தமிழ் சினிமாவில் தனித்துவமான நகைச்சுவை பாணியால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் யோகி பாபு. 1985 ஜூலை 22-ல் ஆரணியில் பிறந்த இவர், இந்திய தரைப்படையில் அவில்தாராக பணியாற்றிய தந்தையின் காரணமாக சிறுவயதில் பல இடங்களில் பயணித்தார். விஜய் டிவியின் ‘லொள்ளு சபா’ நிகழ்ச்சியில் உதவி இயக்குநராகவும், சிறு வேடங்களில் நடித்தவராகவும் தனது பயணத்தை தொடங்கியவர், 2009-ல் ‘யோகி’ திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். இதன்பின், தனது பெயரை யோகி பாபு என மாற்றிக்கொண்டார்.

‘மான் கராத்தே’, ‘யாமிருக்க பயமே’, ‘காக்கா முட்டை’ போன்ற படங்களில் தனது நகைச்சுவை நடிப்பால் கவனம் ஈர்த்தவர், ‘ஆண்டவன் கட்டளை’, ‘கோலமாவு கோகிலா’, ‘பரியேறும் பெருமாள்’ உள்ளிட்ட படங்களுக்காக ஆனந்த விகடன் விருதுகளையும், ஐந்து சீமா விருதுகளையும் பெற்றுள்ளார். காமெடி மட்டுமல்லாமல், ‘பொம்மை நாயகி’ போன்ற படங்களில் சீரியஸ் கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்தியுள்ளார்.
இதையும் படிங்க: விஜய் மாதிரி வருவார் சூர்யா சேதுபதி.. ட்ரோல் கிங்குக்கு வனிதா வக்காலத்து..!
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, மற்றும் ஹாலிவுட் படங்களில் நடித்து, பான்-இந்திய அளவில் புகழ்பெற்றார். சமீபத்தில், ‘குழந்தைகள் முன்னேற்ற கழகம்’, ‘குட் பேட் அக்லி’, ‘மூன் வாக்’ உள்ளிட்ட படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். 2020-ல் மஞ்சு பார்கவியை திருமணம் செய்த இவருக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.
2025 பிப்ரவரியில் விபத்து குறித்த வதந்திகளை மறுத்து, நலமாக இருப்பதாக அறிவித்தார். நலிந்த நடிகர்களுக்கு நிதியுதவி வழங்கியதற்காகவும் சமூக வலைதளங்களில் பாராட்டப்பட்டார். தனது எளிமையான பண்புகளாலும், திறமையாலும் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நட்சத்திரமாக விளங்குகிறார் யோகி பாபு.
இந்நிலையில் தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக விளங்கும் யோகி பாபு, தெலுங்கு திரைப்படத்துறையில் தனது முதல் நேரடி அறிமுகத்தை ‘குர்ரம் பாப்பி ரெட்டி’ என்ற படத்தின் மூலம் அரங்கேற்றியுள்ளார். இந்தப் படத்தில், தெலுங்கு நகைச்சுவை ஜாம்பவான் பிரம்மானந்தத்துடன் இணைந்து நடித்து, ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார்.
முரளி மனோகர் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் நரேஷ் அகஸ்தியா மற்றும் பரியா அப்துல்லா முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். யோகி பாபு, தமிழ் சினிமாவில் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து, தனித்துவமான நகைச்சுவை பாணியால் புகழ்பெற்றவர். இவர் முன்னதாக ‘ஜெய்ஹிந்த்’ மற்றும் ‘ககி: சவுண்ட் ஆஃப் வார்னிங்’ ஆகிய தெலுங்கு படங்களில் சிறு வேடங்களில் தோன்றியிருந்தாலும், ‘குர்ரம் பாப்பி ரெட்டி’ அவரது முதல் குறிப்பிடத்தக்க தெலுங்கு படமாக அமைந்துள்ளது.

படத்தின் டீசர் அறிமுக விழாவில் பங்கேற்ற யோகி பாபு, பிரம்மானந்தத்துடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியளிப்பதாகக் கூறினார். பிரம்மானந்தம், யோகி பாபுவைப் பாராட்டி, “இவரது அமைதியான தோற்றம் நகைச்சுவை நடிப்பை எதிர்பார்க்க வைக்காது, ஆனால் அற்புதமான நகைச்சுவை நடிகர் இவர்,” என்று குறிப்பிட்டார்.
இந்தப் பாராட்டு, யோகி பாபுவின் திரைப்பயணத்தில் முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது. தமிழ், இந்தி திரையுலகைத் தொடர்ந்து, தெலுங்கு சினிமாவிலும் தனது முத்திரையைப் பதிக்க யோகி பாபு தயாராகிவிட்டார். இப்படம் ரசிகர்களுக்கு நகைச்சுவை விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: மேடையில் வில் ஸ்மித்.. திடீரென ரசிகை வீசிய 'அந்த' பொருள்.. அப்புறம் என்ன ஆச்சு..!!