பிரிட்டிஷ் ஹெவி மெட்டல் இசைக்குழுவான பிளாக் சப்பாத்தின் முன்னணி பாடகராக அறியப்பட்ட ஜான் மைக்கேல் “ஓஸி” ஆஸ்பர்ன் (John Michael "Ozzy" Osbourne), தனது 76வது வயதில் காலமானார். “இருண்மையின் இளவரசன்” (Prince of Darkness) என்று புகழப்பட்ட இவர், ஹெவி மெட்டல் இசையின் முன்னோடியாகவும், பிளாக் சப்பாத் இசைக்குழுவின் நிறுவன உறுப்பினராகவும் திகழ்ந்தார்.

1948-ல் இங்கிலாந்தின் பர்மிங்காமில் பிறந்தார் ஆஸ்பர்ன். 1968இல் தொடங்கிய இவரது இசைப்பயணம், Paranoid (1970), Master of Reality (1971), Sabbath Bloody Sabbath (1973) போன்ற ஆல்பங்களால் உலகளவில் புகழ் பெற்றது.
இதையும் படிங்க: பிரபல நகைச்சுவை நடிகர் பிஷ் வெங்கட் காலமானார்.. சோகத்தில் தெலுங்கு திரையுலகம்..!
1979-ல் குழுவிலிருந்து விலகிய பின்னர், தனி பாடகராக "Blizzard of Ozz," "Bark at the Moon" ஆல்பங்களை வெளியிட்டு மகத்தான வெற்றி பெற்றார். அவரது தனித்துவமான குரலும், மேடை நிகழ்ச்சிகளும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தன.
ஆஸ்பர்ன் தனிப்பட்ட வாழ்க்கையில் பல சவால்களை எதிர்கொண்டார், குறிப்பாக போதைப்பழக்கம் மற்றும் உடல்நலப் பிரச்சினைகள். இருப்பினும், அவரது இசைப் பயணம் தொடர்ந்து உலகளவில் ரசிகர்களை ஊக்கப்படுத்தியது. மேலும் Diary of a Madman, No More Tears போன்ற ஆல்பங்கள் அவரது தனித்துவமான குரலையும், ஆற்றல்மிக்க மேடை நிகழ்ச்சிகளையும் உலகறியச் செய்தன.

அதுமட்டுமன்றி 2002இல் MTV தொலைக்காட்சியில் ஒளிபரப்பான The Osbournes என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி, ஓஸியையும் அவரது குடும்பத்தையும் பரவலாக அறிமுகப்படுத்தியது. இந்நிகழ்ச்சி அவரை ஒரு கலாச்சார ஐகானாக மாற்றியது. பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஓஸி, தனது இறுதி நாட்களில் உடல்நலக் குறைவால் அவதிப்பட்டார். இருப்பினும், சமீபத்தில் பிளாக் சப்பாத் உறுப்பினர்களுடன் இணைந்து பர்மிங்காமில் நிகழ்ச்சி நடத்தியிருந்தார்.
ஓஸியின் மறைவு இசை உலகில் பேரிழப்பாகும். அவரது ஆறு குழந்தைகளுக்கும், மனைவி ஷரோன் ஆஸ்பர்னுக்கும் ரசிகர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்து வருகின்றனர். ஆஸ்பர்னின் இசை மற்றும் தாக்கம் அவரது மறைவுக்குப் பின்னும் நீடிக்கும் என்பது உறுதியான ஒன்று..!!
இதையும் படிங்க: பழம்பெரும் இந்தி நடிகர் தீரஜ் குமார் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம்..!