தமிழ் திரையுலகில் காமெடி நடிகராகவும், இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் அறியப்படுபவர் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன். 2011ஆம் ஆண்டு ‘லத்திகா’ படத்தின் மூலம் இயக்குனராகவும், நடிகராகவும் அறிமுகமான இவர், சந்தானத்தின் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ (2013) படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றார். ‘கோலி சோடா’, ‘மெர்லின்’, ‘காட்டுப் புறா’ உள்ளிட்ட பல படங்களில் தனது தனித்துவமான நகைச்சுவை பாணியால் ரசிகர்களை கவர்ந்தார்.

மருத்துவராக பணியாற்றி, பின்னர் தொழிலதிபராக வலம் வந்த இவர், சினிமாவில் புகழ் பெற வேண்டும் என்ற ஆர்வத்தால் திரையுலகில் நுழைந்தார். ஆனால், ஸ்ரீனிவாசன் மீது பல மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளன. 2013இல் மத்திய குற்றப்பிரிவு மோசடி குற்றச்சாட்டில் அவரை கைது செய்தது. 2019இல், ராமநாதபுரத்தில் இறால் பண்ணை உரிமையாளர் முனியசாமியிடம் 15 கோடி ரூபாய் கடன் வாங்கித் தருவதாகக் கூறி, 14 லட்சம் ரூபாய் பெற்று, போலி காசோலை வழங்கியதாக வழக்கு தொடரப்பட்டது. இதில் ஆஜராகாததால், 2023இல் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு, 2024 மார்ச்சில் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
இதையும் படிங்க: கால்ஷீட் கொடுத்தும் வேலை தொடங்கல.. ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்கும் நடிகர் ரவி மோகன்..!
இந்நிலையில் கடந்த 2024ஆம் ஆண்டு, டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு 1000 கோடி ரூபாய் கடன் பெற்றுத்தருவதாகக் கூறி, 5 கோடி ரூபாயை பவர் ஸ்டார் பெற்று ஏமாற்றியதாக புகார் எழுந்தது. இதனையடுத்து, டெல்லி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு, இன்று அவரை கைது செய்தனர். மோசடி செய்த பணத்தை திரைப்படம், சொந்த செலவுக்காக பவர் ஸ்டார் பயன்படுத்தி வந்துள்ளார். 2024 டிசம்பரில், சிறுநீரகக் கோளாறு காரணமாக சென்னை கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் 2019 மக்களவை தேர்தலில் தென் சென்னையில் சுயேட்சையாக போட்டியிட்டார்.

2018இல் அவரது மனைவி ஜூலி, ஸ்ரீனிவாசன் காணாமல் போனதாகவும், பின்னர் கடத்தப்பட்டதாகவும் புகார் அளித்திருந்தார். இந்த முறை மோசடி குற்றச்சாட்டு மீண்டும் அவரது பெயரை சர்ச்சையில் இழுத்துள்ளது. தற்போது, கைது நடவடிக்கை குறித்து காவல்துறை மேலதிக விசாரணை நடத்தி வருகிறது.
இதையும் படிங்க: 'சனியன் சகடை' புகழ் கோட்டா ஸ்ரீனிவாசன் இன்று காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!