பழம்பெரும் இந்தி நடிகரும், தயாரிப்பாளரும், இயக்குநருமான தீரஜ் குமார் (79) மும்பையில் ஜூலை 15ம் தேதியான இன்று காலமானார். அவருக்கு நிமோனியா மற்றும் மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து, கடந்த சனிக்கிழமை மாலை மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார்.

தீரஜ் குமார் இந்தி திரையுலகில் நடிகராகவும், தொலைக்காட்சி தொடர்களின் தயாரிப்பாளராகவும் முக்கிய பங்காற்றியவர். 1970-களில் ‘ரோட்டி கபடா அவுர் மகான்’ உள்ளிட்ட பல இந்தி படங்களில் நடித்து புகழ்பெற்றார். பஞ்சாபி திரைப்படங்களிலும் நடித்துள்ள தீரஜ் பெரிய பெரிய ஜாம்பவான்களுடன் பணியாற்றியவர். அவரது நிறுவனமான கிரியேட்டிவ் ஐ ஸ்டுடியோஸ் மூலம் ‘நுக்கட்’, ‘ஓம் நமஹ சிவாய்’ போன்ற பிரபலமான இந்தி தொலைக்காட்சி தொடர்களை தயாரித்தார். இவை 1980 மற்றும் 1990-களில் இந்திய பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. இதனால் அவர் தொடர்ந்து சீரியல்களை தயாரித்து வந்தார்.
இதையும் படிங்க: #BREAKING: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்..!
மேலும், ‘சர்க்கார்’ உள்ளிட்ட படங்களில் குறிப்பிடத்தக்க கதாபாத்திரங்களில் நடித்து, தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தினார். இந்த நிலையில் தான் சமீப காலங்களில் அவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தது. நிமோனியாவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், சில நாட்கள் முன்பு மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்துள்ளார். மேலும் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்றும் இந்த கடினமான நேரத்தில் அவரது தனியுரிமையைப் பேண அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்" என்றும் அவரது குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் தீரஜ் குமார் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவரது மறைவு இந்தி திரையுலகிலும், தொலைக்காட்சி துறையிலும் பெரும் இழப்பாக கருதப்படுகிறது. அவரது பங்களிப்புகள் இந்திய பொழுதுபோக்கு துறையில் மறக்க முடியாதவை. அவரது மறைவுக்கு பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் இது பாலிவுட் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தீரஜ் குமாரின் கலைப் பயணம் அவரது ரசிகர்களுக்கு எப்போதும் உத்வேகமாக இருக்கும். அவரது ஆன்மா அமைதி அடைய பிரார்த்திப்போம்.
இதையும் படிங்க: 'சனியன் சகடை' புகழ் கோட்டா ஸ்ரீனிவாசன் இன்று காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!