தென்னிந்திய திரையுலகில் தமிழ், தெலுங்கு மொழிகளில் கவனம் ஈர்த்து வரும் நடிகையாக வலம் வருபவர் நிதி அகர்வால். குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள அவர், தற்போது இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தி ராஜா சாப் படத்தின் மூலம் மீண்டும் செய்திகளில் இடம்பிடித்துள்ளார். ஆனால் இந்த முறை படம் தொடர்பான மகிழ்ச்சியான செய்திக்காக அல்ல..
மாறாக, ஒரு பொது நிகழ்ச்சியில் அவர் சந்தித்த கடும் அவமானகரமான அனுபவம் தான் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. பிரபாஸ் நடித்துள்ள தி ராஜா சாப் திரைப்படம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தப் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ள நிலையில், அவர்களின் கூட்டணி குறித்த ஆர்வமும் நாளுக்கு நாள் அதிகரித்தது. இதன் ஒரு பகுதியாக, படத்தின் இரண்டாவது பாடலான “சஹானா சஹானா” பாடல் வெளியீட்டு விழா புதன்கிழமை ஹைதராபாத்தில் உள்ள பிரபலமான லூலூ மாலில் பிரமாண்டமாக நடத்தப்பட்டது. இசையமைப்பாளர் தமன், படக்குழுவினர், ரசிகர்கள் என ஆயிரக்கணக்கானோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
ஆனால் இந்த கொண்டாட்ட நிகழ்ச்சி முடிந்த சில நிமிடங்களிலேயே அங்கு எதிர்பாராத பரபரப்பு ஏற்பட்டது. நிகழ்ச்சி முடிந்து வெளியேறிய நடிகை நிதி அகர்வாலை ரசிகர்கள் கூட்டமாக சூழ்ந்து கொண்டனர். பாதுகாப்பு தடுப்புகளை மீறி பலர் அவரிடம் செல்ஃபி எடுக்க முயன்றதால், அங்கு கட்டுப்பாடற்ற சூழல் உருவானது. கூட்டத்தின் நெரிசலில் நிதி அகர்வால் நகர முடியாமல் திணறியதாகவும், சிலர் அத்துமீறி நடந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ரோட்டில் நடந்து வந்தது குத்தமா.. நடிகையிடம் அத்துமீறி நடந்துகொண்ட ரசிகர்கள்..! தப்பித்து ஓடி வந்த நிதி அகர்வார்..!

இந்த சம்பவத்தின் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. வைரலான வீடியோக்களில், நிதி அகர்வால் மிகுந்த பதற்றத்துடனும், மனஉளைச்சலுடனும் காணப்படுகிறார். தனது துப்பட்டாவை இறுக்கமாக பிடித்தபடி, பாதுகாவலர்களின் உதவியுடன் காரை நோக்கி செல்லும் காட்சிகள் அதில் பதிவாகியுள்ளன. பாதுகாப்பு பணியாளர்கள் கூட்டத்தை தள்ளி விட்டு ஒரு வழியை உருவாக்க முயன்றாலும், ரசிகர்கள் தொடர்ந்து நெருங்கியதால் நிலைமை மேலும் மோசமடைந்தது. இந்த சம்பவம் இணையத்தில் பெரும் கண்டனத்தை எழுப்பியுள்ளது. பலரும் ரசிகர்கள் என்ற பெயரில் இவ்வாறு அத்துமீறி நடப்பது மிகவும் அபாயகரமானது என்றும், இது பெண்களின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய கேள்விக்குறி என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.
“இது ரசிகத்தனம் அல்ல, வெறும் அட்டகாசம்”, “மிகவும் வெட்கக்கேடான செயல்”, “பாதுகாப்பு ஏற்பாடுகள் முற்றிலும் தோல்வியடைந்துள்ளன” போன்ற கருத்துகள் சமூக வலைதளங்களில் குவிந்து வருகின்றன. பல பிரபலங்களும் இந்த விவகாரத்தில் தங்களது கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளனர். பாடகி சின்மயி ஸ்ரீபாதா இந்த சம்பவம் குறித்து கடுமையான வார்த்தைகளில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் தனது எக்ஸ் பதிவில், “ஹயீனாக்களை விட மோசமாக நடக்கும் ஆண்கள் கூட்டம். உண்மையில் ஹயீனாக்களை அவமதிக்க வேண்டாம். ஒரே மனநிலையிலுள்ள ஆண்களை கூட்டமாக விட்டால், அவர்கள் ஒரு பெண்ணை இப்படித்தான் தொந்தரவு செய்வார்கள். ஏன் எந்த கடவுளும் இவர்களை வேறு ஒரு கிரகத்துக்கு அனுப்பிவிடக் கூடாது?” என்று பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவு இணையத்தில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது. இந்த சம்பவம் மீண்டும் ஒருமுறை நடிகைகள் மற்றும் பெண்கள் பொது இடங்களில் சந்திக்கும் பாதுகாப்பு சவால்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. குறிப்பாக மால்கள், திறந்த வெளி மேடைகள் போன்ற இடங்களில் நடக்கும் திரைப்பட நிகழ்ச்சிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் போதிய அளவில் செய்யப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. பிரபல நடிகர்கள், நடிகைகள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் ரசிகர்கள் அதிக அளவில் கூடும் என்பதால், கூடுதல் பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடுகள் அவசியம் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இதுவரை இந்த சம்பவம் குறித்து நிதி அகர்வால் தரப்பிலிருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியாகவில்லை.
இருப்பினும், அந்த வீடியோக்களில் அவரது முகத்தில் தெளிவாக தெரிந்த அச்சமும் கோபமும், அவர் எவ்வளவு பாதிக்கப்பட்டிருப்பார் என்பதை உணர்த்துவதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். “ஒரு நடிகையின் பாதுகாப்பு இப்படியா இருக்க வேண்டும்?”, “பெண்களை மதிக்கும் மனநிலை எப்போது உருவாகும்?” என்ற கேள்விகள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஒலிக்கின்றன. தி ராஜா சாப் படத்தின் பாடல் வெளியீடு கொண்டாட்டமாக நினைவில் இருக்க வேண்டிய நிலையில், இந்த வருத்தமான சம்பவம் அந்த மகிழ்ச்சியை மறைத்துவிட்டதாகவே பலர் கருதுகின்றனர்.

இனி வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், பாதுகாப்பு அமைப்புகள் மட்டுமல்லாது, ரசிகர்களும் தங்களது பொறுப்பை உணர வேண்டும் என்பதே அனைவரின் ஒருமித்த கருத்தாக உள்ளது. நடிகைகளும் பெண்களும் எந்த அச்சமும் இன்றி பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் சூழல் உருவாவதே, இந்த விவகாரத்தில் இருந்து கிடைக்கும் முக்கியமான பாடமாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: கடற்கரையில் கவர்ச்சி கன்னியாக உலா வந்த நடிகை யாஷிகா ஆனந்த்..!