மதுரையின் புகழ்பெற்ற 108 வைணவ தலங்களில் ஒன்றான திருமாலிருஞ்சோலை (அழகர் மலை) அழகர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுகிறது. இந்த விழாவின் முக்கிய அங்கமான கள்ளழகர் (சுந்தரராஜ பெருமாள்) பயணம் பக்தர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்துகிறது.
இந்த ஆண்டு (2026) அழகர் கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் ஏப்ரல் 27-ம் தேதி (நாளை) அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, சுந்தரராஜ பெருமாள், ஸ்ரீதேவி மற்றும் பூதேவி தேவியருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். மாலையில் தீவட்டி பரிவாரங்களுடன் பெருமாள் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி, தீபாராதனை உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் காணப்படும். அடுத்த நாளும் இதே போன்ற நிகழ்வுகள் தொடரும்.

ஏப்ரல் 29-ம் தேதி மாலை 6.15 மணியளவில் கண்டாங்கி பட்டு அணிந்து, நேர்கம்பு ஏந்திய கள்ளழகர் சப்பரத்தில் எழுந்தருளுவார். 18-ம் படி கருப்பணசாமி சன்னதிக்கு முன் சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின்னர், மலையிலிருந்து மதுரை நோக்கி புறப்படுவார். வழிநெடுகிலும் கிராம மக்கள் பக்தி பரவசத்துடன் கள்ளழகரை வரவேற்று தரிசனம் செய்வார்கள். ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த புனித பயணத்தில் கலந்துகொள்வார்கள்.
இதையும் படிங்க: இன்றைய ராசிபலன் (25-04-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு உணவு பழக்கத்தில் சற்று கவனம் தேவை..!!
ஏப்ரல் 30-ம் தேதி காலை 6.30 மணிக்கு மதுரை மூன்று மாவடி பகுதியில் எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெறும். மதுரை மக்கள் பெருமாளை உற்சாகமாக எதிர்கொண்டு வரவேற்பார்கள். அதே நாள் இரவு 8.30 மணிக்கு தல்லாக்குளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் திருமஞ்சனம் நடைபெறும். அப்பகுதி முழுவதும் விழாக்கோலம் பூண்டிருக்கும். மே 1-ம் தேதி அதிகாலை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிய மாலையை அணிந்துகொண்டு கள்ளழகர் வைகை ஆற்றுக்கு புறப்படுவார்.
அதிகாலை 3 மணியளவில் தல்லாகுளம் கருப்பணசாமி கோவில் எதிரே ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளி, பின்னர் தங்க குதிரை வாகனத்தில் பக்தர்கள் புடைசூழ வைகை ஆற்றை நோக்கி செல்வார். கோவிந்தா கோஷம் முழங்க, காலை 5.35 மணி முதல் 5.55 மணி வரை கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் புனித நிகழ்வு நடைபெறும். இதைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் ஆற்றங்கரையில் திரள்வார்கள். பிற்பகலில் ராமராயர் மண்டபத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும், இரவில் வண்டியூர் வீரராகவ பெருமாள் கோவிலில் எழுந்தருளும் நிகழ்வும் உள்ளது.

மே 2-ம் தேதி காலை வண்டியூர் தேனூர் மண்டபத்தில் சேஷ வாகனம் மற்றும் கருட வாகனம் நிகழ்ச்சிகள் நடைபெறும். மண்டூக முனிவருக்கு சாபம் தீர்த்தல் நிகழ்வும் இதில் இடம்பெறும். இரவு 10 மணிக்கு ராமராயர் மண்டபத்தில் தசாவதார அலங்காரம் பக்தர்களை கவரும். மே 3-ம் தேதி அனந்தராயர் பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகர், இரவு திருமஞ்சனத்துக்குப் பின் மே 4-ம் தேதி அதிகாலை பூப்பல்லக்கில் அழகர் மலைக்கு திரும்புவார்.
மே 5-ம் தேதி காலை கோவிலை வந்தடைவார். இந்த பயணத்தில் கள்ளழகர் 490க்கும் மேற்பட்ட மண்டபங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். கோவில் நிர்வாகம் பாதுகாப்பு, போக்குவரத்து மற்றும் கூட்ட நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. சித்திரை திருவிழா சைவ-வைணவ ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் மீனாட்சி திருக்கல்யாணத்துடன் இணைந்து நடைபெறும் இந்த விழா, மதுரையின் பாரம்பரியத்தை உயிர்ப்புடன் வெளிப்படுத்துகிறது.