மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் பகத் பாசில், ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் அலெஹான்ட்ரோ கோன்சாலஸ் இனாரிட்டுவின் புதிய ஹாலிவுட் திரைப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டார் என்ற செய்தி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இனாரிட்டு, ‘பேர்ட்மேன்’ மற்றும் ‘தி ரெவனன்ட்’ போன்ற புகழ்பெற்ற படங்களை இயக்கியவர் அலெஹான்ட்ரோ இனாரிட்டு.

இவரது வரவிருக்கும் படத்தில் டாம் குரூஸ் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார், மேலும் சாண்ட்ரா ஹல்லர், ஜான் குட்மேன், ஜெஸ்ஸி பிளமன்ஸ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்தப் படம் 2026 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாக உள்ளது.
இதையும் படிங்க: தொடர்ந்து எழுந்த மோசடி புகார்கள்.. காமெடி நடிகர் பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசன் கைது..!
இந்நிலையில் நடிகர் பகத் பாசில், தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், இனாரிட்டுவுடன் வீடியோ அழைப்பு மூலம் பேசியதாகவும், ஆனால் தனது ஆங்கில உச்சரிப்பு (accent) காரணமாக இந்த வாய்ப்பை நிராகரித்ததாகவும் தெரிவித்தார்.
இந்தப் பாத்திரத்திற்காக அவரது உச்சரிப்பை மேம்படுத்த, மூன்று முதல் நான்கு மாதங்கள் அமெரிக்காவில் தங்கி பயிற்சி எடுக்க வேண்டும் என்று இனாரிட்டு கூறியதாகவும், ஆனால் அதற்கான செலவை படக்குழு ஏற்கவில்லை என்றும் பகத் தெரிவித்தார். “இது அவர்கள் என்னை நிராகரித்தது இல்லை, ஆனால் உச்சரிப்பு ஒரு பிரச்சனையாக இருந்தது. செலவு பற்றிய பிரச்சனை இல்லையென்றால், நான் ஓடியிருப்பேன்,” என்று அவர் கூறினார்.
பெரும்பாலான நடிகர்கள் இப்படி ஒரு வாய்ப்பு வந்தால், அதை தக்கவைத்துக்கொள்ள போராடுவார்கள், கைப்பற்றத் துடித்திருப்பார்கள். ஆனால், தனது உச்சரிப்பை மாற்றிக்கொள்வதற்காக இவ்வளவு மெனக்கெட வேண்டும் என்ற உத்வேகம் தனக்கு வரவில்லை. இதனால், கிடைக்காத வாய்ப்பைப் பற்றி வருத்தப்படாமல், மலையாள சினிமா தனக்கு அளித்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக்கொள்ள நினைத்தேன்.

மலையாள சினிமாவில் தனக்கு கிடைத்த அனுபவங்களே தனது வாழ்க்கையின் மந்திரமாக இருப்பதாகவும், இந்த முடிவில் எந்த வருத்தமும் இல்லை என்றும் பகத் குறிப்பிட்டார். இந்த முடிவு ரசிகர்களிடையே பாராட்டையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தற்போது, பகத் பாசில் ‘ஓடும் குதிரை சாடும் குதிரை’ என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார், இது வரும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி வெளியாக உள்ளது. இவரது இந்த முடிவு, மலையாள சினிமாவின் மீதான அவரது அர்ப்பணிப்பை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சினிமாவிற்கு பின் தனது ஆசையே இதுதான்..! ‘மாரீசன்’ பட நாயகன் பகத் பாசில் வெளிப்படையான பேச்சு..!