முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவதாக விளங்கும் திருச்செந்தூர் கடற்கரை கோவிலில், ஆண்டுதோறும் கொண்டாடப்படும் மஹா கந்த சஷ்டி திருவிழா இன்று அதிகாலையில் யாகசாலை பூஜைகளுடன் சிறப்பாகத் தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடியிருந்த நிலையில், வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட யாகசாலையில் நடைபெற்ற பூஜைகள் பக்தர்களை ஆனந்தத்தில் ஆழ்த்தின.

இன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் என வேல் கொண்ட சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்களுடன் பூஜைகள் தொடங்கின. 5.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலைக்குப் புறப்பட்டு, வேத மந்திரங்கள், யாக நடைபடிகளுடன் பூஜை நிறைவுற்றது. இதையடுத்து காலை 7 மணியளவில் யாகசாலை பூஜையுடன் கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது. தொடர்ந்து மூலவருக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.
இதையும் படிங்க: கந்த சஷ்டி விரதம் நாளை ஆரம்பம்..!! திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஏற்பாடுகள் தீவிரம்..!!
இந்தத் திருவிழா 12 நாட்கள் நீடிக்கிறது. முதல் ஐந்து நாட்கள் சஷ்டி விரதம், ஆறாம் நாள் சூரசம்ஹாரம், அதன்பின் முருகன்-தெய்வானை திருக்கல்யாணம், அடுத்த ஐந்து நாட்கள் ஊஞ்சல் சேவை என பிரம்மாண்டமான நிகழ்வுகள் தொடரும். குறிப்பாக, சூரசம்ஹாரம் அக்டோபர் 27 அன்று மாலை 4.30 மணிக்கு கடற்கரையில் நடைபெறவுள்ளது, இது விழாவின் உச்சகட்டமாக அமையும். திருக்கல்யாணம் அக்டோபர் 28 அன்று நடக்கிறது.
விழாவை முன்னிட்டு கோவில் நிர்வாகம் தீவிரமான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. 7 நாட்களுக்கு ரூ.100 கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது, இதனால் பக்தர்கள் இலவசமாகத் தரிசனம் செய்யலாம். தற்காலிக குடில்கள், குடிநீர், கழிப்பறை வசதிகள், போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திருச்செந்தூர்-தூத்துக்குடி சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளதால், போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடலில் புனித நீராடும் பக்தர்கள் ஆழமான பகுதிக்கு செல்லாத வகையில் கடலில் தடுப்பு மிதவைகள் போடப்பட்டுள்ளன.

முருக பக்தர்கள் ஆர்வத்துடன் கோவிலுக்கு வந்து விரதம் இருக்கின்றனர். முருகனுக்கு அரோகரா என அழைப்பது, கந்த சஷ்டி கவசம் பாடுவது, யாகசாலை அருகில் கூடி பக்தி பாடல்கள் பாடுவது என ஆன்மீகப் பிரம்மாண்டம் நிலவுகிறது. இந்த விழா முருகனின் சூர வதம், தெய்வானை திருமணம் என புராணக் கதைகளை நினைவூட்டி, பக்தர்களுக்கு ஆனை அளிக்கிறது. திருச்செந்தூர் கோவில், கடற்கரையில் அமைந்து, சிவபெருமானின் ஞான ஸ்தலமாகப் புகழ்பெற்றது. இங்கு நடைபெறும் விழாக்கள் தமிழகம் முழுவதும் பக்தர்களை ஈர்க்கின்றன.
இதையும் படிங்க: கந்த சஷ்டி விரதம் நாளை ஆரம்பம்..!! திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஏற்பாடுகள் தீவிரம்..!!