ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் கீர்த்தி சிங், ஹூண்டாய் நிறுவனத்தின் காரில் உற்பத்தி கோளாறு இருந்ததாகக் கூறி, புகார் ஒன்றை அளித்துள்ளார். அதன் அடிப்படையில் பாலிவுட் நட்சத்திரங்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் உள்ளிட்ட எட்டு பேர் மீது மோசடி பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு, மதுரா கேட் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஹூண்டாய் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடர்களாக விளம்பரங்களில் தோன்றிய ஷாருக்கான் மற்றும் தீபிகா மீது, குறைபாடுள்ள வாகனத்தை விளம்பரப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது. கீர்த்தி சிங் தனது புகாரில், தான் வாங்கிய ஹூண்டாய் காரில் முதல் நாள் முதலே தொழில்நுட்பக் கோளாறுகள் இருந்ததாகவும், பலமுறை புகார் அளித்தும் நிறுவனம் அதை சரிசெய்யவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் சினிமா நட்சத்திரங்கள் கூறியதை நம்பி தான் இதனை வாங்கியதாகவும் கீர்த்தி சிங் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: அமிதாப்பச்சனின் படத்தில் இனி நடிக்க போவதில்லை..! தீபிகா படுகோனே முடிவால் ஆட்டம் கண்ட பாலிவுட்..!
இந்தியாவின் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019-இன் கீழ், தவறான அல்லது ஏமாற்றும் விளம்பரங்களுக்கு பிராண்ட் அம்பாசிடர்களும் பொறுப்பு வகிக்க வேண்டும் என்பதால், இந்த நட்சத்திரங்கள் வழக்கில் சிக்கியுள்ளனர். ஹூண்டாய் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் அன்சோ கிம், முழுநேர இயக்குநர் மற்றும் தலைமை இயக்க அதிகாரி தருண் கார்க், மற்றும் சம்பந்தப்பட்ட ஷோரூம் உரிமையாளர்களும் இந்த வழக்கில் பெயரிடப்பட்டுள்ளனர்.

கீர்த்தி சிங் தனது புகாரை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததை அடுத்து, நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. தற்போது காவல்துறை இந்த வழக்கு குறித்து விசாரணையை தொடங்கியுள்ளது. ஷாருக்கான் 1998 முதல் ஹூண்டாய் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக இருந்து வருகிறார், மேலும் தீபிகா படுகோன் 2023-ல் இணைந்தார். இவர்கள் இருவரும் 2024 ஹூண்டாய் க்ரெட்டா விளம்பரத்தில் இணைந்து நடித்திருந்தனர். இந்த வழக்கு, பிரபலங்களின் விளம்பர பொறுப்புகள் குறித்து முக்கிய விவாதத்தை எழுப்பியுள்ளது.
இதையும் படிங்க: சேலையிலும் கவர்ச்சி குறியாத நடிகை யாஷிகா ஆனந்த்..! இணையத்தை கலக்கும் கிளிக்ஸ்..!