கேரளாவில் மலையாள திரையுலகின் முக்கிய அமைப்பான அசோசியேஷன் ஆஃப் மலையாள மூவி ஆர்டிஸ்ட்ஸ் (AMMA) தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று கொச்சியில் நடைபெற்றது. இத்தேர்தல், அமைப்பின் முதல் பெண் தலைவராக ஸ்வேதா மேனனையும், பொதுச் செயலாளராக குக்கு பரமேஸ்வரனையும் தேர்ந்தெடுத்து வரலாற்றுச் சிறப்பு மிக்கதாக அமைந்தது. 504 உறுப்பினர்களைக் கொண்ட இந்த அமைப்பில், 290-க்கும் மேற்பட்டோர் வாக்களித்து, அடுத்த மூன்றாண்டுகளுக்கான நிர்வாகக் குழுவைத் தேர்ந்தெடுத்தனர்.

நடிகை ஸ்வேதா மேனன், மூத்த நடிகர் தேவனை எதிர்த்து போட்டியிட்டு பெரும்பான்மை ஆதரவுடன் இந்த முக்கிய பதவியைப் பெற்றார். அதேபோல் குக்கு பரமேஸ்வரன், ரவீந்திரனை தோற்கடித்து பொதுச் செயலாளர் பதவியைப் பெற்றார். உன்னி சிவபால் பொருளாளராகவும், ஜெயன் செர்தலா மற்றும் லட்சுமிபிரியா துணைத் தலைவர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இது, 30 ஆண்டுகால அம்மா அமைப்பின் வரலாற்றில் ஒரு மைல்கல் எனக் கருதப்படுகிறது.
இதையும் படிங்க: நீதித்துறை மீது நம்பிக்கை வையுங்கள்.. நடிகை ரம்யா பரபரப்பு கருத்து..!!
இந்தத் தேர்தல், கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்டில் வெளியான ஹேமா கமிட்டி அறிக்கையைத் தொடர்ந்து, மோகன்லால் தலைமையிலான முந்தைய குழு பாலியல் குற்றச்சாட்டுகள் காரணமாக பதவி விலகியதால் நடத்தப்பட்டது. இந்த அறிக்கை, மலையாள திரையுலகில் பெண்களுக்கு எதிரான பிரச்சினைகளை வெளிப்படுத்தியது, இதனால் AMMA-வில் பெண்களுக்கு முக்கிய பதவிகள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது. மோகன்லால், மம்மூட்டி உள்ளிட்ட மூத்த நடிகர்கள் பெண் தலைமைக்கு ஆதரவு தெரிவித்தனர். ஜகதீஷ் உள்ளிட்ட சிலர் தங்கள் வேட்புமனுக்களை வாபஸ் பெற்று, பெண் வேட்பாளர்களுக்கு வழிவகுத்தனர்.
51 வயதான ஸ்வேதா மேனன், மலையாளம், தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும் கன்னடப் படங்களில் நடித்து புகழ்பெற்றவர். 'சிநேகிதியே', 'நான் அவன் இல்லை 2', 'அரவான்' உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியவர். 1991-ல் 'ஆனஸ்வரம்' படத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக அறிமுகமான இவர், கவர்ச்சி மற்றும் குணச்சித்திர வேடங்களில் முத்திரை பதித்தவர்.
இந்தத் தேர்தலுக்கு முன், ஸ்வேதா மீது ஆபாசக் காட்சிகளில் நடித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு, அவரது வெற்றி வாய்ப்பு கேள்விக்குறியானது. இருப்பினும், கேரள உயர்நீதிமன்றம் இந்த வழக்கை தற்காலிகமாக நிறுத்தி வைத்து, அவரது பதவி ஏற்புக்கு வழிவகுத்தது. ஸ்வேதா இந்த வழக்கை தனக்கு எதிரான சதியாகக் கருதி, சட்டப்படி எதிர்கொள்வேன் எனத் தெரிவித்திருந்தார்.

இந்த வெற்றியின் மூலம், மலையாள திரையுலகில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை வலுப்படுத்துவதற்கு ஸ்வேதா முன்னுரிமை அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்வேதாவின் இந்த வெற்றி, கேரள திரையுலகில் புதிய மாற்றங்களையும், பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் முன்னேற்றங்களையும் கொண்டு வரும் என ரசிகர்களும், திரைத்துறையினரும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: பார்க்கிங் தகராறு.. காலா பட நடிகையின் உறவினர் கொடூரக் கொலை..!