இளம் நடிகை ஸ்ரீலீலா இந்த விவகாரம் குறித்து வெளிப்படையாகவும் உணர்ச்சிபூர்வமாகவும் தன்னுடைய ஆதங்கத்தை பதிவு செய்துள்ளார். சமூக வலைதளங்களில் அவர் வெளியிட்ட பதிவில், ஏஐ தொழில்நுட்பத்தை நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்தாமல், கெட்ட நோக்கங்களுக்காக சாதாரணமாக பயன்படுத்துவது மிகுந்த வேதனையளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். “ஒவ்வொரு பெண்ணும் ஒருவரின் மகளாகவோ, பேத்தியாகவோ, அக்கா, தங்கை, தோழியாகவோ இருப்பார்கள். கலைத் துறையை ஒரு தொழிலாக தேர்வு செய்ததற்காக அவர்களை இப்படி அவமதிக்கலாமா?” என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.
மேலும் அவரது விளக்கமான பதிவில், “AI-generated nonsense-ஐ ஆதரிக்க வேண்டாம் என்று எல்லா சமூக வலைதள பயனர்களிடமும் கைகளை கூப்பி வேண்டுகிறேன். தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதுக்கும், அதை தவறாக பயன்படுத்துவதுக்கும் வித்தியாசம் உள்ளது. தொழில்நுட்ப முன்னேற்றம் வாழ்க்கையை எளிதாக்கவே, சிக்கலாக்க அல்ல. ஒவ்வொரு பெண்ணும் ஒரு மகள், பேத்தி, சகோதரி, தோழி அல்லது சக ஊழியர்தான். நாங்கள் மகிழ்ச்சியை பரப்பும் ஒரு துறையில் பாதுகாப்பான சூழலில் பணியாற்ற விரும்புகிறோம். என் பிஸியான அட்டவணை காரணமாக இணையத்தில் நடக்கும் பல விஷயங்களை அறியாமல் இருந்தேன். இதை எனக்கு தெரிவித்த அனைவருக்கும் நன்றி. இதுவரை அனைத்தையும் சாதாரணமாக எடுத்துக் கொண்டேன், ஆனால் இது மிகவும் அதிர்ச்சியையும் மன அழுத்தத்தையும் ஏற்படுத்துகிறது. என்னுடன் என் சக நடிகைகளும் இதே நிலையை சந்தித்து வருகிறார்கள். மரியாதையுடனும் நம்பிக்கையுடனும், எங்களுடன் நிற்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இனி இதை அதிகாரிகள் கவனிப்பார்கள்,” என்று தெரிவித்துள்ளார்.

இதே போல் நடிகை நிவேதா தாமஸ் தொடர்பான ஏஐ வீடியோக்களும் சமீபத்தில் இணையத்தில் அதிகமாக பரவி வருகின்றன. குறிப்பாக அவர் சேலையை கழற்றி நிற்பது போல உருவாக்கப்பட்ட போலி வீடியோக்கள், நெட்டிசன்களால் பரப்பப்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு உடனடி முறையில் எதிர்வினை தெரிவித்த நிவேதா தாமஸ், கடுமையான எச்சரிக்கையுடன் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அவரது பதிவில், “என் அடையாளத்தை தவறாக பயன்படுத்தி, நான் பகிர்ந்த ஒரு புகைப்படத்தை வைத்து ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட போலி படங்கள் இணையத்தில் பரப்பப்படுவதை கவனித்துள்ளேன். அனுமதி இல்லாமல் இப்படியான உள்ளடக்கங்களை உருவாக்குவதும் பரப்புவதும் மிக மோசமானது, சட்டவிரோதமானது. இது டிஜிட்டல் மோசடி மற்றும் என் தனியுரிமையில் மேற்கொள்ளப்படும் கடுமையான தலையீடு. இதை உடனடியாக நிறுத்தி, அந்த உள்ளடக்கங்களை நீக்க வேண்டும். இதற்கு உதவுகிறவர்கள் இதன் தீமையை உணர வேண்டும்.

இதுபோன்ற உள்ளடக்கங்களை பகிர வேண்டாம், ஊக்குவிக்க வேண்டாம். தொடர்ந்து பரப்பப்படும் எந்த முயற்சியும் சட்டரீதியாக கடுமையாக எதிர்கொள்ளப்படும்,” என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவங்கள், தொழில்நுட்ப வளர்ச்சியுடன் சேர்ந்து சமூக பொறுப்புணர்வு எவ்வளவு முக்கியம் என்பதை நினைவூட்டுகின்றன. நடிகைகள் என்றாலே அவர்கள் பொதுச் சொத்து அல்ல. அவர்கள் தனிப்பட்ட கண்ணியத்துடனும், பாதுகாப்புடனும் வாழ உரிமையுள்ள மனிதர்களே. ரசிகத்தனம், ஆர்வம் என்ற பெயரில் எல்லைகளை மீறுவது எவ்வளவு ஆபத்தானது என்பதையும் இந்த விவகாரம் மீண்டும் ஒருமுறை எடுத்துக் காட்டியுள்ளது.
குறிப்பாக ஏஐ தொழில்நுட்பத்தை கட்டுப்படுத்தும் சட்டங்கள், சமூக வலைதள தளங்களின் பொறுப்பு, பயனர்களின் நெறிமுறை என இவை அனைத்தும் இன்றைய காலகட்டத்தில் அவசரமாக கவனம் செலுத்த வேண்டிய விஷயங்களாக மாறியுள்ளன. இல்லையெனில், தொழில்நுட்ப முன்னேற்றம் மனிதர்களை முன்னேற்றாமல், அவர்களை மனரீதியாகவும் சமூக ரீதியாகவும் பின்னடைவுக்குள் தள்ளும் அபாயம் உள்ளது.

எனவே ஸ்ரீலீலா, நிவேதா தாமஸ் போன்ற நடிகைகள் வெளிப்படையாக பேசத் தொடங்கியுள்ள இந்த தருணம், இந்த பிரச்சனைக்கு எதிரான ஒரு முக்கிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது. இனி இதுபோன்ற டிஜிட்டல் வன்முறைகள் சகஜமாகக் கடந்து போகாமல், கடுமையாக எதிர்கொள்ளப்படும் என்ற நம்பிக்கையையே இது உருவாக்கியுள்ளது.
இதையும் படிங்க: ரோட்டில் நடந்து வந்தது குத்தமா.. நடிகையிடம் அத்துமீறி நடந்துகொண்ட ரசிகர்கள்..! தப்பித்து ஓடி வந்த நிதி அகர்வார்..!