திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடாக விளங்குகிறது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச திருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு தைப்பூச திருவிழா நாளை ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 1) மிகுந்த பக்தி சிரத்தையுடன் நடைபெறவுள்ளது.

இதையொட்டி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இன்று (சனிக்கிழமை) கோயிலை நோக்கி பெருந்திரளாக வந்தடைந்தனர். பலர் அலகு குத்தி, பால்குடம் தூக்கி, காவடி எடுத்து வந்து முருகனை வழிபட்டனர். அதிகாலை முதலே கடல் தீர்த்தத்திலும், நாழிக்கிணறு புனித நீரிலும் நீராடி, பக்தி மழையில் நனைந்து, சாமி தரிசனத்துக்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
இதையும் படிங்க: மருதமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா ஏற்பாடுகள் தீவிரம்..!! பக்தர்களுக்கு இதற்கு தடை..!!
சிலருக்கு தரிசனத்துக்காக 5 மணி நேரத்துக்கும் மேலாகக் காத்திருக்க நேரிட்டது. இருப்பினும், அவர்களின் முகத்தில் எந்தக் களைப்பும் தெரியவில்லை; மாறாக, முருகனைத் தரிசிக்கும் ஆவலும் மகிழ்ச்சியுமே தெரிந்தது. நாளை தைப்பூச திருவிழாவை முன்னிட்டு கோயில் நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
பூஜை நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடைபெறும். 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 8.30 மணிக்கு தீர்த்தவாரி, 10 மணிக்கு சண்முகர் அபிஷேகம் ஆகியவை நடைபெறும். பகல் 1 மணிக்கு சுவாமி அலைவாயுகந்த பெருமான் தைப்பூச மண்டபத்துக்கு புறப்படுவார். மாலை 5 மணிக்கு தனித் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி, வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
அதன் பின்னர் மற்ற கால பூஜைகள் தொடரும். இதற்கிடையே, இன்று கோயிலில் மிக முக்கிய நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. சுவாமி சண்முகர் கடலில் கண்டெடுக்கப்பட்டதன் 371-வது ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. கோயில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. 5.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 10 மணிக்கு சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், 5 மணிக்கு சுவாமி வீதி உலாவும் நடந்தது. தைப்பூச திருவிழாவின் முக்கியத்துவத்தால், பக்தர்கள் தொடர்ந்து குவிந்து வருகின்றனர். கோயில் சுற்றுப்பகுதிகளில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுவதால், போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது. திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் பக்தர்களுக்கு அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: மருதமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா ஏற்பாடுகள் தீவிரம்..!! பக்தர்களுக்கு இதற்கு தடை..!!